பக்கங்கள்

September 1, 2010

25 வாக்குறுதிகள் - எட்டாம் வாக்குறுதி

அல்லாஹ் தீமையை முற்றிலும் அழிப்பான்.

அல்லாஹு சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்." (திருமறை 29:7)
விளக்கவுரை:
அல் ஜன்னாஹ் (அ) சுவனம் என்பது தூய்மையான இடமாகும். எனவே தூய்மையான மக்களை மட்டுமே அதில் அனுமதிக்கப்படும். தூய்மையற்றவர்கள் இதி போக இயலாது.

ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே. இதில் பாவத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் என எவரும் இலர். நாமெல்லோருமே தீங்கிழைத்து தீங்கிழைத்து நம் ஆன்மாவில் அழுக்கேற்றியவர்கள்தான், நம்மில் ஒவ்வொருவருமே எனில் நாம் எவ்வாறு இந்த பாவங்களை துடைத்துவிட்டு தூய்மையாக முடியும்?

கீழ்க்கண்ட வழிகளின் மூலமாக நாம் தூய்மை அடையலாம்.
  • தவ்பா (பாவமன்னிப்பு தேடுதல்)
  • இஸ்திக்ஃபார் (அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பை எதிர்நோக்குதல்)
  • நோய்கள் கூட பாவங்களிலிருந்து நம்மை தூய்மைபடுத்தும், அந்த நேரத்தில் பொறுமையை கைக்கொண்டால்.
  • அதே போல் இன்னல்களும் துயரங்களும் இன்னும் அனைத்து ஃபித்னாக்களையும் பொறுமையுடனும் இறைதிருப்தியுடனும் சந்திக்கும்போது நம் பாவங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
எவ்வாறு நோக்கினும் நம் பாவங்களை கழுவிட ஓர் செயல்முறை அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் வழிமுறை வேண்டும். அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான அடியான்கள் இருக்கின்றனர். அல்லாஹ் அவனின் ரஹமத்தை அவர்கள் மீது காட்ட விழையும்போது இவ்வுலகில் (அந்த அடியான்களின்) பாவத்தை மறைத்துவிடுகின்றான், அதே போல் மறுமையிலும் அப்பாவங்களை மறைத்துவிடுகின்றான். ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறினார்கள்," ஒரு மனிதனை தீர்ப்பு அளிக்கப்படும் அந்நாளில் அழைத்து வரப்படும். அவன் முழங்கால்கள் பதற்றத்தில் நிலைகுலைந்து ஆடிக் கொண்டிருக்கும், அந்நேரத்தில் அவனின் ஏடு அவன் முன் கொண்டுவரப்படும். அவனுக்கு தான் செய்த குற்றங்கள் தெரியும், ஏட்டினை படித்துக் கொண்டே போவான், அனைத்து பாவங்களும் அதில் பதியப் பெற்றிருப்பதை காண்பான், சில பெரிய பாவங்களைத்தவிர. எனவே அவன் அல்லாஹ்வை நோக்கி, யா அல்லாஹ் என்னுடைய சில பாவங்களை நான் இந்த ஏட்டில் காண‌வில்லையே என்பான். அல்லாஹ் சுப்ஹானஹுவதஆலா கூறுவான், என் அடியானே, நான் உலகிலும் உன்னுடைய அந்த பாவங்களை மன்னித்து வைத்தேன், இன்று மறுமையிலும் அதை உனக்காக மறைத்துவிட்டேன் என்பான்.

ஒரு அடியான் தன் மேல் 'ஸித்ர்' (பாவங்களை மறைக்கும் திரை) இட்டு தன்னை பாதுகாக்கும் வரை அல்லாஹ்வும் அவனின் ஸித்ரை பாதுகாப்பான். எனவே ஒரு பாவம் அல்லது தீங்கு செய்துவிட்டீர்களென்றால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள், இஸ்தக்ஃபார் செய்யுங்கள், அந்த பாவத்தை விட்டுவிட்டு முன்னேறிச் செல்லுங்கள். அல்லாஹ்விடம் நேர்மையுடன் இஸ்தக்ஃபார் செய்திருந்தாலும், பாவத்தை விட்டுவிடும் நோக்கத்துடன் தவ்பா செய்திருந்தாலும் அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிக்க தயாராக இருப்பான்.

என்னுரை:
நம்மில் பல பேர் செய்கின்ற பெரிய தப்பு என்னவெனில், செய்த பாவத்தை விளையாட்டாகவோ அல்லது அதற்கு பரிகாரம் தேடும் சாக்கிலோ அல்லது என்ன செய்வதென்றே தெரியாமலோ எல்லோரிடமும் சொல்லிவிடும் வேலையை செய்கிறோம். பாவத்திற்கு இட வேண்டிய திரையை நாமே அழித்து விடுகின்றோம். இதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. பாவத்தை விட மனம் கொள்வதும், செய்த பாவத்தினை அல்லாஹ்விடம் மட்டுமே சொல்லி பாவமன்னிப்பு தேடுவதும், அதனை விட்டு விலகுவதுமே நம்மை தூய்மடைய செய்யும். எனவே அல்லாஹ் நம்மை தூய்மையாக்க முயற்சிக்கையில் நாமும் தூய்மையடைய மனதார விரும்புவோம். இன்ஷா அல்லாஹ் இந்த ரமதானில் அல்லாஹ் நம்மை தூய்மைபடுத்த நாம் எடுக்கும் முயற்சிகளில் கை கொடுப்பானாக. ஆமீன்.




.

No comments:

Post a Comment