பக்கங்கள்

Showing posts with label இமாம் அன்வர் அவ்லகி. Show all posts
Showing posts with label இமாம் அன்வர் அவ்லகி. Show all posts

September 3, 2010

25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி

எந்த அமலும் வீணாகாது

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,

"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்."(திருமறை 18:30)

விளக்கவுரை:
சில சமயம் நமக்கு நாம் செய்கின்ற அமல்களால் நேரம் வீணாவதைத் தவிர வேறெதுவும் பயனில்லை என்றே தோன்றும். உதாரணத்திற்கு நீங்கள் யாரேனும் ஒரு முஸ்லிமல்லாதவருக்கு தாவாஹ் (இஸ்லாமிய அழைப்புப் பணி) செய்கின்றீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் அந்த மனிதரிடம் காணாமல் போகலாம் அல்லது அவர் அத்தனை காலமும் செவிமடுக்காதவரைப் போன்றே தோன்றலாம். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில், அல்லாஹ்வின் முன் எண்ணிக்கை பெரிதல்ல, நிய்யத்துதான் முக்கியம். வெற்றி என்பது நேர்மையான நிய்யத்தைக் கொண்டே வரும். தவிர உங்கள் அமல் வீணும் ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்," என்னை வானுலகிர்கு கொண்டு செல்லும்போது நான் ஒரு நபியினை கண்டேன், அவருடன் பத்து பேர் மட்டுமே (ந‌ம்பிக்கையாளர்கள்) இருந்தனர்; ஒரு நபியுடன் ஐந்து பேர் மட்டுமே, ஒரு நபியுடன் இரண்டு பேர் மட்டுமே, இன்னும் சில நபிமார்களுடன் ஒரே ஒரு நம்பிக்கையாளனும், இன்னும் சில நபிமார்கள் ஒரு நம்பிக்கையாளன் கூட தம்முடன் இல்லாத நிலையில் இருந்தனர்." இந்த ஹதீத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த நபிமார்கள் தோல்வியடையவில்லை, மாறாக அவர்களின் மக்கள்தாம் அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர். இதுபோலவே அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா உங்களின் எந்த அமலையும் வீணாக விடமாட்டான். மாறாக, உங்களின் முயற்சிகளுக்கு அதற்குரிய கூலியைவிட மேலான‌தையே தருவான்.

என்னுரை:
நம்மில் பலபேரும் செய்கின்ற தவறையே இங்கே இமாமவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நம்முடைய கூலியை உடனே எதிர்பார்ப்பதும், நாம் செய்த அமலுக்கான பாதிப்பையோ அதனால் வரவேண்டிய மாற்றத்தையோ கொண்டு நம்மின் அமலை எடை போடுவது நம‌க்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் உண்மை அதுவல்ல. அல்லாஹ் மட்டுமே நம்மின் உண்மையான, நேர்மையான அமலுக்கு கூலி என்ன என்பதை அறிவான். ஒரு விஷயத்தை நாம் உற்று நோக்கினால் நபிமார்களின் சரிதங்களிலிருந்து எத்தனையோ அத்தாட்சிகளைக் காணலாம். நபி இப்றாஹீம்(அலைஹ்), அவர்களின் அழைப்புக்கு அவரின் தந்தை செவிமடுக்கவே இல்லை. நபிகள் நாயகத்தை (ஸல்) அவரின் தாய் தந்தைக்குப் பிறகு அவரை பொறுப்பாய் பார்த்துக் கொண்ட அவரின் சின்ன தந்தையார் அபூதாலிப் கூட‌ மரணிக்கும் வரை நபிகளாரின் அழைப்பை ஏற்கவில்லை. லூத் நபியின் காலத்தில் அவரின் மனைவியே ஓரிறை வழிபாடை ஏற்க மறுத்தார். இன்னும் பற்பல அத்தாட்சிகள் கிட்டிடும் நமக்கு. ஆனால் எந்த நபியையும் அல்லாஹ் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர் என்று கூறவில்லை. மாறாக அவர்களை கண்ணியத்துடனும் மிக்க மரியாதையுடனுமே தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். தவிர அவர்களின் கூலியை எள்ளவுக்கும் குறைக்க மாட்டான். நபிமார்களுக்கு மட்டுமல்ல. அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிர்நோக்கி எந்த முஃமின் ஒரு நல்லமலை செய்தாலும் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் அதற்கான கூலியை குறையாமல் தருவான். நாம் அத்தகைய நேர்மையான நிய்யத்துக்களுடன் அமல் செய்வதில் மட்டும் நம் நாட்டத்தை திசை திருப்புவோமாக.
read more "25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி"

September 2, 2010

25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி

அவர்களின் (முஃமின்களின்) மேல் நேசத்தை ஏற்படுத்துவான்.

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்."(திருமறை 19:96)

விளக்கவுரை:
திருக்குர்'ஆனிற்கு விளக்கவுரை எழுதும் ஆசிரியர்கள் கூறுவது என்னவெனில் நீங்கள் உங்களின் உள்ளத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புகையில், அல்லாஹ் முஃமின்களின் இதயத்தை உங்களை நோக்கி திரும்ப வைக்கின்றான்.

இன்னுமொரு பொன்மொழி என்னவெனில், "நீவிர் மக்களை இன்பப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வை கோபப்பட வைத்தால் அல்லாஹ் உங்கள் மீது கோபம் கொள்வதோடு மட்டுமல்லாமல் உலகமக்களையும் உங்கள் மேல் கோபம் கொள்ள வைப்பான். நீங்கள் அல்லாஹ்வின் மகிழ்ச்சியை பெறவேண்டி உலக மக்களின் வெறுப்பை சம்பாதித்தால் அல்லாஹ் உங்களிடம் அன்பு கொள்வதோடு உலக மக்களையும் உங்களிடம் நேசம் கொள்ளச் செய்வான்."

நம்முடைய தேவை இதுதான், முஃமின்களின் இதயம் நம்மிடம் நேசம் கொள்ளவேண்டும். எனவே அல்லாஹ்வை நேசியுங்கள். அல்லாஹ் அவனின் அடியான்கள் உங்களை நேசிக்க வைப்பான். இந்த நேசமானது அல்லாஹ்விடம் நேர்மையாய் உண்மையாய் இருக்கும் முஃமின்களிடமிருந்து மட்டுமே. முஸ்லிமல்லாதவர்களோ அல்லது நேர்மையற்ற வெறும் பேச்சுக்கென வாழும் முஸ்லிம்களிடமிருந்தோ அல்ல.

என்னுரை:
பாவமன்னிப்பு தேடுவதிலும், அல்லாஹ்வின் அருகாமையை தேடுவதிலும் மிக முக்கியமான ஒரு படி எதுவெனில் அவனை நேர்மையுடன், ஒழுங்குடன், மனத்தூய்மையுடன் துதிக்கும் முஃமின்களின் நேசத்தை பெறுவது. அவர்களின் கூட்டங்களில் பங்கு கொள்வதே நமக்கு பேராதாயமாகும். உலக மக்களுக்காக அல்லஹ்வையும் அவனின் மார்க்கத்தையும் சமரசம் செய்து கொள்ளும் பல பேரை இன்றைய உலகில் நாம் காணமுடியும். அவர்களின் முகத்தில் ஒளிரும் நூரைக் கொண்டே அல்லஹ்விடம் அவர்களின் மதிப்பை தெரிந்துகொள்ள முடியும். எனவே அல்லாஹ்வின் வாக்குறுதிகள் உங்கள் வாழ்விலும் ஈடேற வேண்டுமென்றால், அவனின் அருகாமையும் பாவ்மன்னிப்பும், சுவனமும் கிட்ட வேண்டுமென்றால், நல்மக்களின் தோழமையை பெறுங்கள். அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடுங்கள். உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம்மை அவன் விரும்புவோரின் பட்டியலிலும், அவனின் உண்மையான அடியான்கள் விரும்புவோரின் பட்டியலிலும் நம்மை வைப்பானாக. ஆமீன்.



.
read more "25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி"

September 1, 2010

25 வாக்குறுதிகள் - எட்டாம் வாக்குறுதி

அல்லாஹ் தீமையை முற்றிலும் அழிப்பான்.

அல்லாஹு சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்." (திருமறை 29:7)
விளக்கவுரை:
அல் ஜன்னாஹ் (அ) சுவனம் என்பது தூய்மையான இடமாகும். எனவே தூய்மையான மக்களை மட்டுமே அதில் அனுமதிக்கப்படும். தூய்மையற்றவர்கள் இதி போக இயலாது.

ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே. இதில் பாவத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் என எவரும் இலர். நாமெல்லோருமே தீங்கிழைத்து தீங்கிழைத்து நம் ஆன்மாவில் அழுக்கேற்றியவர்கள்தான், நம்மில் ஒவ்வொருவருமே எனில் நாம் எவ்வாறு இந்த பாவங்களை துடைத்துவிட்டு தூய்மையாக முடியும்?

கீழ்க்கண்ட வழிகளின் மூலமாக நாம் தூய்மை அடையலாம்.
  • தவ்பா (பாவமன்னிப்பு தேடுதல்)
  • இஸ்திக்ஃபார் (அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பை எதிர்நோக்குதல்)
  • நோய்கள் கூட பாவங்களிலிருந்து நம்மை தூய்மைபடுத்தும், அந்த நேரத்தில் பொறுமையை கைக்கொண்டால்.
  • அதே போல் இன்னல்களும் துயரங்களும் இன்னும் அனைத்து ஃபித்னாக்களையும் பொறுமையுடனும் இறைதிருப்தியுடனும் சந்திக்கும்போது நம் பாவங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
எவ்வாறு நோக்கினும் நம் பாவங்களை கழுவிட ஓர் செயல்முறை அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் வழிமுறை வேண்டும். அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான அடியான்கள் இருக்கின்றனர். அல்லாஹ் அவனின் ரஹமத்தை அவர்கள் மீது காட்ட விழையும்போது இவ்வுலகில் (அந்த அடியான்களின்) பாவத்தை மறைத்துவிடுகின்றான், அதே போல் மறுமையிலும் அப்பாவங்களை மறைத்துவிடுகின்றான். ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறினார்கள்," ஒரு மனிதனை தீர்ப்பு அளிக்கப்படும் அந்நாளில் அழைத்து வரப்படும். அவன் முழங்கால்கள் பதற்றத்தில் நிலைகுலைந்து ஆடிக் கொண்டிருக்கும், அந்நேரத்தில் அவனின் ஏடு அவன் முன் கொண்டுவரப்படும். அவனுக்கு தான் செய்த குற்றங்கள் தெரியும், ஏட்டினை படித்துக் கொண்டே போவான், அனைத்து பாவங்களும் அதில் பதியப் பெற்றிருப்பதை காண்பான், சில பெரிய பாவங்களைத்தவிர. எனவே அவன் அல்லாஹ்வை நோக்கி, யா அல்லாஹ் என்னுடைய சில பாவங்களை நான் இந்த ஏட்டில் காண‌வில்லையே என்பான். அல்லாஹ் சுப்ஹானஹுவதஆலா கூறுவான், என் அடியானே, நான் உலகிலும் உன்னுடைய அந்த பாவங்களை மன்னித்து வைத்தேன், இன்று மறுமையிலும் அதை உனக்காக மறைத்துவிட்டேன் என்பான்.

ஒரு அடியான் தன் மேல் 'ஸித்ர்' (பாவங்களை மறைக்கும் திரை) இட்டு தன்னை பாதுகாக்கும் வரை அல்லாஹ்வும் அவனின் ஸித்ரை பாதுகாப்பான். எனவே ஒரு பாவம் அல்லது தீங்கு செய்துவிட்டீர்களென்றால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள், இஸ்தக்ஃபார் செய்யுங்கள், அந்த பாவத்தை விட்டுவிட்டு முன்னேறிச் செல்லுங்கள். அல்லாஹ்விடம் நேர்மையுடன் இஸ்தக்ஃபார் செய்திருந்தாலும், பாவத்தை விட்டுவிடும் நோக்கத்துடன் தவ்பா செய்திருந்தாலும் அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிக்க தயாராக இருப்பான்.

என்னுரை:
நம்மில் பல பேர் செய்கின்ற பெரிய தப்பு என்னவெனில், செய்த பாவத்தை விளையாட்டாகவோ அல்லது அதற்கு பரிகாரம் தேடும் சாக்கிலோ அல்லது என்ன செய்வதென்றே தெரியாமலோ எல்லோரிடமும் சொல்லிவிடும் வேலையை செய்கிறோம். பாவத்திற்கு இட வேண்டிய திரையை நாமே அழித்து விடுகின்றோம். இதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. பாவத்தை விட மனம் கொள்வதும், செய்த பாவத்தினை அல்லாஹ்விடம் மட்டுமே சொல்லி பாவமன்னிப்பு தேடுவதும், அதனை விட்டு விலகுவதுமே நம்மை தூய்மடைய செய்யும். எனவே அல்லாஹ் நம்மை தூய்மையாக்க முயற்சிக்கையில் நாமும் தூய்மையடைய மனதார விரும்புவோம். இன்ஷா அல்லாஹ் இந்த ரமதானில் அல்லாஹ் நம்மை தூய்மைபடுத்த நாம் எடுக்கும் முயற்சிகளில் கை கொடுப்பானாக. ஆமீன்.




.
read more "25 வாக்குறுதிகள் - எட்டாம் வாக்குறுதி"

August 27, 2010

25 வாக்குறுதிகள் - முதல் வாக்குறுதி


சுவர்க்கம் - ஜன்னாஹ்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்,

நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (திருமறை 2:25)


இமாம் தரும் விளக்கவுரை:
அல்லாஹ் தரும் இந்த ஒரு வாக்குறுதியே முஃமின்களுக்கு போதுமானது. மீதம் உள்ள 24 வாக்குறுதிகளைப் பற்றி எண்ணக் கூட அவகாசம் தராத அளவிற்கு இந்த வாக்குறுதி போதுமானது. ஏனெனில், இந்த வாக்குறுதி சுவர்க்கத்தைப் பற்றியதாகும். சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் நம்முடைய தகுதிக்கு மித மிஞ்சினதாகும். இதை யாரும் மறுக்க இயலாது.

என்னுரை:
சுவர்க்கம் எளிதில் கிடைத்துவிடக் கூடிய ஒன்றல்ல. மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய ஒன்றாகும். அல்லாஹ்விடமிருந்து இந்த நற்கூலியைப் பெற நாம் கடினமாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பானது, ஈமானை ஒத்ததாகவும், ஷரீ'அத்திற்கு உடன்பட்டதாகவும், ஹலாலான முறையிலும் இருத்தல் வேண்டும். அமல்களில் சிறந்தவை பற்றியும் அதை இன்னும் சிறப்பாக செய்யவும் ஏராளமான ஹதீத்துக்களும் சஹாபாக்களின் வாழ்க்கைமுறையுமே நமக்கு கற்று தரும். எனவே அவ்வித புத்தகங்களை தேடி படித்து நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோமாக, இன்ஷா அல்லாஹ்.



.
read more "25 வாக்குறுதிகள் - முதல் வாக்குறுதி"

அல்லாஹ் மூஃமின்களுக்கு தரும் 25 வாக்குறுதிகள்


பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

அன்பான சகோதர சகோதரிகளே...

மேன்மைமிகு ரமதான் மாதம் ஆரம்பித்து கிட்டத்தட்ட கடைசி பத்தின் அருகிலும் வந்துவிட்டோம். ஈமானின் ஒரு தூணான நோன்பிற்கு இருக்கும் அனைத்து நற்கூலிகளைப் பற்றியும், அதன் மேன்மைகளைப் பற்றியும் இன்ஷா அல்லாஹ் நீங்கள் அதிகமதிகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. இந்த பகுதியில் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு, மூஃமின்களுக்கு திருக்குர்'ஆன் மூலம் வாக்குறுதி அளிக்கும் 25 வாக்குறுதிகளைக் காண்போம். இந்த பதிவானது, இமாம் அன்வர் அவ்லகியின் (ஹாஃபிதுஹுல்லாஹ்) பயானிலிருந்து எடுக்கப்பட்டது. ஒலி வடிவத்திலிருந்து அழகாய் ஆங்கிலத்தில் எழுத்து வடிவில் பதிந்த சகோதரருக்கும் நன்றி. இன்ஷா அல்லாஹ்...இந்த பதிவு, இன்னும் அதிகமாக ஈமான் கொள்ள வைப்பதற்கும் அதன் மேல் இன்னும் அதிகமாக அமல் செய்ய தூண்டவும் துணை செய்யும் நோக்கத்துடனே இங்கு பதிக்கப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் அவ்வாறே பயன் தர து'ஆ செய்யவும்.

இமாம் அன்வர் அவ்லகி(ஹாஃபிதுஹுல்லாஹ்) அவர்கள் தன்னுடைய பயானில் இந்த வாக்குறுதிகளெல்லாம் அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா ஈமான் கொண்டவர்களுக்காக அளிக்கும் வாக்குறுதிகள் என்றும், இன்னும் பல வாக்குறுதிகள் பொறுமை காப்பர்களுக்கும் அல்லது அதிக தக்வா உடையவர்களுக்கும் என வகை வகையாக இருக்கின்றது, எனினும் இந்த 25 வாக்குறுதிகள் ஈமான் கொண்டவர்கள் (அல் முஃமினூன்) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்டது என்று கூறுகிறார். எனவே மற்ற வாக்குறுதிகளைப் பற்றி இங்கே நாம் காண மாட்டோம். இன்ஷா அல்லாஹ் அதற்கும் அல்லாஹ் வழி காட்டுவானாக. ஆமீன்.


கவனிக்க:
  • குர்'ஆன் ஆயத்துக்களின் தமிழாக்கத்தை தமிழில் குர்'ஆன் தளத்திலிருந்து உபயோகித்துள்ளேன். ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும். இன்னும் அழகிய தமிழாக்கம் வேறு ஏதேனும் தளத்தில் இருந்தாலும் தெரிவிக்கவும், இன்ஷா அல்லாஹ்.
  • குர்'ஆன் வசனங்களின் கீழ் காணும் எல்லா விளக்கங்களும் இமாம் அன்வர் அவ்லகியினுடையது(ஹாஃபிதுஹுல்லாஹ்) ஆகும். தமிழாக்கம் படுத்தும்போது சில சொற்றொடர்களோ அல்லது வார்த்தைகளோ மாற்றம் தருமாயின் அது என்னை சாரும். தயவு செய்து சுட்டிக் காட்டவும்.
  • அல்லாஹ் ஒரு வாக்குறுதி அளித்தால் அது நடந்தே தீரும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா கூறுகின்றான்,
(இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான். (திருமறை 39:20)
மேலும் இன்னுமோர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்,
அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன். (திருமறை 31:9)
  • எனவே எவருக்கேனும் இந்த வாக்குறுதிகள் அவர்கள் வாழ்வில் நடக்கவில்லையே என்று கவலையோ சந்தேகமோ இருந்தால், தன்னுடைய ஈமானை சோதித்துக் கொள்ள வேண்டும். அதன்மேல் செய்யும் அமலை பரிசீலிக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதியில் எவ்வித குறைகளும் இருப்பதில்லை. மாறாக நம்முடைய ஈமானே குறைகளுடையது. இதை அனைவரும் உண‌ர்ந்து கொள்ள வேண்டும்.
  • அல்லாஹ் நம் அனைவரையும் அந்த அளவிற்கு உயர்ந்த ஈமான் கொண்டவர்களாக வாழவும் அதே ஈமானுடன் இறப்பதற்கும் அருள் செய்வானாக ஆமீன். ஆமீன். யா ரப்பில் ஆலமீன்.


.
read more "அல்லாஹ் மூஃமின்களுக்கு தரும் 25 வாக்குறுதிகள்"