பக்கங்கள்

Showing posts with label நபித்தோழர்கள். Show all posts
Showing posts with label நபித்தோழர்கள். Show all posts

September 3, 2010

உத்வேகமூட்டும் வாழ்க்கை - அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر

மதீனா நகரம். ஒருநாள் இரவுநேரத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில் பின்னிரவுத் தொழுகை தொழுது கொண்டிருந்தார்கள். அது மஸ்ஜிதுந் நபவீயை ஒட்டிய வீடு. கதவைத் திறந்து நுழைந்தால் பள்ளிவாசல். அங்கிருந்து மிக இனிமையான குரலில் குர்ஆன் ஓதும் ஒலி மிதந்து வந்தது. இனிமையாக, மிக இனிமையாக, நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்து அளித்ததைப் போன்று, தூய்மையாய், துல்லியமாய் குர்ஆன் ஓதும் ஓசை அது.
தனது தொழுகை முடிந்ததும், அன்னை ஆயிஷாவிடம் நபியவர்கள், "ஆயிஷா, அது அப்பாத் பின் பிஷ்ருடைய குரலா?" என்று விசாரித்தார்கள்.
"ஆம், அல்லாஹ்வின் தூதரே!"
மிகவும் புளகாங்கிதமடைந்த நபியவர்கள் இறைஞ்சினார்கள், "யா அல்லாஹ்! அவரது அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பாயாக!"
அதைவிட வேறென்ன வேண்டும் ஒருவருக்கு? எத்தகைய பிரார்த்தனை, எத்தகைய மாமனிதரிமிருந்து! இது மட்டுமல்ல. ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, "மூன்று அன்ஸார்கள் உள்ளனர். அவர்களது தரம் ஒப்பற்றது. அவர்கள் ஸஅத் பின் முஆத், உஸைத் பின் அல்ஹுதைர் மற்றும் அப்பாத் பின் பிஷ்ரு" என்று கூறினார்கள்.
அத்தகைய நற்பேறு, நற்சான்று பெற்றவர் அப்பாத் பின் பிஷ்ரு, ரலியல்லாஹு அன்ஹு.
முதல் அகபா உடன்படிக்கையைத் தொடர்ந்து, "முஸ்அப் இப்னு உமைர் எனும் தம் தோழரை நபியவர்கள் யத்ரிபிற்கு பிரச்சாரத்திற்காக அனுப்பி வைத்தார்கள், மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது", என்று ஹபீப் பின் ஸைத் வரலாற்றில் பார்த்தோம். முஸ்அப் (ரலி), யத்ரிப்(மதீனா) வந்தபோது அப்பாத் பின் பிஷ்ரு சிறுவர். ஏறக்குறைய பதினைந்து வயதுதான் இருக்கும். வயதிற்கேற்ற துடிப்பு, கபடமற்ற குணம், புத்துணர்வு எல்லாம் அமைந்திருந்த ஒரு விறுவிறுப்பான சிறுவர் அவர். முஸ்அப் யத்ரிபில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்க, ஒருநாள் அப்பாத் அவரைச் சந்தித்தார். முஸ்அப் பிரமாதமாகக் குர்ஆன் ஓதக் கூடியவர். அழகிய குரலில் குர்ஆனை ஓதி, மக்களுக்கு இஸ்லாத்தை அறிவிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்க அவர்கள் உபயோகித்தது குர்ஆன். அதுதான் பிரதானமான பிரச்சார சாதனம் அவர்களுக்கு. இறைவனின் வார்த்தைகளைவிட உயர்ந்தது வேறென்ன இருக்க முடியும்?
குர்ஆன் எனும் அந்த அதிசயம் அவர்களைக் கவர்ந்தது. சிறுவர் அப்பாதும் அப்படியே கவர்ந்து இழுக்கப்பட்டார். நெஞ்சை மட்டும் அல்ல, அப்பாதின் ஆழ்மனதின் கருவறையைத் தட்டி எழுப்பியது அது. முஸ்அப்பின் அழகிய குரலில் வெளிவந்த குர்ஆன் வாசகங்கள், மனதை அடித்துப் புரட்டிப் போடும் அதன் கருத்து, எல்லாமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் அளவிலாத பக்தியிலும், பற்றிலும் விழுந்து விட்டார் அப்பாத். தவிர இருவரிடமும் அமைந்திருந்த நற்பண்பும் நற்குணங்களும், இருவரின் மனங்களையும் ஒரேகோட்டில் ஒன்றிணைத்து மிகவும் அன்னியோன்யமாகிவிட்டனர்.
பின்னர் நபிகள் நாயகம் யத்ரிப் குடிபுகுந்து, மதீனாவில் இஸ்லாம் பிரகாசமாய்ப் பரவ ஆரம்பித்தது. குர்ஆன் கற்றார் அப்பாத். காலையோ, மாலையோ; ஓய்வோ, அலுவலோ; ஓதினார், ஓதிக் கொண்டே இருந்தார். எந்த அளவென்றால் தோழர்கள் மத்தியில் அவர் ஓர் இமாமாக அடையாளம் காணப்படுமளவு. அவரை, 'குர்ஆனின் தோழன்' என்றார்கள் தோழர்கள். வெறும் முகத்துதி இல்லை அது. அதை மனதில் இறுத்திப் பார்த்தால் 'குர்ஆனின் தோழன்' எனும் பட்டத்தின் உயரம் புரியும். அதைப் பெற்றார் அப்பாத்.
சரி, இத்தனையும் அவர் பெற்றது முதுமையடைந்தா? முதுமையடையும் அளவிற்கு அப்பாதின் ஆயுளில் அவகாசமெல்லாம் இருக்கவில்லை. எல்லாம் இளமையில், மிக இளமையில். இது இங்ஙனமிருக்க,
ஹிஜ்ரீ நான்காம் ஆண்டு. யூதர்களின் கோத்திரமான பனூ அந்-நதீர் (بنو النظير), பிரச்சினை அப்பொழுதுதான் முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. செய்தி ஒன்று வந்து சேர்ந்தது நபியவர்களுக்கு. நஜ்து மாகாணத்தில் கத்தஃபான் கோத்திரத்தின் பிரிவினர் - முஹாரிப், ஃதஅலபா எனும் இரு அரபு குலத்தினர் இருந்தனர். இவர்களுக்கு மதீனாவில் முஸ்லிம்கள் பலமடைந்து வருவது ஒருவித ஆத்திரத்தை, கோபத்தை தோற்றுவித்தது. அதென்ன இஸ்லாம் என்று புதிய அமைப்பு, அரசாங்கம்? போய் ஒருகை பார்த்துவிடுவோம் என்று மதீனாவைத் தாக்கப் படை திரட்ட ஆரம்பித்தனர். இந்தச் செய்தி வந்துசேர, நபிகள் நாயகம் உடனே ஆலோசனை நிகழ்த்தினார்கள். மதீனாவரை எதிரிப் படைகள் வந்து தாக்க வாய்ப்பளிக்காமல் முன்னேறிச் சென்று எதிரிகளை அவர்களது தளத்திலேயே சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. உடனே ஆயத்தமானார்கள் முஹம்மது நபி. 700 வீரர்கள் கொண்ட படை ஒன்று புத்துணர்ச்சியுடன் தயாரானது. உதுமான் பின் அஃப்ஃபான் ரலியல்லாஹு அன்ஹுவை மதீனாவின் நிர்வாகப் பிரதிநிதியாக்கி விட்டு, படை நஜ்து நோக்கிக் கிளம்பியது.
மதீனாவிலிருந்து நஜ்து வெகுதொலைவிலிருந்த பகுதி. கடினமான நிலப்பரப்பை நடந்தே கடக்க வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு. உளத் திடத்தை, ஈமானை நன்கு சோதிக்கும் படையெடுப்பு அது. முஸ்லிம் வீரர்களுக்கு சரியான காலணிகளும் இல்லை, அனைவருக்கும் போதிய சவாரி வசதியும் இல்லை. ஆறு பேருக்கு ஓர் ஓட்டகம் என்ற நிலை. முறைவைத்துதான் தோழர்கள் சவாரி செய்தார்கள். நடந்து நடந்து பாதங்கள் தேய்ந்து அபூ மூஸா(ரலி)வின்,  கால் நகங்களே விழுந்து விட்டன. அனைவருக்கும் கடுமையான வலி, காயம். அதற்கெல்லாம் அசரவில்லை அவர்கள். கிழிந்த துணிகளைக் கால்களில் கட்டிக் கொண்டார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அதனால் 'தாத்துர் ரிகாஉ - ஒட்டுத் துணிப்போர்'  என்று இந்தப் படையெடுப்பிற்கு வரலாற்றில் பெயரே ஏற்பட்டு விட்டது.
பாலையில், கோடையில், பாறையில் - எதற்கு இந்த வலி? எதற்கு இந்த பிரயத்தனம்? நபி! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர் சொல்கிறாரா? போதும். அவர் வாக்கு வேத வாக்கு. அவ்வளவுதான். வேறெந்த அசௌகரியமும் அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. செய்து முடிக்க வேண்டும். அதில் செத்து மடிந்தாலும் சரியே! அப்படித்தான் அவர்கள் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டிருந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள். நம்முடைய நிகழ்காலமோ அக்காலத்தில் கனவில்கூட காண இயலாத சௌகரியத்தையும் சொகுசையும் விரல் நுனிக்கே கொண்டு வந்திருக்க, மார்க்கம் என்பது சம்பிரதாயமான அடையாளமாக மட்டுமே இன்று நம்முள் எஞ்சி நிற்கிறது.
நடந்து, விரைந்து கத்தஃபான் கோத்திரத்தினரது நக்லா எனும் பிராந்தியத்தை வந்து அடைந்தது முஸ்லிம்களின் படை. முஸ்லிம்கள் படையெடுத்து வருவது தெரியாது இருக்குமா என்ன அவர்களுக்கு? செய்தியறிந்த அவர்கள் தங்களின் பெண்களை எல்லாம் விட்டுவிட்டு, மலைக் குன்றுகளுக்கு ஏறி ஓடிவிட்டிருந்தனர். முஸ்லிம்களின் படை வந்தடைந்ததும் மெதுவாய் அவர்களிலிருந்து ஒரு கூட்டம் இறங்கி வந்து எதிர் தரப்பில் தயாரானது. அவர்களும் போர் தொடங்கவில்லை, முஸ்லிம்களும் தொடங்கவில்லை. அஸ்ருத் தொழுகை நேரம் நெருங்கி விட்டிருந்தது. எதிரிகள் தாக்கக்கூடும் என்ற நிலை இருக்கும்போது அனைவரும் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபட இயலாது என்ற நிலை. இங்கு இந்தப் படையெடுப்பில்தான் போர்க் காலங்களிலும், அச்சமான தருணங்களிலும் தொழக்கூடிய தொழுகை முறை "ஸலாத்துல் கவ்ஃப்" அறிமுகமானது. ஒருபாதிப் படையினர் காவல் காக்க, மறுபாதிப் படையினர் தொழுகையின் முற்பகுதியில் கலந்து கொண்டு தொழுது முடிக்க,  பின்னர் இவர்கள் காவல் காக்க முதல்பாதிப் படையினர் தொழுகையின் பிற்பகுதியில் கலந்து கொண்டு தொழுது முடித்தனர்.
முஸ்லிம்களின் படையினரைவிட எதிரிகள் தரப்பில் கூடுதல் ஆள்பலம் இருந்ததுதான். ஆனாலும் அவர்கள் போரில் இறங்கவில்லை. திகைப்பு இருந்தது அவர்களுக்கு. நபியவர்களைப் பற்றியும் முஸ்லிம்களின் வீரமும் வெற்றியும் கேள்விபட்டிருந்தார்களா? நாம் சென்று தாக்கலாம் என்று நினைத்தால் அவர்களே நம் வாசலில் வந்து நின்று கொண்டு சவால் விடுகிறார்களே என்ற அச்சம் மிகுத்து விட்டது. அது, அந்த அச்சம், அதை அப்படியே சாதகமாக்கிக் கொண்டு மேற்கொண்டு போர் நிகழ்த்தாமல் மதீனா திரும்பினார்கள் முஹம்மது நபி.
மீண்டும் நெடிய பயணம். வழியில் கணவாய் ஒன்றைக் கடந்தது படை. அங்கேயே தங்கி இரவில் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள் நபியவர்கள். ஒட்டகங்களை இளைப்பாற விட்டு, தங்குவதற்குக் கூடாரமெல்லம் அமைத்தபின், நபியவர்கள் தமது படையினரிடம் கேட்டார்கள். "இன்றிரவு நமது படையைக் காவல் காக்கப் போவது யார்?"
அப்பாத் இப்னு பிஷ்ரு, அம்மார் பின் யாஸிர் ஆகிய இருவரும் எழுந்து காவலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அம்மார் பின் யாஸிர் முஹாஜிர். மக்காவிலிருந்து மதீனா ஹிஜ்ரத் மேற்கொண்டவர். அப்பாத் இப்னு பிஷ்ரு மதீனா நகரின் அன்ஸாரி. இருவரையும் உடன் பிறவா சகோதரர்களாக்கி வைத்திருந்தார்கள் நபியவர்கள். இத்தகைய உறவு பற்றி அபூதர்தா வரலாற்றில் வாசித்தது நினைவிருக்கலாம். சகோதரர்களின் காவல் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அலுத்துக் களைத்திருந்த படை உறங்கச் சென்றது.
இந்தப் படையெடுப்பின்போது எதிரித் தரப்புப் பெண் ஒருவரை முஸ்லிம் வீரர் ஒருவர் பிணைக் கைதியாகக் கைப்பற்றியிருந்தார். அந்தப் பெண்ணின் கணவனோ அப்பொழுது மலைக் குன்றில் ஏறி ஓடி ஒளிந்திருந்தான். முஸ்லிம்களின் படை திரும்பிச் சென்றவுடன் கீழிறங்கி வந்தவன், தன் மனைவி கைப்பற்றப்பட்டு சென்றது அறிந்தான். ஆவசேமுற்றவன், முஹம்மதையும் அவரது படையினரையும் சென்று பிடித்து சிலரது இரத்தத்தைச் சிந்தாமல் திரும்ப மாட்டேன் என்று தனது கடவுளர்களான அல்-லாத், அல்-உஸ்ஸாமேல் ஆணையிட்டு விட்டு, முஸ்லிம்களின் படை சென்ற பாதையில் பின்தொடர ஆரம்பித்தான்.
இங்கு, கணவாயின் முகப்பிற்குக் காவல் காக்கச் சென்றார்கள் சகோதரர்கள் இருவரும். அப்பாத் இப்னு பிஷ்ரு அம்மாரிடம் கேட்டார்: "இரவின் எந்தப் பாதியில் நீ உறங்க விரும்புகிறாய். முற்பாதியிலா? பிற்பாதியிலா?"
"நான் முற்பாதியில் உறங்குகிறேன்" என்ற அம்மார், அப்பாதைக் காவல் காக்க நிறுத்திவிட்டு படுத்தார், உறங்கி விட்டார். அத்தகைய களைப்பு, அசதி.
ஏதும் அரவமற்ற, அமைதியான, அழகான இரவு. நட்சத்திரங்கள் மினுமினுக்கும் வானம். சில் வண்டுகளின் ரீங்காரம். அலாதியான ஏகாந்த நிலை அது. அப்பாதின் மனம் ஏங்க ஆரம்பித்தது. உறங்க அல்ல, குர் ஆன் ஓத! இந்த அமைதியான இரவில் குர்ஆன் ஓதித் தொழுதால்?
எத்தகைய கடுமையான பயணம்? எத்தகைய அலுப்பு களைப்பு ஒவ்வொருவருக்கும்? ஆனால் இந்த எண்ணம் தோன்றியவுடன் உடனே தயாராகி தொழ ஆரம்பித்து விட்டார் அப்பாத். அவருக்குக் களைப்பைப் போக்கும் அருமருந்தும் குர்ஆனல்லவா?
மெய்மறந்து அழகிய குரலில் உணர்ச்சி ததும்ப சூரத்துல் கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார் அப்பாத். மனமும் உடலும் முற்றும் முழுக்க தொழுகையில் லயித்து விட்டிருந்தது. அருவி நீராய் சலசலத்து அழகியதொரு ரீங்காரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது குரல். நேரம், சூழல், நிலை அனைத்தையும் மறந்து வேறோர் உலகத்தில் பாய்ந்து விட்டிருந்தது அவரது மனது. அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான் முஸ்லிம் படையைப் பின்தொடர ஆரம்பித்திருந்த அந்தக் கைதியின் கணவன். அவனைக் கவனிக்கவேயில்லை அப்பாத். கணவாயை நெருங்கியவன் அப்பாத் தொழுது கொண்டு நிற்பதைக் கண்டு, அங்குதான் முஸ்லிம் படைகள் தங்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்தவன், தாமதிக்கவில்லை. தனது அம்பை எடுத்து வில்லில் பூட்டி, குறி பார்த்தான். எய்தான். குறி சற்றும் தப்பவில்லை.
தொழுது கொண்டிருந்த அப்பாதை அம்பு தைத்தது. ஓதிக் கொண்டிருந்த அப்பாத் பதட்டமோ பதைப்போ எதுவும் கொள்ளாமல் அம்பைத் தனது உடலில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டு, தனது கிராஅத்தைத் தொடர்ந்தார். தன் அம்பு குறி தப்பி விட்டதா? ஒன்றும் புரியாமல் மறுமுறை அம்பை எய்தான் அவன். இதுவும் அவர் உடலில் வந்து தைத்தது. மீண்டும் அதேபோல் அதைப் பிடுங்கி எறிந்து விட்டுத் தொழுகையை தொடர்ந்தார் அப்பாத். வலித்திருக்காது? இரத்தம் பீறிட்டிருக்காது? அது என்ன சிறிய கொண்டை ஊசியா? வலித்தது! குருதி பெருக்கெடுத்தது! ஆனால் அந்த வலி, அந்த அவஸ்தை எதுவும் அவர் மனதில் நிறைந்திருந்த குர்ஆனைத் தாண்டி மூளையில் பதிவாகவில்லை.
மூன்றாவது முறையாகவும் அம்பை எய்தான் அவன். இம்முறை அதைப் பிடுங்கிய அப்பாத், ஸஜ்தா நிலையை அடைந்து தொழுது முடித்து, தவழ்ந்து நகர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அம்மாரைத் தட்டி எழுப்பினார்.
"எழுந்திரு அம்மார். எனக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது"
திடுக்கிட்டு விரைந்து எழுந்தார் அம்மார். அப்பொழுதுதான் மற்றொருவரும் அங்கு காவலுக்கு இருப்பதைக் கண்ட அவன், அதற்கு மேல் நிற்காமல் ஓடிவிட்டான்.
அப்பாதை நெருங்கி, பார்த்தார் அம்மார். மூன்று காயங்களிலிருந்தும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
"ஸுப்ஹானல்லாஹ்! முதல் முறை தாக்கப்பட்டவுடனேயே ஏன் என்னை எழுப்பவில்லை அப்பாத்?" என்று ஆச்சரியம், அதிர்ச்சி விலகாமல் கேட்டார் அம்மார்.
"தொழுகையில், ஓதிக் கொண்டிருந்தேன். சூராவின் நடுவில் இருந்தேன். அதை முழுதும் ஓதி முடிக்குமுன் நிறுத்த நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்! நான் குர்ஆன் ஓதுவது தடைபடுவதைவிட நான் மரணிப்பதே மேல். ஆனால், அல்லாஹ்வின் தூதர் படைக்குக் காவலாக இருக்கும்படி என்னைக் கட்டைளையிட்டிருக்க,  எனது மரணத்தினால் படைக்கு பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்றுதான் பயந்தேன்" என்று பதில் வந்தது.
தொழுகையிலும் குர்ஆனிலும் பின்னிப் பிணைந்து, அனைத்தையும் மறந்து அதிலேயே லயித்துப்போன அந்த மனதை எப்படி விவரிப்பது? ரலியல்லாஹு அன்ஹு!
*****
காலம் கழிந்தது. அபூபக்ரு (ரலி) கலீஃபாவாக இருந்த காலகட்டம். பொய்யன் முஸைலமா அட்டூழியத்தை ஹபீப் (ரலி) வரலாற்றிலேயே காண ஆரம்பித்தோம் இல்லையா? இங்கு மீண்டும் அவனது அத்தியாயத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. பின்னர் மேலும் பல தோழர்களின் வரலாற்றில்கூட இவன்மேல் நாம் இடர வேண்டியிருக்கும். முஸைலமாவை அடக்கப் புறப்பட்ட படைகளுள் ஒரு பிரிவின் முன்னணிப் படைவீரர் அப்பாத் இப்னு பிஷ்ரு. அப்பொழுது முஸைலமாவின் படைகளுடன் யமாமாவில் கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. தினமும் பல உயிரிழப்புகள். இருந்தும் முஸ்லிம் படைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி முன்னேற இயலவில்லை. எதிரித் தரப்பு கடுமையாய்ச் சண்டையிடுவது ஒருபுறமிருக்க, முஸ்லிம் படைகளுள் முஹாஜிரீன்களும் அன்ஸார்களும் ஒருவரை ஒருவர் குறைகூறி நிற்பதைக் கண்டார் அப்பாத். மட்டுமல்லாமல், போரின்போது பின்னடைவு நிகழ்ந்திருந்தால் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதையும் கண்டார் அப்பாத். இது அன்ஸார்களுள் ஒருவரான அப்பாதிற்கு மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைய வேண்டுமென்றால், அன்ஸார்களையும், முஹாஜிரீன்களையும் தனித்தனிக் குழுவாகப் பிரித்து, தனி அடையாளப்படுத்தி, பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்து, உக்கிரமுடன் போரிட வைக்க வேண்டுமென்று தோன்றியது அப்பாதிற்கு. அவ்விதம் செய்தால் ஒருவர் மற்றவரைக் குற்றம் சுமத்த முடியாது. தவிர தத்தம் குழு சாதித்துக் காட்ட வேண்டுமென்ற உத்வேகம் அதிகமாகும். அதுவே சரியான போர் தந்திரமாயிருக்கும்.
அன்றிரவு உறங்கிய அப்பாத் கனவொன்று கண்டார். வானம் திறந்து கொள்ள, அதனுள் நுழைந்தார் அப்பாத். அவரை உள்வாங்கிக் கொண்ட வானம் ஒரு வீட்டின் கதவைச் சாத்துவதைப்போல் தன் கதவைச் சாத்திக் கொண்டது. காலையில் கண்விழித்தவர் அதை சகதோழர் அபூ ஸயீத் அல்-குத்ரீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் தெரிவித்தார்.
"அபூ ஸயீத்! அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்! நான் வீர மரணம் அடைவேன் என்றுதான் அதற்கு அர்த்தம் காண்கிறேன்"
அது பிழையற்ற மொழிபெயர்ப்பு. விடிந்ததும் போர் தொடர்ந்தது. போர்க்களத்தில் இருந்த ஒரு முகட்டின்மேல் விரைந்து ஏறி நின்றார் அப்பாத். இறைந்து அழைத்தார்.
"அன்ஸார் மக்களே! வாருங்கள், மற்றவர்களைவிட விரைந்து முன்னேறுங்கள்! உங்களது வாளின் உறைகள், இடுப்பில் தொங்குகிறதே அதை உடைத்து எறியுங்கள். தேவையில்லை அது இனி! நீங்கள் உயிருடன் நின்று கொண்டிருக்க, இஸ்லாத்தை எதிரிகள் கைப்பற்ற அனுமதிக்காதீர்கள்!"
அது பலமான கூவல்! உணர்ச்சிகரமான அழைப்பு! விண் அதிர கதறிக் கொண்டிருந்தார் அப்பாத். சரியாய் வேலை செய்தது அது. விளக்கை நோக்கி விரையும் விட்டிலாய் நானூறு அன்ஸார்கள் அங்கு வந்துக் குழுமி விட்டனர். அதன் தலைமையில் தாபித் பின் ஃகைஸ், அல் பர்ரா இப்னு மாலிக் மற்றும் அபூ துஜானா, ரலியல்லாஹு அன்ஹும். இந்த அபூ துஜானா நபியவர்களின் வாளை ஏந்திய பெருமை பெற்றவர்.
இந்த வீரர்களுடன் ஓர் அணியாய் முன்னேறிச் சென்றார் அப்பாத். எதிரிகளின் படை வரிசைக்கு இடையில் புகுந்து, தனது வாளால் சரசரவென்று அவர்களை வெட்டிக் கொண்டே விறுவிறுவென்று ஓடிக் கொண்டிருந்தார் அவர். முஸ்லிம்கள் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் போரிட்ட நாள் அது. எதிரிப்படை அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தெறித்து ஓடிக் கொண்டிருந்தது பொய்யன் முஸைலமாவின் படை. இறுதியில் பொய்யன் கூட்டத்து மனோ திடமெல்லாம் அன்று நொறுங்கி விட்டிருந்து. பின்வாங்கிய அவனது படை, ஒரு பழத்தோட்டத்திற்குள் சென்று புகுந்து கொண்டது. அங்கு வைத்து முஸைலமாவைக் கொன்று, போரை முஸ்லிம்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். பின்னர் அந்தத் தோட்டம், "மரணத் தோட்டம்" என்றே வரலாற்றில் பெயர் பெற்றுவிட்டது.
அந்தப் பழத்தோட்டத்தின் சுவரில்தான் அப்பாத் வீரமரணம் எய்தினார். அவரது உடல், போர்க் காயங்களால் அடையாளம் தெரியப்படாத அளவிற்கு சிதிலமடைந்திருந்தது. இரத்தத்தில் மூழ்கி முங்கியிருந்தது அவரது உடல். பிறப்பு அடையாளக் குறிகளைக் கொண்டுதான் அவரது உடலையே அடையாளம் காண முடிந்தது.
குர்ஆன், தனது குருதியிலும் ஆன்மாவிலும் கலந்திருந்தவர் அவர். அதன் இனிமையிலும், சந்தத்திலும் மட்டுமே ஆனந்தம் கண்டு, பள்ளிவாசலிலும் தியானத்திலும் அடங்கிவிடவில்லை அந்த மனது. இறை வார்த்தைகளின் அர்த்தம் அணுஅணுவாய் இரத்த அணுவில் கலந்திருந்தது. அதனால்தான் தொழுகையில் மட்டுமல்ல, போர்க் களத்திலும் முன்வரிசையில் வாளேந்தி நிற்க முடிந்தது; மரணம் துச்சம் எனக் கருத முடிந்தது. பொய்யன் முஸைலமாவுக்கு எதிரான அந்தப் போரில் தனது 26ஆவது வயதில் வீர மரணமடைந்தார் அப்பாத் பின் பிஷ்ரு.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!



.
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر"

உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஹகீம் பின் ஹிஸாம் ‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறப்பதற்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அபூர்வம் நிகழ்ந்தது. மக்காவில் அன்று ஏதோ ஒரு திருநாள். விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே அபூர்வமாய்த் திறக்கப்படும் கஅபாவின் கதவைத் திறந்து அதனுள்ளே சிறப்பு வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. காணாததைக் காண மக்களுக்கெல்லாம் ஆவல். கஅபாவின் உள்ளே நுழைந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, கும்பலாக சிலர் முண்டியடித்துக் கொண்டு தரை மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள அந்தக் கதவின் மேலேறி உள்ளே சென்று பரவசத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் நிறைமாதச் சூல் கொண்ட பெண்ணொருவர். உள்ளே இருக்கும்போது அங்கேயே அவருக்குத் திடீரென்று பேறுகால வலி ஏற்பட்டுவிட்டது. உடனே வெளியே வரமுடியாத சூழ்நிலை. அவ்வளவு கூட்டம், நெருக்கம். அவசர அவசரமாக அங்கேயே ஒரு தோல்விரிப்பைப் பரப்பி, அவரைப் படுக்க வைத்து, உலக வரலாற்றிலேயே யாருக்கும் வாய்க்காதப் பெருமையை சுமந்து கொண்டு ஆண் குழந்தையொன்று பிறந்தது.
அவர், ஹகீம் பின் ஹிஸாம் ரலியல்லாஹு அன்ஹு!
மக்காவில் குவைலித் இப்னு அஸத் (خويلد بن أسد‎) என்றொரு புகழ் பெற்ற வர்த்தகர் இருந்தார். அவருக்கு அவ்வாம் இப்னு குவைலித், ஹிஸாம் இப்னு குவைலித் எனும் இரண்டு மகன்களும் ஹாலா பின்த் குவைலித், கதீஜா பின்த் குவைலித் எனும் இரண்டு மகள்களும் இருந்தனர். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் முதல் மனைவியல்லவா. அவருடைய சகோதரர் ஹிஸாமினுடைய மகன்தான் கஆபாவினுள்ளே பிறந்த ஹகீம் பின் ஹிஸாம்.
செல்வமும் செல்வாக்கும் உள்ள உயர்குடி வம்சத்தில் பிறக்க நேரிட்டதால் ஹகீமினுடையது சொகுசான வாழ்க்கை. தவிர அறிவுக்கூர்மை, நல்லொழுக்கம், பெரும்பண்பு ஆகியனவும் அவருக்கு இயல்பாக அமைந்து விட்டிருந்தன. இந்த அத்தனை சிறப்பும் மாண்பும் ஹகீமை அவரது வாலிப வயதிலேயே குரைஷி மக்கள் தங்களுடைய ஒரு முக்கியத் தலைவராய் நியமித்துக் கொள்ளப் போதுமானதாயிருந்தது. "ஹகீம், வாருங்கள் இங்கு. இன்றிலிருந்து ரஃபாதா துறை உங்கள் பொறுப்பு" என்று பதவி அளித்து விட்டனர்.
ரஃபாதா?
உருவ வழிபாடு மிகைத்திருந்த அந்தக் காலகட்டத்திலும் மக்காவிற்கு மக்கள் யாத்திரை வருவதென்பது நடந்து கொண்டுதான் இருந்தது.
என்ன வழிபாடு?
எல்லாம் சிலைகளுக்குத்தான்! மக்கத்துக் குரைஷியர்கள் யாத்ரீகர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே சில துறைகளை ஏற்படுத்தி, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் வசம் இருந்தன. ஹிஜாபா, சிகாயா, ரஃபாதா, நத்வா, கியாதா மற்றும் லிவா என்பன துறைகளின் பெயர்கள்.
ஹிஜாபா எனும் துறை கஅபா ஆலயத்தைப் பராமரிக்கவும் அதன் சாவிகளின் பாதுகாவல் பொறுப்பையும் ஏற்றிருந்தது.
சிகாயா, யாத்ரீகர்களுக்குக் குடிநீர் வழங்கவும் ஈச்ச மதுபானம் வழங்கவும் பொறுப்பு.
ரஃபாதா - உணவு வழங்க.
நத்வா, இந்த அனைத்துக் கூட்டவைகளுக்கும் தலைமை.
கியாதா, லிவா ஆகிய இரண்டும் சற்று மாறுபட்ட துறைகள். கியாதா போர்க்காலங்களில் போர்த் தலைமைக்கும், லிவா ஈட்டியில் கொடியை ஏந்தி, படையுடன் செல்வதற்கும் பொறுப்பு.
இதில் ரஃபாதா எனும் உணவு மற்றும் யாத்ரீகர்களின் தேவையை நிறைவேற்றும் துறைக்குத் தலைவரானார் ஹகீம். அந்தளவு செல்வாக்கு. இதில் மற்றொரு அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அது பணம் ஈட்டும் துறையல்ல, தன் கைக்காசை எடுத்து தானமளிக்க வேண்டும். அக்கறையுடனும் ஆர்வமுடனும் பெருமையுடனும் அதன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் ஹகீம்.
இளம் பிராயத்திலிருந்தே முஹம்மது நபிக்கும், ஹகீமிற்கும் இடையில் நல்ல நட்பிருந்தது. ஹகீம் ஐந்து வயது மூத்தவர்தான். இருப்பினும் மிகவும் நெருக்கம். இந்நிலையில் கதீஜா அம்மையாருடன் முஹம்மது நபிக்கு திருமணம் நிகழ்ந்தவுடன் அத்தையின் கணவர் என்ற அழுத்தமான உறவொன்றும் சேர்ந்து கொண்டது.
ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு என்ற புகழ்பெற்ற நபித்தோழர் அனைவராலும் அறியப்பட்டவர். ஸைதின் சிறு வயதில் குலங்களுக்கிடையேயான போர் ஒன்று ஏற்பட்டது. அதில் ஸைத் இப்னு ஹாரிதா கைப்பற்றப்பட்டு, பின்னர் அடிமைச் சந்தைக்கு விற்பனைக்கு வந்து சேர்ந்தார். ஹகீம் இப்னு ஹிஸாம்தான் அவரை விலைக்கு வாங்கி, தன்னுடைய அத்தை கதீஜாவிற்கு அன்பளிப்பாய் வழங்கினார். இந்தக் காலத்துக் கோடீஸ்வரர்கள் தம் அன்பையும் பெருமையையும் வெளிக்காட்டுவதற்காக கார், பங்களா என்று பிறருக்கு அன்பளிப்பு வழங்குவதுபோல அடிமைகளை அப்படி அன்பளிப்பு அளிப்பது அக்காலத்தில் இருந்து வந்த வழக்கம். பின்னர் முஹம்மது நபியை கதீஜா பிராட்டியார் மறுமணம் புரிந்து கொண்டபோது, சிறந்தவராய் வளர்ந்து வந்த ஸைதை அவருக்கு அன்பளிப்பாய் வழங்கினார் அன்னை கதீஜா. அன்று அவ்விதம் நபிகளை வந்தடைந்த ஸைதிற்கும் முஹம்மது நபிக்கும் இடையே ஏற்பட்ட பாசம், பெற்ற தந்தை வந்தழைத்தும் "பெருமானாரை அண்மி வாழவே விருப்பம்" என்று மறுதலித்த ஸைதின் தனி வரலாறு. அதை இன்ஷாஅல்லாஹ் பின்னர் பார்ப்போம்.
இவ்வளவு அன்பு, நெருக்கம், உறவு அனைத்தும் இருந்து வந்த நிலையில், முஹம்மது நபி தனக்கு நபித்துவம் அளிக்கப்பெற்றுள்ள செய்தியை அறிவித்து இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்ததும் ஹகீம்தானே முதலில் அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்? நடக்கவில்லை! ஹகீம் தனது மதமே உசத்தி என்று தங்கிவிட்டார். மட்டுமல்லாமல்,
முஹம்மது நபியின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தனிப்பட்ட விரோதமெல்லாம் இல்லாத நிலையிலும், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற பத்ரு, உஹதுப் போர்களிலும குரைஷிகளுடன் இணைந்து கலந்து கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு. சகவாசம் சரியில்லாத பட்சத்தில் குற்றங்களுக்கு உடந்தையாகத்தானே நேரிடும். எனினும், அத்தகைய போர்களிலும் முஸ்லிம்களுக்கு அணுசரனையாய் ஹகீம் செயல்பட முனைந்ததாகத்தான் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பத்ரில் போர் மேகம் சூழ்ந்திருந்தது. குரைஷிகள், மதீனாவின் எல்லையைக் கடந்து வரும் அபூஸுஃப்யானின் வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றப் படையெடுத்து வந்திருந்தனர். ஆனால் அபூஸுஃப்யானோ வேறு மார்க்கமாக நலமே மக்கா சென்றடைந்து விட்டிருக்க, போருக்கான முக்கிய முதற் காரணம் அடிபட்டுப் போயிருந்தது. ஆயினும் அதற்குச் சில நாட்களுக்குமுன் முஸ்லிம் படையினருக்கும் அம்ரிப்னு ஹள்ரமிக்கும் இடையில் ஏற்பட்ட கலகத்தில் இப்னு ஹள்ரமி கொல்லப்பட்டு, வர்த்தகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மக்காவில் அளவிலாத வகையில் துன்புறத்தப்பட்டு வீடு, வாசல், நிலம் என அனைத்தையும் துறந்து வெளியேறி மதீனா வந்தடைந்திருந்த முஹாஜிர்களுக்கு அது ஒரு சிறிய இழப்பீடாகக் கருதப்பட்டது.
இப்பொழுது அபூஸுஃப்யான் தப்பித்து விட்டிருந்தாலும், "வந்ததுதான் வந்து விட்டோம். அந்த முந்தைய நிகழ்வைக் காரணமாக வைத்து எப்படியும் போர் நிகழ்த்தி, இந்த முஸ்லிம்களுக்கு இன்றுடன் முடிவுரை எழுத வேண்டியதுதான்" என்று குரைஷிகளின் மற்றத் தலைவர்கள் முடிவெடுத்திருந்தனர். யுத்தம் என்று ஏற்பட்டால் எதிர்கொள்ளப் போவது தத்தமது உறவினர்களை. இருதரப்பிலும் உயிரிழப்பு இருக்கும் என்பதை யோசித்த நபியவர்கள், போரைத் தவிர்க்கவே நினைத்தார்கள். தன்னுடைய சொந்த இன மக்களைப் போரில் எதிர்கொள்ள நபிகளுக்கு மிகுந்த தயக்கமிருந்தது. அனாவசிய உயிரிழப்பைத் தவிர்க்கவே அவர்கள் நாடினார்கள். எனவே போரைத் தவிர்க்கும் முயற்சியாக, உமரிப்னுல் கத்தாபை அவர்களிடம் அனுப்பி வைத்து, அவர்களைத் திரும்பிச் செல்லும்படியும், போரில் குரைஷிகளை எதிர்கொள்ள, தான் விரும்பவில்லை என்றும் நபியவர்களின் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுடனான நேருக்கு நேரான ஒரு போரைத் தவிர்க்க, குரைஷிகள் தரப்பில் பெரும் முயற்சி எடுத்தவர் ஹகீம் இப்னு ஹிஸாம். உமர் மூலமாகத் தகவல் வந்து சேர்ந்ததும், குரைஷிகளிடம் ஹகீம் பேசினார்: "யோசித்துப் பாருங்கள். இது நல்லதொரு வாய்ப்பு. ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு மிகவும் நல்லது". போர் வெறியில் இருந்த குரைஷிகளிடம் அது காதிலேயே நுழையவில்லை.
பின்னர், உத்பா இப்னு ரபீஆவிடம் சென்றார் ஹகீம். "உத்பா! நீர் குரைஷிகளின் பெருமதிப்பிற்குரிய தலைவன். உம்முடைய வாழ்நாளுக்கும் உமக்கு உயர்ந்ததொரு புகழ் அளிக்கவல்ல ஒரு செய்தி சொல்லவா?"
அது உத்பாவிற்கு ஆர்வம் ஏற்படுத்தியது. ஹகீம் விவரித்தார். "குரைஷிகளை மக்காவிற்குத் திரும்பச் சொல்லுங்கள். அம்ரிப்னு ஹள்ரமி கொல்லப்பட்டதை இப்பொழுது போருக்கு ஒரு காரணமாய் அவர்கள் புனையப் பார்க்கிறார்கள். முஸ்லிம்களால் கொல்லப்பட்டதற்கும் அவருடைய வணிகப் பொருட்கள் அபகரிக்கப்பட்டதற்கும், நீர் அம்ரிப்னு ஹள்ரமியுடைய நண்பன் என்ற முறையில் குரைஷிகளுக்கு இழப்பீடு தருவதாக அறிவித்து விடும்; போரைத் தவிர்க்கலாம்".
அபூஸுஃப்யான் நலமே மக்கா சென்றடைந்து விட்டதால் உத்பாவிற்குப் போரில் பெரிய நாட்டம் எதுவும் அப்பொழுது இல்லை. அதனால் ஹகீம் முன்னெடுத்து வைத்த வாதத்தின் நியாயம் உரைத்தது. அதன்பின் குரைஷிகளுக்கு மத்தியில் உத்பா சென்று உரை நிகழ்த்தியும், அபூஜஹல் அதை எதிர்த்து செய்த ஏளனத்தால் எதுவும் எடுபடவில்லை. போர் நிகழ்ந்தது. குரைஷிகளின் மாபெரும் தோல்விக்கும் முஸ்லிம்களின் அசகாய வெற்றிக்கும் அது வழிவகுத்தது.
அதன்பின் பல போர்கள், படையெடுப்புகள். எல்லாம் நடந்து முடிந்த இறுதியில் முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றிய போதுதான் ஹகீம் இஸ்லாத்தினுள் நுழைந்தார்.
அது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் மாதம். மக்காவினுள் நுழையும் நாளுக்கு முந்தைய இரவு. நபிகள் தன் தோழர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அதைக் குறிப்பிட்டார்கள். "மக்காவில் நான்கு பேர் இருக்கிறார்கள். உருவ வழிபாட்டில் மிகவும் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்".
"அல்லாஹ்வின் தூதரே, யார் அவர்கள்?" தோழர்கள் கேட்டார்கள்.
"அத்தாப் இப்னு உஸைத், ஜுபைர் இப்னு முத்இம், ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு"
அந்த விருப்பம் வீணாகவில்லை. நிறைவேறியது, முழுவதுமாய் நிறைவேறியது. பின்னர் அந்த நால்வருமே இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.
முஹம்மது நபி மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. மக்காவாசிகள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அறிவிப்பாளர் மிக உரத்தக் குரலில் அவர்களுக்குச் செய்தியொன்றை அறிவித்தார்.
"எவரெல்லாம் 'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மது அவனுடைய தூதர்' என்று சாட்சி பகர்கிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"எவரெல்லாம் கஅபாவின் அருகே வந்தமர்ந்து தங்களுடைய ஆயுதங்களைக் கீழிறக்கி வைக்கிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"எவரெல்லாம் தங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"எவரெல்லாம் அபூஸுஃப்யான் இல்லத்தினுள் தஞ்சமடைகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"மேலும், எவரெல்லாம் ஹகீம் இப்னு ஹிஸாம் இல்லத்தினுள் தஞ்சமடைகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
அந்த அளவிற்கு ஹகீம் கண்ணியப்படுத்தப் பட்டதும் எப்படி அதற்கு மேல் அவரால் இஸ்லாத்தை நிராகரிக்க முடியும்? நுழைந்தார் ஹகீம்.
மக்காவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் அபூஸுஃப்யானின் வீடு மேல்பகுதியிலும், ஹகீமின் வீடு கீழ்ப்பகுதியிலும் இருந்தது. அந்த அறிவிப்பைச் செவியுற்ற மக்கள் பலர் அங்குச் சென்று தஞ்சமடைய, உஹதுப் போரில் கொல்லப்பட்ட ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் உடலைக் குதறி, ஈரலை எடுத்துக் கடித்து வெறியாட்டம் நிகழ்த்திய ஹிந்த் முதற்கொண்டு பலரும் மன்னிக்கப்பட்டனர். வரலாற்றின் சிறப்பான அத்தியாயம் ஒன்று அன்று அங்குப் பதியப்பட்டது.
மக்காவின் வெற்றி நிகழ்ந்து இரு வாரங்கள்தாம் ஆகியிருந்தன. பெரியதொரு படை ஹுனைன் பள்ளத்தாக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான போருக்குத் தயாராவதாய்ச் செய்தியொன்று மக்காவை வந்தடைந்தது. ஹவாஸின் எனும் பதுஉ கோத்திரத்தினர் தகீஃப் எனும் தங்களின் உபகோத்திரத்தினருடன் இணைந்து முஸ்லிம்களை எதிர்த்து எப்படியும் அழித்துக் கட்டிவிடுவதென்று பெரிய படையொன்றைத் திரட்டி, போருக்குத் தயாராகிவிட்டிருந்தனர். மக்காவிலிருந்து பெரியதொரு படையெழுப்பி, அங்குச் சென்று அவர்களை எதிர்கொண்டார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். கடுமையான போர் நிகழ்வுற்று, இறுதியில் முஸ்லிம் படை வெற்றி கண்டது.
அந்த யுத்தம் முடிவுற்றதும் நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமானது. நபிகள் அதனைத் தோழர்களுக்குப் பங்கிட்டு அளித்தார்கள். தன்னுடைய பங்காய்க் கிடைத்ததையும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாய் மக்கா வெற்றிக்குப் பின்னர் புதிதாய் இஸ்லாத்தினுள் நுழைந்த குரைஷிகளுக்கு தாராளமாய் அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்விதத்தில் ஹகீம் இப்னு ஹாஸமிற்கும் நிறைய பங்கு கிடைத்தது. ஆயினும் அவர் நபிகளை அணுகி, மேலும் வேண்டும் எனக் கோர, அவருக்கு நூறு ஒட்டகங்கள் அளிக்கப்பட்டன.
பின்னர் ஹகீமை அழைத்த நபிகள், "ஹகீம். மிகவும் உசத்தியான ஒட்டகங்கள் உமக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை உவப்புடன் ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்வின் அருட்பேறு அந்தச் செல்வத்திற்குக் கிடைத்து, அது மென்மேலும் வளரும். ஆனால் அவற்றைப் பேராசையுடன் நீர் அணுகினால் அவற்றின் மேல் அல்லாஹ்வின் நற்பேறு இல்லாமல் போவதுடன், உண்டும் வயிறு நிறையாத மனிதனைப்போல் நீர் ஆகிவிடுவீர். கீழுள்ள கையைவிட மேலுள்ள கை சிறப்பானது" என்று அறிவுறுத்தினார்கள்.
அதைக் கேட்டார் ஹகீம். அப்படியே உள்வாங்கினார். பிறகு கூறினார். "அல்லாஹ்வின் தூதரே! உம்மை சத்தியத்துடன் அனுப்பி வைத்த அந்த இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். உம்மைத் தவிர இனி நான் யாரிடமும் எதுவும் கேட்கவே மாட்டேன். நான் மரணிக்கும்வரை யார் எது கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்" உணர்ச்சிப் பெருக்கில் சத்தியமிடுவதெல்லாம் சாத்தியம்தான். ஆனால், கடைசி வரை காக்கப்பட வேண்டுமே! முடிந்தா? அதை இறுதியில் பார்ப்போம்.
இஸ்லாத்தில் இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஹகீம் நுழைந்தார். தாமதமாய் இஸ்லாத்தினுள் நுழைந்த அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு மனதில் ஓடிய அதே எண்ணம், அவரைவிடத் தாமதமாய் வந்த ஹகீம் மனதிலும் தோன்றியது.  "எவ்வளவு தவற விட்டு விட்டாய், நற்கருமங்களில் எவ்வளவு பின்தங்கி விட்டாய் ஹகீம்?" என்று அரற்றியது அவரது மனது. நுழைந்த நொடியில் லாப நஷ்டத்ததைச் சரியாக பகுத்துணர முடிந்த மனங்களின் பெரிய ஆச்சரியம் அது!
ஒருநாள் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார் ஹகீம். அதைக் கண்ட அவருடைய மகனுக்கு ஒன்றும் புரியவில்லை.  "தந்தையே ஏன் அழுகிறீர்கள்?"
இங்கு இன்னொன்றும் நாம் கவனிக்க வேண்டும். முந்தைய தோழர்களிடமும் படித்திருக்கிறோம். வீர தீரத்தில் பராக்கிரமசாலியாக திகழும் ஒப்பற்ற போர் வீரர்களான அவர்களுடைய மனதை இஸ்லாம் சரியான முறையில் சென்று ஊடுருவ, அல்லாஹ் என்றதும் அல்லாஹ்வின் விசாரணை என்ற நினைப்பு வந்ததும் புசுக்கென்று கண் கலங்கி அழுகிறார்கள் அவர்கள். எத்தனைமுறை நம் கண்கள், இறைவனை, அவனது விசாரணையை நினைத்துக் கண்ணீர் சிந்தியிருக்கின்றன?
"பல விஷயங்கள். எதை என்று சொல்வேன்," என்றவர் தொடர்ந்தார். "முதலாவது, நான் இஸ்லத்திற்குள் எவ்வளவு தாமதாகமாக வந்தடைந்திருக்கிறேன்? எனக்கு முன்னால், பல ஆண்டுகளுக்கு முன்னரேயே நுழைந்துவிட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இதுவரை ஈட்டி, சேமித்துள்ள நன்மை எவ்வளவு உயரமானது? என்னுடைய சொச்ச நாளுக்கும் பூமி நிறையும் அளவுள்ள தங்கத்தை நான் இஸ்லாத்தின் பாதையில் செலவிட்டாலும் அவர்களுக்கு நான் ஈடாக முடியுமா? அதை நினைத்து அழுகிறேன்"
"பத்ரு, உஹது யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நான் கலந்து கொண்டிருந்தும் அல்லாஹ்வின் கிருபையினால் தப்பிப் பிழைத்தேன். அப்பொழுது எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன் - 'அல்லாஹ்வின் தூதருக்கு எதிராக இந்தக் குரைஷிகளை நான் ஆதரிக்க மாட்டேன்; அவருக்கு எதிராக நான் மக்காவை விட்டு வெளியே நகரக்கூட மாட்டேன்', என்று. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நான் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டேன். என்னால் என்னைத் தடுத்துக் கொள்ளும் உறுதி இல்லாமற் போனது. அதை நினைத்து அழுகிறேன்"
"அதன்பின் ஒவ்வொரு முறையும் என் மனதிற்குள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் குரைஷிகள் மாண்புடன் நோக்கும் மூதாதையர்களைப் பார்த்தேன். அவர்கள் எப்படித் தங்களுடைய பழைய அஞ்ஞான பழக்கத்தில் பற்றிப் பிடித்துக் கொண்டு, தம் கொள்கையில் பிடிவாதமாய் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நானும் அவர்களுடைய அனாச்சாரத்தைப் பின்பற்றி உருவ வழிபாட்டையே தொடர்ந்தேன். அப்படி செய்திருக்கக் கூடாது என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. மூத்தவர்களையும் மூதாதையர்களையும் குருட்டுத் தனமாய்ப் பின்பற்றியதுதான் என்னை அழிவின் விளிம்பு வரை இட்டுச் சென்று விட்டது. என் நன்மையைத் தாமதப்படுத்தி விட்டது. இவ்வளவையும் நினைத்துப் பார்க்கும்போது என்னால் எப்படி அழாமல் இருக்க முடியும்? சொல் மகனே!"
அவர்களுக்கெல்லாம் உறுத்தியெடுத்தது, தவற விட்ட கணங்கள். நற்காரியங்களில் பிந்தி விட்டது, நற்கூலி குறைந்து போனதெல்லாம் எப்பேற்பட்ட நஷ்டம் என்பதை உய்த்துணரும் தூய ஈமான். அதனால் குளமாகி நின்றன கண்கள். பணமாகவும் நகையாகவும் சொத்தாகவும் வாங்கிக் குவித்துவிட்டு, ஏதோ சிறிதைச் சுண்டு விரலில் எடுத்து இறைவழியில் செலவழித்து விட்டாலே தன்னிறைவு அடைந்துவிடும் நம்மைப் போன்றோர் அந்தக் கண்ணீரை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
அவரது ஆழ்மனதில் இஸ்லாம் வெறுமனே நுழையவில்லை. இதயத்தின் ஒரு பகுதியாகவே அது ஆகிவிட்டிருந்தது. அதனால் அழுது முடித்தவர் சூளுரைத்தார். 'முன்னர் இஸ்லாத்திற்கு விரோதமாய்ச் செய்த  ஒவ்வொரு செயலுக்கும் பரிகாரம் காணப் போகிறேன். இஸ்லாத்திற்கு எதிராய்ச் செலவழித்த ஒவ்வொரு துகளுக்கும் பரிகாரமாய் இப்பொழுது இஸ்லாத்தின் பாதையில் செலவழிக்கப் போகிறேன். அது தான் சரி.' அப்படியே செய்ய ஆரம்பித்தார் ஹகீம் இப்னு ஹிஸாம்.
மக்காவில் தாருந் நத்வா என்றொரு இல்லம் இருந்தது. குரைஷிகளுக்கு அது ஒரு பிரசித்திமிக்க இடம். அங்குதான் இஸ்லாத்திற்கு எதிரான குலத்தாரெல்லாம் ஒன்று கூடுவார்கள். அவர்களின் மூத்தோரும் தலைவர்களும் நபிகளுக்கு எதிராய் அங்குக் கூடித்தான் சதித் திட்டம் தீட்டுவார்கள். நிகழ்கால் ஐ.நா. கட்டடம்போல மக்காவுக்கு தாருந்நத்வா. அந்த இல்லம் ஹகீமின் வசம் வந்து சேர்ந்தது. தனக்கும் தன்னுடைய கடந்த கசந்த காலத்திறகும் இடையில் பலமான தடுப்பொன்றை ஏற்படுத்த விழைந்தார் ஹகீம். என்ன செய்யலாம் என்று நினைத்தவருக்கு அந்த யோசனை உதித்தது. அதனால் அந்த வீட்டை இலட்சம் திர்ஹங்களுக்கு விற்றார்.
அது குரைஷியர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இடம்; அவர்களது மாண்பின் அடையாளம். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற குரைஷி இளைஞன் ஒருவன் அவரிடம் கேட்டான், "குரைஷியரின் குலப்பெருமையை விற்றுவிட்டீர்களே?"
"ஹஹ்! இறுமாப்புக்கான காலமெல்லாம் சென்று விட்டது மகனே. இறையச்சம்! இனிமேல் அதைத் தவிர வேறெதுவுமே முக்கியமில்லை. அந்த வீட்டை விற்று வந்த பணமிருக்கிறதே அதை இஸ்லாத்தின் பாதையில் நற்காரியங்களுக்கு அளித்து விடப்போகிறேன். அதைக் கொண்டு எனக்கு மறுமையில் அங்கு வீடு கிடைக்கலாம்"
குரைஷியர்களுக்குத் தெரிவித்தார், "இதோ பாருங்கள். உங்கள் எல்லோரையும் சாட்சியாக வைத்துக் கூறுகிறேன், அந்தப் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கிறேன்"
அந்தக் காலத்திலேயே அதன் மதிப்பு இலட்சம் திர்ஹங்கள் என்றால் இன்று அதன் மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். அவ்வளவும் தானமளிக்கப்பட்டது.
ஒருநாள் ஹகீம், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்: "நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் சில நற்காரியங்கள் செய்திருக்கிறேன். அவையெல்லாம் என் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படுமா?"
ஹகீம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்முன் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார். நூறு ஒட்டகங்களை அறுத்து அதன் இறைச்சியை மக்களுக்கு தானமாய்ப் பகிர்ந்து அளித்திருந்தார்.
"நீர் இஸ்லாத்தினுள் அவை அனைத்துடனும் வந்து விட்டீர் ஹகீம்" என்று பதில் கூறினார்கள் நபிகள்.
இருந்தாலும் இப்பொழுது அவற்றை மீண்டும் யோசித்தார் ஹகீம். இஸ்லாத்தினுள் நுழைந்தபின் தனது முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. தன்னுடன் நூறு ஒட்டகங்களைச் சிறப்பாய் அலங்கரித்து உடனழைத்துச் சென்றார். அவற்றையெல்லாம் அறுத்து ஸதக்கா தர்மமாய் அதன் இறைச்சி முழுவதையும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டார்.
அடுத்ததொரு ஹஜ் வந்தது. இம்முறை நூறு அடிமைகளைத் தன்னுடன் அழைத்து வந்து அவர்களுக்கெல்லாம் விடுதலையளித்தார். அவர்கள் கழுத்துகளில் வெள்ளியில் கழுத்தணி ஒன்று இருந்தது. 'அல்லாஹ்விற்காக ஹகீம் பின் ஹிஸாமினால் இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்' என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது. விடுதலை பெற்ற அவ்வடிமைகள் அந்த வெள்ளி ஆபரணத்தை விற்று, தங்கள் வாழ்க்கையை சுயமே துவங்கிக்கொள்ள அத்தகைய ஏற்பாடு.
ஆச்சா?
அதற்கு அடுத்த ஹஜ் வந்தது. இப்பொழுது தன்னுடன் ஆயிரம் செம்மறியாடுகளை ஓட்டி வந்தவர், அவற்றையெல்லாம் மினாவில் பலிகொடுத்து, அனைத்து இறைச்சியையும் முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
அவர் மனசு முழுவதும் போட்டி. மற்றத் தோழர்களுடன் போட்டி. ஏதாவது செய்து அவர்களுக்கு இணையாய் நற்கூலியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற, மார்க்கம் அனுமதித்த ஆரோக்கியப் போட்டி.
இங்ஙனமிருக்க, ஹுனைன் போரின்போது நபிகளிடம் சத்தியம் செய்தார் என்று பார்த்தோமல்லவா? அபூபக்ரு (ரலி) கலீஃபாவாக இருந்த காலத்தில் கருவூலத்திலிருந்து ஹகீமிற்கு நிறைய பங்கு ஒதுக்கப்பட்டது. ஆள் அனுப்பினார் கலீஃபா. "ஹகீம், கொஞ்சம் ஒரு நடை இங்கு வந்து உங்கள் பங்குச் செல்வத்தைப் பெற்றுச் செல்லுங்கள்" புறங்கையால் அவற்றை வெறுத்து ஒதுக்கியவர் "அதெல்லாம் வேண்டாம்; ஆளை விடுங்கள்," என்று பதில் அனுப்பி விட்டார்.
பின்னர் உமர் (ரலி) கலீஃபாவாக இருந்த காலத்திலும் அப்படியே நிகழ்ந்தது. ஹகீமிற்கு உண்டான பணமும் செல்வமும் கருவூலத்தில் தேங்கியிருந்தன.  அழைத்து அழைத்துப் பார்த்தார் உமர். ஹகீம் மசியவேயில்லை. உமருக்கு அது பிரச்சனையாக இருந்தது. அவரவருக்கும் அவரவர் கணக்கு நேராக வேண்டும். அதில் படு கண்டிப்பாக இருந்தார்கள் அவர்கள். மறுமையின் கேள்வி அவர்களுக்கு மிகப் பிரதானம். கடைசியில் ஒருநாள் உமர் மக்கள் மத்தியில் எழுந்து சென்றார். "இதோ பாருங்கள். ஹகீமிற்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ளும்படி நான் கொடுத்தும் ஹகீம் நிராகரித்து விட்டார். இதற்கெல்லாம் நீங்களே சாட்சி" என்று அறிவித்து விட்டார்.
அப்படியேதான் வாழ்ந்தார் ஹகீம். பின்னர் ஏறக்குறைய தன்னுடைய 120ஆவது வயதில் அவர் மரணித்ததாக ஹதீஸ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஹகீம் பின் ஹிஸாம் ‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ"

சிந்தனைக்கு இன்று...

அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் கூறியதாவது,
"யாருடைய வீட்டில் திருக் குர்'ஆன் (வழக்கமாக) ஓதப்படவில்லையோ அவ்வீடு, கவனிப்பார் யாருமற்ற பாழடைந்த வீட்டைப் போலானதாகும்."
மேலும் அவர் கூறியது:
"காலியான வீடுகள் எவை என கேட்டால், எந்த வீட்டில் அல்லாஹ்வின் புத்தகம் இல்லையோ அந்த வீடு என்பேன்".
இப்னு அபி ஷய்பாஹ், அல் முஸன்னஃப் இதழ்.




.
read more "சிந்தனைக்கு இன்று..."

இன்றைய மேற்கோள்

அப்துல்லாஹ் பி. ஷகீக் அல் உகய்ல் (ரஹி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்(ரலி), வேறெந்த செயலையும் 'குஃப்ரு'க்கு(இறைமறுப்பு) நிகராக கருதவில்லை, தொழுகையை விட்டுவிடுவதை தவிர".

அத்‍-திர்மிதி, அல்-சுனன் ஹதீத் 2622, அல் அல்பானி அவர்களின் சுனன் அத்-திர்மிதி எனும் புத்தகத்தில் ஸஹீஹ் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
read more "இன்றைய மேற்கோள்"

September 1, 2010

உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي

ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டில் ஒருநாள், யமன் நாட்டு அரண்மனைக்கு அரசியைச் சந்திக்க அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் சென்றார். அப்பொழுது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசனால் அங்கு மாபெரும் தொல்லையும் குழப்பமும் ஏற்பட்டிருந்த சூழ்நிலை. அரசியைச் சந்தித்த அண்ணன்காரர், "இந்தக் கேடுகெட்டவனால் உனக்கும் மக்களாகிய எங்களுக்கும் எவ்வளவு கேடும் அவமானமும் என்பது நீ உணர்ந்ததே. இருந்தாலும் அதை உனக்கு எடுத்துச் சொல்ல வந்திருக்கிறேன்" என்று ஆரம்பித்தார்.
"சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் அரசியார்.
"அவனது அதிகாரத்தைப் பிடுங்க வேண்டும்"
"ம்ம்ம்... அதெல்லாம் பத்தாது. வேண்டுமானால் நான் அவனைக் கொலை செய்ய உதவுகிறேனே" என்றார் அரசியார் நிதானமாக.
ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன அண்ணன்காரருக்கு. கொலையும் செய்வாளா பத்தினி?
மகிழ்ச்சியில் பெரும் குதூகலத்துடன், "இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதை நேரடியாகச் சொல்லத் தயக்கமாயிருந்தது"
அதைத் தொடர்ந்து அரசனைக் கொல்லும் திட்டம் ஒன்று அங்கு வெகு நுணுக்கமாய் உருவாக ஆரம்பித்தது. அவசரமில்லை, அவர்கள் திட்டமிடட்டும். அதற்குள் நாம், நான்கு வருடங்களுக்குமுன் நடைபெற்ற சில நிகழ்வுகளை, ஒரு சுற்று சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடுவோம்.
* * * * *
ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டின் இறுதியில், ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பி வந்ததும், அரேபியா தாண்டி உள்ள அரசர்களுக்கெல்லாம் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்துக் கடிதம் அனுப்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அரசர்கள் என்றால் சிற்றரசர்கள் குறுநில மன்னர்கள் இல்லை. அன்றைய வல்லரசுகளான ரோம அரசாங்கம், பாரசீக அரசாங்கம், மற்றும் எகிப்து, பஹ்ரைன், யமாமா போன்றவற்றை ஆண்டுகொண்டிருந்த பெரிய பெரிய அரசர்களுக்கு. அவற்றுள் இங்கு நமக்கு முக்கியம் பாரசீகம் மட்டும். அதைத் தெரிந்து கொள்வோம்.
ரோமர்களுக்கும் பாரசீகத்திற்கும்தான் அப்பொழுது கடுமையான போர். முன்னாள் சோவியத்தும், இந்நாள் அமெரிக்காவும்போல அன்றைய வல்லரசு தாதாக்கள் அவர்கள்தாம். ஓயாது போர் புரிந்து ஒருவர் மாற்றி ஒருவர் கொன்று, வென்று கொண்டிருந்தார்கள். சுற்றி வளைத்து நாடு நாடாய்க் கைப்பற்றிக் கொண்டிருந்த அந்த இரண்டு பேரரசுகளுக்கும் அரேபியாவும், பாலைவனமும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அரபியர்களும் இவர்கள் இருவருக்கும் யாதொரு கவர்ச்சியையும் உண்டு பண்ணவில்லை. பேரீச்சம் பழம், ஒட்டகப்பாலைத் தவிர அவர்களைக் கவரும் வகையில் அங்கு என்ன இருந்தது? அதனால் அரேபியாவைப் படையெடுத்துக் கைப்பற்ற வேண்டும் என்ற திட்டமெல்லாம் அவர்கள் அடிக்குறிப்பில்கூட இல்லை. இந்நிலையில், இஸ்லாம் அரேபியாவில் அசைக்க முடியாத சக்தியாகப் பரிணமித்து, வளர்ந்து, அந்த வல்லரசுகளுக்கே சவாலாகப் போவதன் முன்னோடியாய் முதல் கடிதத்தை அனுப்பி வைத்தது.
அப்பொழுது பாரசீகத்தை இரண்டாம் குஸ்ரூ (கிஸ்ரா) ஆண்டு கொண்டிருந்தான். பாரசீகத்தின் சக்திவாய்ந்த மன்னர்களில் அவனும் ஒருவன் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அவனது ஆட்சியில், வளமையின் உச்சியில் இருந்தது பாரசீகம். அளவுக்கு மிஞ்சிய அதிகாரமும் பலமும் வாய்ந்தால் என்னாகும்? தனக்குத் தானே குஸ்ரூ பதவி உயர்வு கொடுத்துக் கொண்டான். "நான் கடவுள்!" அடங்கி ஒடுங்கிக் கிடந்த மக்களும் கும்பிடு போட ஆரம்பித்து விட்டனர். இல்லையென்றால் கொன்றுவிடுவானே!
இப்படி இருக்கையில்,
தன் தோழர் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவை அழைத்து அவரிடம் ஒரு கடிதம் கொடுத்து குஸ்ரூவிடம் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள். இஸ்லாத்தின் ஏகத்துவத்தை விளக்கி, தான் ஒரு நபி என்பதை விவரித்து, இஸ்லாத்திற்கு அழைப்பு விடுக்கும் சுருக்கமான தெளிவான கடிதம்.
கடிதத்தைப் படித்ததும் கோபம் தலைக்கேறியது குஸ்ரூவிற்கு. "கடவுளுக்கே அழைப்பா? என் அடிமை எனக்கு இப்படியொரு கடிதம் எழுதுவதா?" என்று உறுமி கடிதத்தைக் கிழித்து காற்றில் பறக்கவிட்டவன், தனது சார்பாய் யமன் நாட்டை ஆள நியமித்திருந்த குட்டி மன்னன் பாதானுக்கு (باذان) உடனே ஒரு தகவல் அனுப்பினான். என்னவென்று? இரண்டு தூதுவர்களை மதீனாவிற்கு அனுப்பி முஹம்மது நபியை உடனே கைது செய்து பாரசீகத்திற்கு அழைத்து வரும்படி. அப்பொழுது யமனில் அல்-அப்னா (மகன்கள்) என்ற பெருங்குழு மக்கள் இருந்தனர். அவர்களிடம்தான் அரசியல் அதிகாரம் இருந்தது. இந்த அல்-அப்னா என்பவர்கள் யமனுக்குக் குடிபெயர்ந்த பாரசீக ஆண்களுக்கும், அவர்கள் திருமணம் முடித்துக் கொண்ட அரேபிய பெண்களுக்கும் பிறந்த மக்கள். அந்த அல்-அப்னா மக்களின் தலைவர்தான் பாதான்.
தகவல் வந்து சேர்ந்ததும் நல்ல வாகான இருவரைத் தேர்வு செய்தார் பாதான். ஒருவன் அவரின் உதவியாளர் அபாதாவீ (Abathaweih), மற்றொருவன் பாரசீக அதிகாரி கர்காரா. கைது ஆணை ஒன்று தயாரிக்கப்பட்டது. "தாங்கள் எங்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பு ஏதும் காட்டாமல் சரணடைந்து அவர்களுடன் குஸ்ரூவைத் தரிசிக்கச் செல்லுங்கள்" என்பதான வாசகம் எழுதப்பட்டு அவர்களிடம் கொடுத்த பாதானுக்கு என்ன தோன்றியதோ, கூடுதலாக ஒன்றைச் சொல்லி வைத்தார், "நபி என அழைக்கப்படும் அவரைப் பற்றிய உண்மையை அறிந்து வந்து என்னிடம் சொல்லுங்கள்".
அபாதாவீயும் கர்காராவும் யமனிலிருந்து கிளம்பி, மக்காவைத் தொடும் சுமார் 100 கி.மீ. தொலைவிலுள்ள தாயிஃப் வந்து சேர்ந்தார்கள். தாயிஃப் நகரவாசிகள் அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை. தவிர மக்கத்துக் குரைஷியருக்கு நிகராய் அவர்களும் நபிகளின்மேல் குரோதமும் வெறுப்பும் பகையுமாகத்தான் இருந்து கொண்டிருந்தார்கள். எனவே ரொம்ப சந்தோஷமாகிவிட்டது அவர்களுக்கு. "இந்தா ... இப்படிப் போனால் மதீனா வந்துவிடும்" என்று வழியெல்லாம் காண்பித்தார்கள். 'நமக்குத் தொந்தரவு அளித்து எல்லோரையும் வென்று கொண்டிருப்பதுபோல், பாரசீக ராச்சியத்தை நினைத்து விட்டாரா அந்த முஹம்மது? குஸ்ரூ என்ன கிள்ளுக் கீரையா? இப்பொழுது வரப்போகிறது பார் அவருக்கு சரியான பின்னடைவும் தோல்வியும்' என்ற ஏக ஆனந்தம் அவர்களுக்கும் குரைஷிகளுக்கும்.
மதீனா வந்தடைந்தது அந்த இருவர் குழு. ஓலைக் கூரை பள்ளியும் மண் குடிலும் மகா எளிய உடையுமாய் நபிகளைக் கண்டு, அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம், குழப்பம்! சிற்றரசர்களிடம்கூட பட்டும் படோடபமும் பிரம்மாண்டமும் பார்த்துப் பழகிய கண்கள் அவை. என்ன ராச்சியம், என்ன பெரிய அரசர் என்று நினைத்துக் கொண்டு, இவர்களெல்லாம் அப்பேற்பட்ட குஸ்ரூவுக்குக் கடிதமெல்லாம் எழுதுகிறார்கள்? சரி வந்த வேலையைப் பார்ப்போம் என்று அபாதாவீதான் பேசினான். "உம்மை அழைத்து வரும்படி, மன்னருக்கெல்லாம் மன்னர் மாமன்னர் குஸ்ரூ, அவர்தம் கட்டுப்பாட்டில் உள்ள எங்கள் யமன் நாட்டு மன்னர் பாதானுக்கு உத்தரவிட்டுள்ளார், வந்துவிடுங்கள். நீங்கள் அப்படி உடனே இந்தக் கட்டளைக்கு அடிபணிந்து வந்துவிட்டால், பாதான் பெரிய மனது வைத்து உமக்காக சிபாரிசு செய்து மாமன்னர் குஸ்ரூவுக்குக் கடிதம் எழுதுவார். அது உம்மைப் பெரிய தொல்லையிலிருந்து காப்பாற்ற உதவும். உமக்கே தெரியும் குஸ்ரோ எவ்வளவு சக்தி வாய்ந்தவரென்று. அவரது கட்டளையை மறுத்தீர்களானால், உம்மை, உம்முடைய மக்களை உமது நாட்டையெல்லாம் அவர் நிச்சயம் அழித்து விடுவார்"
மிகவும் கடுமையாய், அதிகாரமாய் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அதில் கவனம் செலுத்தவில்லை நபிகளார். கூர்ந்து அவர்களது தோற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மழுங்க மழித்த தாடையும் நல்ல அடர்த்தியான மீசையுமாக அவர்களின் அந்தத் தோற்றம் முஹம்மது நபிக்கு அறவே பிடிக்கவில்லை. "யார் உங்களுக்கு உங்களது தாடியை மழிக்க உத்தரவிட்டது?" என்று அவர்களது கைதுச் செய்தியை முற்றிலும் புறக்கணித்த கேள்வியொன்று வெளிப்பட்டது அவர்களிடமிருந்து.
தலைக்கே ஆபத்து தெரிவித்து வந்திருக்கிறோம், இவர் என்னடாவென்றால் தாடியைப் பற்றிக் கேட்கிறாரே. புரியவில்லை அவர்களுக்கு. "எங்கள் இறைவனிடமிருந்து" என்று பதில் சொல்லி வைத்தார்கள். குஸ்ரூதானே அவர்களின் கடவுள்.
அமைதியாய் பதில் கூறினார்கள் முஹம்மது நபி, "ஆனால் என் இறைவன் எங்களுக்குத் தாடியை வளர்க்கவும் மீசையைக் கத்தரிக்கவும் உத்தரவிட்டுள்ளான்" என்று கூறியவர்கள், "நாளை வரை காத்திருங்கள்; மீண்டும் பேசுவோம்" என்று அறிவித்துவிட்டுச் சென்று விட்டார்கள்.
இதனிடையே பாரசீகத்தில் முக்கிய அரசியல் நிகழ்வொன்று நடைபெற்றது. குஸ்ரூவிற்கு ஷிர்வே என்றொரு மகன் இருந்தான். அவனுக்குத் தன் தந்தை தன்னிச்சையாகவும் கொடுங்கோலனாகவும் ஆட்சி செய்து வருவது மகா எரிச்சலாயிருந்தது. பாரசீகர்களின் மேதகைமைக்கு குஸ்ரோவின் செயல்பாடுகள் மிகவும் பங்கம் விளைவிப்பதாய்க் கவலைப்பட்டான். 'ஏதாவது செய்து இந்த அப்பனைப் போட்டுத் தள்ளினால்தான் சரி' என்று தோன்றியது அவனுக்கு. நேரம பார்த்துக் கொண்டிருந்தவன் அன்றைய நாளில் தன் தந்தையை இனிதே கொலை செய்து முடிக்க, கடவுள் குஸ்ரூ செத்துப் போனான்.
இந்தச் செய்தியை இறைவன் தன் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் மூலமாக நபியவர்களுக்கு அன்றிரவு அறிவித்து விட்டான். அதுவும் எப்படி? மிகத் துல்லியமாய், அந்தக் கொலை நிகழ்வுற்ற நாள், இரவின் எந்தப் பொழுது, என்ன தேதி ஆகிய விபரங்களுடன். மறுநாள் அந்த இரு தூது அதிகாரிகளையும் அழைத்தார் முஹம்மது நபி. "உங்கள் மன்னாதி மன்னர் செத்துப் போய்விட்டார் தெரியுமா?" என்று கொலை விபரங்களை அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிவித்ததும் அதிர்ந்து போனார்கள் அவ்விருவரும்.
"நீர் என்ன சொல்கிறீர் எனப் புரிந்துதான் சொல்கிறீரா? எங்கள் கடவுளுக்குக் கடிதம் அனுப்பினீர்கள் என்ற அற்பமான ஒரு விஷயத்திற்கே உம்மைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் என்னடாவென்றால் எங்கள் கடவுள் இறந்து விட்டார் என்று அபாண்டம் உரைக்கிறீர்? இது தப்பு. மகாக் குற்றம். அப்படியே நாங்கள் குறித்துக் கொண்டு எங்கள் மன்னன் பாதானிடம் தெரிவிக்கலாமா?"
"ஆம், சொல்லுங்கள். மேலும், என்னுடைய மார்க்கமும் இராச்சியமும், குஸ்ரூவின் கீழுள்ள அனைத்து இராச்சியங்களையும் துடைத்தெறியும் என்பதையும் என் சார்பாக உங்கள் மன்னனுக்குத் தெரிவியுங்கள். எனவே, உங்கள் மன்னன் பாதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அவருடைய அதிகாரத்தில் தற்சமயம் இருப்பதையும் அவருக்குக் கொடுப்பேன் என்றும், அவர் தற்சமயம் நிர்வகித்துக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கெல்லாம் அப்படியே அரசனாகவும் ஆக்கி வைப்பேன் என்றும் தெரிவியுங்கள்."
தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கே, அவர்களின் வாயடைத்து, அவர்களின் மன்னனுக்கு அவனுடைய அதிகாரத்தையே மீண்டும் திருப்பித்தரும் விசித்திரம் நடைபெற்று முடிந்தது. மேலும், மற்றொரு மன்னனிடமிருந்து தமக்குப் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த தங்கமும் வெள்ளியும் மூட்டையில் கட்டி, கர்காராவிடம் கொடுத்தனுப்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். "உங்கள் மன்னனுக்கு எனது இந்த அன்பளிப்பை அளியுங்கள்"
தூதுவர்கள் இருவரும் யமனுக்குத் திரும்பி பாதானிடம் நடந்ததையெல்லாம் விவரித்தார்கள். நிகழ்காலம் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் எந்தவொரு தகவல் தொடர்பு வசதியும் இல்லாத அக்காலத்தில் எத்தகைய தலைபோகிற செய்தியாக இருந்தாலும் அது நிலம் விட்டு நிலம் வந்து சேர அதற்கே உரிய காலம்தான் ஆகும். ஆகையினால் பாதானுக்கு அதுவரை குஸ்ரூ கொலையுண்ட செய்தி வந்து சேர்ந்திருக்கவில்லை. எனவே, "இதெல்லாம் ஒரு மன்னன் கூறுகிற செய்தியாக எனக்குத் தெரியவில்லை. என் மனதிற்கு அவர் ஒரு நபி என்றுதான் படுகிறது. அது மட்டும் உண்மை என்றால், அவர் உங்களிடம் கூறியது நடந்தே தீரும். குஸ்ரூ கொல்லப்பட்டது உண்மை என்றால் அவர் ஒரு நபியும், தூதுவரும் என்பது மெய்யாகிவிடும். அப்படியெல்லாம் இல்லையெனில், அடுத்து அவரை என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுப்போம்"
நியாயமான சிந்தனையும், அந்நேரத்திற்கான சரியான யோசனையும் பாதானிடமிருந்து வெளிப்பட்டது. அடுத்து சில நாட்களிலேயே பாரசீகத்திலிருந்து அந்தச் செய்தி பாதானுக்கு வந்து சேர்ந்தது. ஷிர்வேதான் செய்தி அனுப்பியிருந்தான். அட்சரம் பிசகாமல் அப்படியே நபிகளார் தெரிவித்திருந்த செய்தி. அதனுடன் மேலும் ஒரு தகவலும் இருந்தது, "மேற்கொண்டு தகவல் வரும்வரை மதீனாவில் இருக்கும் அந்த நபியை ஒன்றும் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்"
பாதானுக்கு தெளிவு ஏற்பட்டு விட்டது, "முஹம்மது மெய்யாலுமே அல்லாஹ்வின் தூதராகத் தான் இருக்க முடியும்". அபாதாவீயை அழைத்து மேலும் தகவல் விசாரிக்க, "அவருக்கென்று எந்த ஒரு பாதுகாவலரும் கிடையாது ராசா. மக்களெல்லாம் இயல்பாய் அவரைச் சந்திக்க முடிகிறது. அவரைப்போல் ஒரு மதிப்பையும் அச்சத்தையும் என்னுள் தோற்றுவித்த வேறு எவரையும் நான் இதுவரை சந்தித்துப் பேசியதேயில்லை" என்று மனதிலுள்ள உண்மையை அப்பட்டமாய் விவரித்தான் அவன்.
முழுக்க முற்றிலுமாய் பாதானுக்கு உறுதி ஏற்பட்டு விட்டது. தன்னுடைய அமைச்சர்கள், ஆலோசகர்களையெல்லாம் அழைத்து, தனக்கு முஹம்மது நபியின் மேல் ஏற்பட்டுள்ள நம்பிக்கையைத் தெரிவித்து, "நான் முஸ்லிமாகிவிடப் போகிறேன்" என்று அறிவித்து விட்டார் பாதான். 'மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி'! அவரைச் சார்ந்தவர்கள அனைவரும் இஸ்லாத்தினுள் நுழைந்தனர். பாரசீகத் தலைநகருக்கு அனுப்பிய 'இஸ்லாமிய அழைப்பு' ஓலைக்கு, யமன் நாட்டில் முன்னுரை துவங்கியது. ஒரு முன்னறிவிப்பு செய்தி; அதைச் சரியாய் சிந்திக்க முடிந்த நல்லறிவு. அவ்வளவுதான், யமனுக்குள் இஸ்லாம் புகுந்தது.
யமனில் பெரும்பான்மையாக வசித்து வந்த கிறித்தவர்களும் நெருப்பை வணங்கும் மஜூஸிப் பாரசீகர்களும் (Magians) பெருமளவில் இஸ்லாத்தில் நுழைய ஆரம்பித்தனர். தகவல் முஹம்மது நபிக்கு எட்டி அவர்கள் தன் தோழர்கள் சிலரை யமனுக்கு அனுப்பி வைத்து அந்த மக்களுக்கெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைகளையும் வாழ்க்கை முறையையும் கற்றுத்தர உத்தரவிட்டார்கள்.
அதன் பின் சில வருடங்களில் பாதான் இறந்து போக அவரின் மகன் ஷஹ்ரிடம் ஆட்சிப் பொறுப்பு வந்தது. ஷஹ்ரும் சன்ஆவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்தார். அவருக்கு ஒரு அழகிய மனைவி, பெயர் அதாதா/ஆஸாத் எனும் மர்ஸுபானா. இனிமையாய் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, இறைவன் நிர்ணயித்தபடி விதி வந்து தட்டியது அவர் வாசற் கதவை, அகோர வடிவத்தில்.
யமனில் பனூ மத்ஹிஜ் என்றொரு கோத்திரம் இருந்தது. அக்கோத்திரத்தைச் சேர்ந்த அப்ஹாலா பின் கஅப் என்றொருவன் இருந்தான். கட்டுமஸ்தான ஆள், கருப்பாய் அவலட்சணமான உருவம். அவனுக்குத் தொழில் குறி சொல்வதும் சூனியம் செய்வதும். எந்தக் காலத்தையும் போன்று அந்தக் காலத்திலும் அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டம் இருந்தது. அதனால் அதில் அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. தனது அகோர உருவத்தை மறைக்க அவன் ஓர் உபாயம் செய்தான். கம்பீரமாய் ஒரு போர்வை போர்த்திக் கொண்டு, முக்கால் முகத்தை மறைத்தாற்போல் திரை அணிந்து, ஒருவகையான போலி தேஜசுடன் மக்கள் மத்தியில் தோன்றுவான்.
அவனது கரிய நிறத்தின் காரணத்தால் அவனது உண்மைப் பெயர் மறைந்து புதுப் பெயர் தோன்றியது, அஸ்வத் அல்-அன்ஸி. அஸ்வத் என்றால் அரபு மொழியில் கருப்பு. அன்ஸ் என்பது அவனது குலம். அதனால் அன்ஸுக் குலத்துக் கருப்பன்.
ஹிஜ்ரீ 10ஆம் ஆண்டு. திடீரென்று ஒருநாள் அஸ்வத் அல்-அன்ஸிக்கு அந்த யோசனை தோன்றியது. தோழர்கள் வரிசையில் ஆறாமவரான ஹபீப் இப்னு ஸைத் வரலாற்றில் படித்தோமே முஸைலமா என்றொருவன் பற்றி. அவனுக்குத் தோன்றிய அதே கண்றாவி யோசனைதான். இவனே ஒரு சோதிடன்தானே, அதனால் நல்ல நாள், நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்த்து "இன்றிலிருந்து நானும் ஒரு நபி" என்று அறிவித்து விட்டான். தன்னுடைய கோத்திரத்தினரை அழைத்து மனதில் தோன்றிய சில வாசகங்களை அவர்களுக்கு ஒப்புவித்து, "இவையெல்லாம் குர்ஆன் வசனங்கள். அல்லாஹ் என்னையும் ஒரு தூதுவனாக தேர்ந்தெடுத்து இவற்றை எனக்கு அனுப்பியுள்ளான். ஆகையினால் இன்றிலிருந்து நானும் ஒரு நபி."
ஆனால் சும்மா சொல்லக் கூடாது, அவனுக்கு அருமையான நாவண்மை இருந்தது. அவன் பேசுவதைக் கேட்கும் மக்களுக்கு அப்படி ஒரு போதை ஏறி, பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவர். அவனது வார்த்தை ஜாலம் திறமையாய் மக்களை மடக்கிப் போடும். அப்படியே கொஞ்ச நஞ்சம் புத்தி இருந்து இவன் வார்த்தைக்கு மயங்காதவர்களை, இருக்கவே இருக்கு பணம், அதைக் கொடுத்து மடக்கிப் போட்டு விடுவான்.
முஸைலமா பின்னே அவனுடைய குலத்தினர் அணி திரண்டதுபோல் அஸ்வத் அல் அன்ஸியின் பின்னும் அவனுடைய பனூ மத்ஹிஜ் குலம் அணி திரண்டு விட்டது. ஓர் ஆட்டம் ஆடிப்பார்த்து விடலாம் என்று தோன்றியது அவனுக்கு. உடனே 700 குதிரைப்படை வீரர்களுடன் நஜ்ரானுக்குப் படையெடுத்து வெகு எளிதாய் அதைக் கைப்பற்றியவன், அங்கிருந்த முஸ்லிம் நிர்வாகியை விரட்டிவிட்டு தன்னுடைய ஆள் ஒருவனை கவர்னராக நியமித்தும் விட்டான். நஜ்ரான் நகர், யமனில் வடக்கே அமைந்துள்ளது. அங்குக் கிடைத்த வெற்றி நுனி நாக்கில் தேனாய் இனிக்க, "திருப்பு, படையை" என்று உடனே தெற்கே உள்ள சன்ஆ நகரை நோக்கிப் பாய்ந்தான். அங்கு பாதானின் மகன் ஷஹர் நிர்வாகம் செய்து கொண்டிருந்தாரல்லவா, அவருக்கு இந்தத் தகவல் வந்து சேர்ந்தது. அவரிடம் அதிகம் வீரர்களெல்லாம் இல்லை. சிறியளவில் படையொன்றைத் திரட்டிக்கொண்டு சன்ஆவை விட்டுக் கிளம்பினார் அவர் அஸ்வதை எதிர்கொள்ள. மூர்க்கமுடன் வந்து சேர்ந்த அஸ்வதுடன் முடிந்தளவு போராடிப் பார்த்தார். ஆனால் அவரைக் கொன்று சன்ஆவை வென்றான் அஸ்வத் அல்-அன்ஸி. ஐந்து நாட்களுக்குப் பிறகு சன்ஆவில் நுழைந்தவன் அங்கு ஷஹரின் அழகிய விதவை மனைவி அதாதா எனும் மர்ஸுபானாவை வலுக்கட்டாயமாக மனைவியாக்கிக் கொண்டான். கணவனையும் அநியாத்திற்குப் பறி கொடுத்து, அவரைக் கொன்ற கரிய நிறத்து அகோரனுக்கே மணப்பெண்ணாய் வாய்ப்பது என்பது ஒரு பெண்ணுக்கு எத்தகைய கொடூரம்? விக்கித்துப் போனார் அதாதா.
தன்னை அவன் நபியாக்கிக் கொண்ட இருபத்தைந்தே நாட்களுக்குள் இவ்வளவும் நடைபெற்று விட்டது. சன்ஆவைத் தலைமையகமாக்கிக் கொண்டு, தொடர்ந்து அடுத்த சிலநாட்களில் தெற்கே ஹத்ரமௌத், வடக்கே அத்-தாயிஃப், கிழக்கே பஹ்ரைன், மேற்கே அல்-அஹ்ஸாவரை அவனது அதிகார எல்லை பரவி விட்டது. வேகமென்றால் வேகம் அவ்வளவு வேகம். குடிவெறியாட்டம், களியாட்டம் என்று ஆட்டமான ஆட்டம் தொடர்ந்தது. அதாதாவின் மேல் காதலும் பாதான் குடும்பத்தின் மேல் அளவற்ற வெறுப்புமாக தன்னால் முடிந்தளவு அவருடைய குடும்பத்தினருக்கு அவமதிப்பு, ஏளனம், இகழ்ச்சி என்று அளவற்றத் தொல்லையும் கொடுக்க ஆரம்பித்தான் அவன். தட்டிக் கேட்பது யார்?
கட்சித் தலைவருக்கென்று தொண்டர், குண்டர் படையெல்லாம் இருக்குமல்லவா? அதைப்போல் அவனுக்கென்று உருவாகியிருந்த அடிபொடிகள் மக்கள் மத்தியில் திறம்பட விளம்பரப் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார்கள். "நம் ஐயாவிற்கு வானிலிருந்து வானவர் ஒருவர் வருகிறார். ரொம்பப் பெரிய செய்தியெல்லாம் சொல்லித் தருகிறார்" என்றெல்லாம் மக்கள் மத்தியில் ஊடுருவிக் கதையளக்கும் ஊடக வேலை செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்காகவே ஸுஹைக், ஷுகைக் என்ற இருவரின் தலைமையில் ஒரு உளவுக் குழுவை அஸ்வத் அமைத்திருந்தான். மக்களுடன் இரணடறக் கலந்து விட்டிருந்த அவனது உளவாளிகள், மக்களின் அன்றாடப் பிரச்சனை, கவலை, சுக, துக்கம் இதெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு தன் தலைவனிடம் பட்டியல் போட்டுத் தந்துவிட, தன்னை நாடிப் பரிகாரம் தேடி வருபவருக்கும், வராதவர்களை இழுத்து வந்தும், ஏதோ ஞானக் கண்ணில் கண்டு விட்டதைப்போல் உளவாளிகள் கொண்டுவந்து தந்த அந்த விபரங்களை எல்லாம் சொல்ல, "ஆஹா, எத்தகைய மகான் இவர், உன்னதர், நபியேதான், இறைவனின் தூதரேதான் இவர்" என்றெல்லாம் மக்கள் மயங்கி விழாத குறை. காட்டுத் தீயாய் யமனில் பரவிக் கொண்டிருந்தது அவன் செல்வாக்கு.
இந்த அக்கிரமமும் அராஜகமும் செய்தியாக மதீனா வந்தடைந்தது. கூடவே, யமனில் இன்னமும் உண்மையான முஸ்லிம்கள் அடங்கிய கூட்டமொன்று செய்வதறியாது திகைத்து நிற்கிறது என்ற உபசெய்தியும் வந்தது. தாமதிக்காமல் கைஸ் இப்னு ஹுபைரா எனும் தன்னுடைய தோழரை அழைத்தார்கள் நபியவர்கள். அவருடன் மற்றும் சில தோழர்களையும் தேர்ந்தெடுத்து, "யமனுக்கு உடனே புறப்பட்டுச் சென்று, அங்குள்ள முஸ்லிம்களுடன் இணைந்து இவன் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்" என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. யமன் முஸ்லிம்களுக்கு ஒரு கடிதமும் நபியவர்கள் சொல்லி வரையப்பட்டது. கொள்ளை நோய்போல் பரவி வரும் அக்கேட்டை எதிர்த்து உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நேர்வழியில் நிலைத்து நிற்க அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் சொல்லி, புத்தியை உபயோகித்து அவனை முறியடிக்க அதில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு மதீனத்துக்குழு யமனுக்குக் கிளம்பியது.
தட்டிக் கேட்பது யார்? என்று கேட்டோமல்லவா? தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார் அப்படி ஒருவர். அவர்தான் ஃபைரோஸ் அத்-தைலமி ரலியல்லாஹு அன்ஹு. அல்-அப்னாவைச் சார்ந்தவர்; பாதான் என்று பார்த்தோமே அதே அல்-அப்னாவின் ஒரு தலைவராக ஃபைரோஸ் அத்-தைலமி இருந்தார். இவர் ஷஹரின் நிர்வாகத்தில் அமைச்சராக இருந்ததாகவும் பின்னர் அஸ்வத் அல்-அன்ஸி சன்ஆவைக் கைப்பற்றியதும் அவனிடம் அமைச்சராகத் தொடர விருப்பமின்றி வெளியேறியதாகவும் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், அஸ்வத் அல்-அன்ஸியின் குழப்பம் ஃபைரோஸையும் அல்-அப்னா மக்களையும் வழிதவற வைக்கவிலலை. அவன்மேல் அவர்களுக்கு எள்ளளவுகூட நம்பிக்கை விளையவில்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்பதிலும் அல்லாஹ்வின் மார்க்கத்திலும் அவர்கள் படுஉறுதியாக இருந்தனர். அஸ்வதைத் தீர்த்துக் கட்ட அவர்களுக்குத் தேவை ஒரு சரியான தருணம். அதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அந்நிலையில் அவரை வந்து சந்தித்தது நபிகளார் அனுப்பி வைத்த குழு. கடிதத்தைப் படித்துப் பார்த்த அத்தனை முஸ்லிம்களுக்கும் அது போதுமானதாயிருந்தது. அவர்களுக்குத் தேவையான புத்துணர்ச்சியை அது ஊட்டியதுடன் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த குழுவாய் உருவாக அது வழிவகுத்தது. எக்கச்சக்க எரிச்சலிலும் கோபத்திலும் ஆக்ரோஷத்திலும் இருந்தனர் அவர்கள். துடித்துக் கொண்டிருந்தன அவர்களின் தாடியும் வாளும். "அஸ்வத் அல்-அன்ஸியை ஒழித்துக் கட்ட தாங்கள் அனைவரும் தயார்" என்று முழு ஒப்புதல் தெரிவித்து, வானில் முஷ்டி உயர்ந்தது. இதற்குத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் உடனே தனது ஆட்டத்தைத் துவக்கினார் ஃபைரோஸ். அவருடைய தலைமையில் உருவாகியது முஸ்லிம்களின் போர்க்குழு.
அவரிடம் ஒரு முக்கியத் துருப்புச் சீட்டு இருந்தது - கொலையுண்டுபோன ஷஹரின் மனைவியும், அஸ்வத் அல்-அன்ஸி என்ற விகாரப் பொய்யனுக்குக் கட்டாய மனைவியாகிப் போனவருமான அதாதா, ஃபைரோஸின் ஒன்றுவிட்ட சகோதரி. ஃபைரோஸின் தந்தையும் அதாதாவின் தந்தையும் உடன்பிறந்த சகோதரர்கள்.
ஃபைரோஸ் புரிந்த சாகசத்தை அவரது வார்த்தைகளிலேயே வரலாற்று ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளனர். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
அந்நேரத்தில் அஸ்வத் அல்-அன்ஸியின் அதிகாரம் ஓர் உச்சத்தை அடைந்து விட்டிருந்தது. அந்தளவு அதிகாரம் கொடூரனுக்கு வசமானால், அடுத்து? ஆணவம், தற்செருக்கு இதெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் அவனிடம் வந்து ஒட்டிக் கொண்டன. அடுத்து அவனுடைய இந்த அக்கிரம வெறியாட்டத்திற்கு உதவிய அவனுடைய நெருங்கிய அதிகாரிகளிடம் அவனுடைய திமிரும் வெறியும் திரும்பின. 'அடக்கி வைக்க வேண்டும், இல்லையென்றால் நம்மையே கவிழ்த்து விடுவார்கள்' என்ற எச்சரிக்கை உணர்வுதான், வேறென்ன? அவனது படையில் ஃகைஸ் இப்னு அப்து யாகூத் என்றொரு படைத் தலைவர் இருந்தார். அவரிடம் அவன் நடந்து கொண்ட போக்கு அவருக்குப் பெரும் திகிலையே ஏற்படுத்தி விட்டிருந்தது. எந்த அளவுக்கு என்றால், 'யப்பா கைஸு, நீ விதைத்த வினைக்கு நிச்சயமாய் நீயே அவன் கையால் நயவஞ்சகமாய்ச் சாகப்போகிறாய்' என்று சகல உறுதியாய் அவர் நம்ப ஆரம்பித்து விட்டிருந்தார். அந்தளவு அவரை பயமுறுத்தி வைத்திருந்தான் அஸ்வத் அல்-அன்ஸி. அது, அந்த பயம், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் ஃபைரோஸ்.
ஃபைரோஸிற்கு சகோதரர் முறையுள்ள மூத்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் தாதாவைஹ் (Dadhawayh). அவரை அழைத்து கொண்டு ஃகைஸை இரகசியமாக சந்தித்தார் ஃபைரோஸ். நபியவர்களிடமிருந்து வந்திருந்த கடித விபரமெல்லாம் தெரிவித்து, "காலம் கடக்காமல் இவனுடைய பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தால்தான் சரிப்படும். என்ன சொல்கிறீர்?" என்று கேட்க, ஆனந்தத்தில் கண்ணீர் வராத குறை ஃகைஸிற்கு. "எந்நேரமும் நான் என்னுடைய மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தாற் போலிருக்கிறது எனக்கு. முடித்து வைப்போம் அவன் கதையை" என்று ஒப்புதல் உடனே வந்தது. அவர்கள் மூவரும் யோசித்து ஒரு தீர்மானம் செய்தனர். "உள்ளே இருந்து கொண்டு அந்த சூனியக்காரனை ஒழிப்பதற்கு நாம் காரியம் ஆற்ற வேண்டும். மற்றவர்கள் பிரச்சனைகளை வெளியிலிருந்து சமாளிக்க வேண்டும்."
அப்பொழுது அடுத்த யோசனையை முன்வைத்தார் ஃபைரோஸ். "அதாதா எனக்குச் சகோதரி. இந்த அயோக்கியனுக்குக் கட்டாய மனைவியானதில் அவள் எவ்வளவு நொந்து போயிருக்கிறாள் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே, அவளை நான் சென்று சந்திக்கிறேன். நல்லதொரு வழி பிறக்கும்"
* * * * *
அரசி அதாதாவைச் சந்திக்க அரண்மனைக்குள் ஃபைரோஸ் சென்றார். சந்தித்து, "இந்த கேடுகெட்டவனால் உனக்கும் மக்களாகிய எங்களுக்கும் எவ்வளவு கேடும் அவமானமும் என்பது நீ உணர்ந்ததே. இருந்தாலும் அதை உனக்கு எடுத்துச் சொல்ல வந்திருக்கிறேன்" என்று ஆரம்பித்தார்.
"உன்னுடைய அன்பார்ந்த கணவனையும் நம் மக்கள் பலரையும் கொன்றொழித்திருக்கிறான் இந்த மாபாதகன். நம் பெண்களுடைய கற்பெல்லாம் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளன. நம் அனைவர் மேலும் அவன் அதிகாரம் பெற்றவனாகிவிட்டான்
"நமக்கு அல்லாஹ்வினுடைய தூதரிடமிருந்து கடிதமொன்று வந்துள்ளது. குறிப்பாய் அது நமக்கும் பொதுவாய் யமனுடைய மக்களுக்கும் இவன் பிரச்சனையை முடித்து வைக்கும்படி தெரிவித்துள்ளது. இவனுடைய தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி நம்மை வற்புறுத்தி கட்டளையிட்டுள்ளார்கள் நபியவர்கள். நீ எங்களுக்கு உதவ முன் வருவாயா?"
"சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் அதாதா.
"அவனது அதிகாரத்தைப் பிடுங்க வேண்டும்"
"ம்ம்ம்... அதெல்லாம் பத்தாது. வேண்டுமானால் நான் அவனைக் கொலை செய்ய உதவுகிறேனே" என்றார் அரசியார் நிதானமாக.
மகிழ்ச்சியில் பெரும் குதூகலத்துடன், "இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதை நேரடியாகச் சொல்லத் தயக்கமாயிருந்தது."
"முஹம்மதின் மூலம் சத்தியத்தை அனுப்பி, அவரை எச்சரிப்பவராகவும் நற்செய்தி எடுத்துச் சொல்பவருமாக அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! ஒரு நொடிகூட எனது மார்க்கத்தின் மீதும் அதன் சத்தியத்தின் மீதும் எனக்கு சந்தேகம் ஏற்படவேயில்லை. இந்தப் பேயனை நான் ஏராளமாய் வெறுக்கிறேன். இந்த அளவு நான் வெறுக்கக்கூடிய வேறு எவரையும் அல்லாஹ் படைக்கவில்லை என்றே தோன்றுகிறது. எந்தக் கணம் அவனைப் பார்த்தேனோ அப்போதே, இவன் ஒரு வெட்கங்கெட்ட பாவி, மக்களின் உரிமையை மதிக்காத அயோக்கியன், அக்கிரமம் புரிவதில் கொஞ்சம்கூட தயக்கம் காட்டாதவன் என்று தெளிவாகப் புரிந்து கொண்டேன்" என்று தன் ஆற்றாமையை மேலும் விவரித்தார் அதாதா.
"அது மிகவும் சரியே. இவனை எப்படிக் கொன்றாழிப்பது என்று ஏதாவது உபாயம்?"
"மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்கிறான் அவன். இந்த அரண்மனையின் ஒவ்வொரு மூலையிலும் அவனுடைய பாதுகாவலர்கள் பரவியுள்ளார்கள். ஆனால், உபயோகத்தில் இல்லாத ஒரு கிடங்கு ஒன்று இங்கு உள்ளது. அதன் வெளிச்சுவர், திறந்த நிலவெளியை ஒட்டி அமைந்துள்ளது. இரவாகியதும் நீங்கள் வெளியிலிருந்து அந்தச் சுவருக்கு அடியிலிருந்து சுரங்கம் தோண்டி உள்ளே வந்துவிட்டால், அங்கே நான் உங்களுக்காக ஆயுதங்களையும் விளக்கொன்றையும் தயார் செய்து வைத்திருப்பேன். பிறகு அவன் தூங்கும் அறைக்கு அழைத்துச் செல்கிறேன். அதன் பிறகு உங்கள் பாடு."
யோசித்தார் ஃபைரோஸ். "கோட்டைபோல் பாதுகாப்புடன் திகழும் இந்த அரண்மனையில் உள்ள ஓர் அறைக்கு வெளியிலிருந்து சுரங்கம் தோண்டுவது அவ்வளவு எளிதான காரியமாய் எனக்குத் தெரியவில்லை. யாராவது பார்த்துவிட்டால் போதும், அத்துடன் அனைத்துக் காரியமும் கெட்டுவிடும், நம் கதையும் முடிந்துவிடும்."
"ஆமாம், உண்மைதான்" என்றார் அதாதா. சற்று நேரம் யோசித்தவர், "இதைக் கேள், எனக்கு மற்றொரு யோசனை. உனக்கு மிகவும் நம்பகமான ஒருவனுக்கு வேலையாள்போல் மாறுவேடமிட்டு இங்கு அனுப்பிவை. அவனை, அந்தக் கிடங்கின் உள்புறத்திலிருந்து சுரங்கம் தோண்டி வெளிப்பகுதிக்கு பாதை ஏற்படுத்தச் செய்கிறேன். உங்களுக்கு வெளியிலிருந்து கொஞ்சமே தோண்டி அந்தப் பாதையினுள் நுழைய வேண்டியிருக்கும். நள்ளிரவு இருட்டில் யாரும் கவனிக்காமல் அதை நீங்கள் செய்வது சுலபம்."
"இது உன்னத யோசனை!"
விடைபெற்று வெளியில் வந்தவர் பரபரவென்று காரியமாற்ற ஆரம்பித்து விட்டார். தன்னுடைய சகாக்களிடம் விவரமெல்லாம் தெரிவிக்க அனைவரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டனர். திட்டத்தை நிறைவேற்றும் அனைத்து செயல்களும் இரகசியமாய் நேர்த்தியாய் நடைபெற ஆரம்பித்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது. முஸ்லிம்களில் தனக்கு மிக மிக நெருக்கமானவர்களை அழைத்தார் ஃபைரோஸ். நடைபெறவிருக்கும் திட்டத்தைச் சொல்லி "இரகசிய குறிச்சொல்" ஒன்றும் நிர்ணயித்துக் கொண்டார். "மறுநாள் சுப்ஹு நேரத்தில் அனைவரும் அரண்மனைக்கு வெளியே வந்து காத்திருங்கள். இரகசியக் குறிச்சொல் கேட்டதும் உங்கள் பணியைத் தொடங்கிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே."
நள்ளிரவு நெருங்கியது. ஃபைரோஸும் அவர் தலைமையில் சில தோழர்களும் அந்தச் சுரங்கம் தோண்டப்பட்டிருந்த இடத்தை நெருங்கினர். வெளியிலிருந்து இலேசாய் உடைக்கும் அளவிற்கே வேலையிருந்தது. கிடுகிடுவென்று அதற்குள் நுழைந்த அவர்கள், அங்கு தயாராய் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, விளக்கைப் பற்றவைத்துக் கொண்டு, அரண்மனைக்குள் நுழைந்தனர். அஸ்வத் அல்-அன்ஸி உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு வெளியே அதாதா தயாராய்க் காத்திருந்தார். இவர்களைக் கண்டு சைகை புரிய, ஃபைரோஸ் மட்டும் அந்த அறைக்குள் நுழைந்தார். நன்றாகக் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான் அஸ்வத். நேராய் அவனை நெருங்கியவர், கத்தியாலேயே அவனது தொண்டைக் குழியில் குத்தினார். அறுக்கும்போது ஓர் ஒட்டகம் அலறுவதைப்போல பலமான ஓலமும் கதறலும் எழுந்தது அவனிடமிருந்து. அவனது பாதுகாவலர்களை அது எழுப்பிவிட, சிலர் ஓடி வந்தனர். ஆனால் வெளியே நின்று கொண்டிருந்த அதாதா, அப்பொழுதுதான் தூக்கம் கலைந்து வெளியில் வந்தவர் போல், "அது ஒன்றுமில்லை. நம்முடைய நபிக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்து கொண்டிருக்கிறது. அதுதான் அந்த சப்தம். நீங்கள் சென்று அமைதியாய் உறங்குங்கள்" என்று சொல்ல, பயபக்தியுடன் அகன்றனர் பாதுகாவலர்கள்.
அறைக்குள் வேலையை முடித்து அங்கேயே அவர்கள் விடியும்வரை காத்திருந்தார்கள். சுப்ஹு நேரம் நெருங்கியதும் கோட்டையின் மதிற்சுவருக்கு ஓடினார் ஃபைரோஸ். அதன் மேல் ஏறிநின்று கொண்டு, "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்" என்று பாங்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது அவனுடைய தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்" என்ற பாங்கு வாசகம் கூறியவர் அதைத் தொடர்ந்து, "அஸ்வத் அல்-அன்ஸி ஒரு பொய்யன் என்று நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார். அது, அதுதான் அவர்களுடைய குறிச்சொல். உள்ளே "காரியம் கச்சிதமாய் முடிந்தது" என்று வெளியில் காத்திருக்கும் முஸ்லிம்களுக்கான குறிச்சொல். பற்றிக் கொண்டது காற்றில் தீ!
ஃபைரோஸ் கூவிய அந்த வாசகம் அரை உறக்கத்திலிருந்த அரண்மனைப் பாதுகாவலர்களை திகைப்படையச் செய்து, துள்ளி எழுந்து ஓடிவந்தனர் அவர்கள். ஆனால் அதே நேரத்தில் அனைத்துத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களின் கூட்டம் வெள்ளமாய் ஓடிவந்து அந்தப் பாதுகாவலர்களை துரத்த ஆரம்பிக்க, என்ன பிரச்சனை என்று பார்க்க ஓடிவந்தவர்கள், துரத்துபவர்களைக் கண்டு பயந்தோட ஆரம்பித்தனர். மாபெரும் பரபரப்பு, கூச்சல், குழப்பம். அப்பொழுது கழுத்தை அறுத்து எடுத்து வந்திருந்த அஸ்வத் அல்-அன்ஸியின் தலையை, மதிற்சுவர் மேல் நின்று கொண்டிருந்த ஃபைரோஸ், அலேக்காகத் தூக்கி அவனுடைய ஆதரவாளர்களின் கூட்டத்தின்மேல் எறிய, விண்ணிலிருந்து பறந்து வந்து வீழ்ந்த முண்டமற்ற அந்தத் தலை அப்படியே அவர்களை ஸ்தம்பித்து நிற்க வைத்துவிட்டது. அதைக் கண்டு மேலும் உற்சாகம் மிகுந்துபோன முஸ்லிம்கள் 'அல்லாஹு அக்பர்' என்று குரலெழுப்ப, அரண்மனையே அதிர்ந்தது. துரிதமாய் இயங்கி அரண்மனையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முஸ்லிம்கள் கொண்டு வரவும் சூரியன் உதிக்கவும் சரியாக இருந்தது.
முடிந்தது கருப்பனின் கருப்பு அத்தியாயம்.
முதற் காரியமாக வெற்றிச் செய்தியைக் கடிதமெழுதி ஒரு தூதுவனிடம் கொடுத்து, "இதை மதீனாவிற்கு விரைந்து எடுத்துச் செல். நபியவர்களிடம் இந்த நற்செய்தியை அறிவி" என்று கொடுத்தனுப்பினார் ஃபைரோஸ்.
இங்கு இத்தனைக் களேபரம் நிகழ்ந்து கொண்டிருந்த அதேவேளை மதீனா சோகத்தில் ஆழ்ந்திருந்தது! நோய் வாய்ப்பட்டிருந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது உலக வாழ்வின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்தார்கள். யமனிலிருந்து இன்னம் செய்தி ஏதும் வந்திருக்கவில்லை. ஆயினும் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் நபிகளிடம் வந்து அந்த நற்செய்தி அறிவித்தார். நோயின் கொடிய வேதனையில் இருந்த நபியவர்கள் தன்னுடைய தோழர்களிடம், "அஸ்வத் அல்-அன்ஸி நேற்றிரவு கொல்லப்பட்டு விட்டான். பேறுபெற்ற மக்களைச் சேர்ந்த பேறுபெற்ற ஒருவரால் அவன் கொல்லப்பட்டான்" என்று அறிவித்தார்கள்.
"யார் அவர் அல்லாஹ்வினுடைய தூதரே?"
"ஃபைரோஸ்! ஃபைரோஸ் வெற்றியடைந்தார். தன்னுடைய ஈமானை நிறைவேற்றினார்."
யமனிலிருந்து செய்தி எடுத்து வந்த தூதுவர் மதீனாவை அடையும்போது, அதற்கு முந்தைய இரவு நபியவர்கள் உயிர் நீத்திருந்தார்கள்.
* * * * *
ஆண்டுகள் கழிந்தன. உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில் இருந்த காலம். ஃபைரோஸிற்குக் கடிதம் ஒன்று எழுதினார்.
"ஃபைரோஸ், நீர் ரொட்டியும் தேனும் உண்ணுவதில் மும்முரமாய் இருப்பதாய்க் கேள்வியுற்றேன். இந்தக் கடிதம் கிடைத்ததும் உடனே புறப்பட்டு என்னை வந்து சந்திக்கவும். இறைவனின் பாதையில் நீர் போர் புரியச் செல்ல வேண்டும்"
ரொட்டியும் தேனும் உண்டு கொண்டிருக்கிறாய் என்றால், 'உல்லாசமாய் கவலையற்ற வாழ்க்கையில் திளைத்திருக்கிறாயே' என்று அர்த்தம். இருபுறமும் போர்களில் முஸ்லிம்கள் மும்முரமாய் ஈடுபட்டிருக்க ஃபைரோஸ் போன்ற வீரர்களின் சேவை, உமருக்குக் கட்டாயத் தேவையாக இருந்தது. உடனே மதீனா கிளம்பினார் ஃபைரோஸ். வந்தடைந்தவர், "நான் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்" என்று தகவல் அனுப்ப, அனுமதியளித்து பதில் அனுப்பினார் உமர்.
ஃபைரோஸ் சென்றபோது கலீஃபா உமரைச் சந்திக்க ஒரு கூட்டம் காத்திருந்தது. தனக்குத்தான் கலீஃபா அனுமதி அளித்து விட்டாரே என்று காத்திருக்காமல் முன்னேறிச் சென்றார் ஃபைரோஸ். அப்பொழுது அங்கிருந்த ஒரு குரைஷி இளைஞன் சற்றுக் கோபமுற்று, "வரிசையில் வா," என்பது போல் தள்ளிவிட்டான். ஃபைரோஸ் அவனுடைய மூக்கிலேயே ஓங்கிக் குத்திவிட்டார்.
அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் அவன் உடனே உமரிடம் ஓடினான். "யார் இப்படிச் செய்தது?"
"ஃபைரோஸ். அதோ வாசலில் நிற்கிறார்" என்றான் அந்த இளைஞன். ஃபைரோஸ் உள்ளே நுழைய, "ஓ ஃபைரோஸ்! என்ன இது?" என்றார் உமர்.
"ஓ அமீருல் மூஃமினீன்! நீங்கள் எனக்குக் கடிதமெழுதி வரவழைத்திருந்தீர்கள். ஆனால் அவனுக்கு அப்படியேதும் அனுப்பவில்லை. எனக்கு உள்ளே நுழைய ஏற்கெனவே அனுமதி அளித்து விட்டீர்கள். ஆனால் அவனுக்கு அனுமதி அளித்திருக்கவில்லை. அப்படியிருக்கும்போது அவன் என்னை முந்திக் கொண்டு உள்ளே நுழைய முற்பட்டான். அதனால், அவன் உங்களிடம் முறையிட்டதைச் செய்தேன்"
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உமர் உடனே தீர்ப்பு வழங்கினார். "அல்-கிஸாஸ்". அதாவது ஃபைரோஸை அந்த இளைஞன் அதேபோல் திருப்பித் தாக்க வேண்டும்.
"அப்படியா? அது தான் தீர்ப்பா?" என்றார் ஃபைரோஸ்.
"ஆம்! அதுதான் தீர்ப்பு" என்றார் உமர்.
கலீஃபாவே சொல்லிவிட்டாரல்லவா, எதிர்வாதம் கிடையாது. அடிபணிந்தார் ஃபைரோஸ். முழங்காலில் மண்டியிட்டு அந்த இளைஞன் தன்னை அடிக்க வாகாய் அவர் தம் முகத்தை நிமிர்ந்து கொடுக்க, அந்த இளைஞனும் எழுந்து வந்து தாக்கத் தயாராக, "சற்றுப் பொறு, இளைஞனே!" என்று இடைமறித்தார் உமர்.
"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஒருநாள் அவர்கள், 'நேற்றிரவு பொய்யன் அஸ்வத் அல்-அன்ஸி கொல்லப்பட்டான். நேர்மையான ஒரு சேவகர் அவனைக் கொன்றொழித்தார். ஆசீர்வதிக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரால் அவன் கொல்லப்பட்டான்' என்று கூறினார்கள்"
சற்று நிறுத்திய உமர் அவனிடம் கூறினார். "அல்லாஹ்வின் தூதர் இவரைப் பற்றி ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று கூறிய இந்த செய்தி உனக்குத் தெரிந்த பின்னரும் நீ அவரை பழிக்குப் பழி வாங்க விரும்புகிறாயா?" என்று வினவினார் உமர்.
தயங்கவேயில்லை அந்த இளைஞன். உடனே பதில் வந்தது, "மன்னித்தேன் நான் இவரை!"
இதையெல்லாம் பார்த்த ஃபைரோஸ் உமரை உற்றுப் பார்த்துக் கேள்வி எழுப்பினார், "என்னை அவன் மன்னித்தது வலுக்கட்டாயச் செயலாகத் தெரியவில்லை?" கலீஃபா மட்டும் நபியவர்களின் கூற்றைத் தெரிவிக்காமல் இருந்திருந்தால் பதிலுக்கு ஃபைரோஸின் மூக்கு உடைந்திருக்கும்தானே.
யோசித்த உமர், "ஆம்" என்றார்.
"அப்படியானால் என் வாக்குமூலத்தைக் கேளுங்கள். எனது வாள், குதிரை, மேலும் என்னுடைய பணம் முப்பதாயிரத்தை நான் அவனுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்" என்று வீர நெஞ்சு ஈரத்துடன் நியாயம் பேசியது.
"உன்னுடைய மன்னிப்பு அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது சகோதரனே. அவருடைய அன்பளிப்பை நீ ஏற்றுக் கொள்," என்றார் உமர்.
ஒருவரை ஒருவர் இப்படியெல்லாம் நற்செயல்களில் முந்திக் கொண்டிருந்தால், என்ன சொல்லி எழுதுவது? விம்மும் அளவிற்கு நம் நெஞ்சங்களில் ஓர் ஒரத்தில் இஸ்லாம் விதைத்த சகோதர நேசம் மிச்சமிருந்தாலே போதுமானது.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!



.
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي"

உத்வேகமூட்டும் வாழ்க்கை - அபூதர்தா أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

மதீனாவில் அவ்ஸ்,  கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் இந்த இரு கோத்திரத்தினருக்கும் இடையில் வெட்டுப்பழி, குத்துப்பழிதான் வாழ்க்கை. சண்டை, சண்டை ஓயாத சண்டை. போர் புரிந்து ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்குக் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூத கோத்திரத்தினரின் கைங்கர்யம் அது. யூதர்களுக்கு அதில் அரசியல் சுயநலம் இருந்தது. அந்த அரேபியர்கள் வேதம் அருளப்படாத, சிலை வணங்கும் மக்கள் எனும் இளக்காரம் இருந்தது. தங்களது ஆளுமையே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும் என்ற நயவஞ்சகம் இருந்தது. இப்படிப் பல.
நபிகள் மதீனா வந்து சேர, இந்த இரு கோத்திரத்தினரும் ஒவ்வொருவராய் இஸ்லாத்தில் இணைய, அதன் பின் அவர்கள் அனைவரும் அன்ஸாரீகள் என்ற பொதுப் பெயரில் அடையாளம் காணப்பட்டனர். நபிகள் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனா வந்து சேர்ந்த அடுத்த நாளே அனைவரும் முஸ்லிமாகிவிடவில்லை. அகபா உடன்படிக்கை பற்றி முன்னர் பார்த்தோமே, அப்படி இரு அகபா உடன்படிக்கைகளின் போது இஸ்லாத்தை ஏற்றவர்கள், பின்னர் தோழர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் செய்தியறிந்து இணைந்தவர்கள் என்று பெரிய அளவில் முஸ்லிம்களின் சமூகம் ஏற்பட்டிருந்தாலும், இதர மதீனாவாசிகள் காலப்போக்கில் படிப்படியாகத்தான் இஸ்லாத்தை ஏற்றனர்.
மேற்சொன்ன கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் உவைமிர். அவர் மதீனா நகரில் நல்லதொரு வியாபாரி. ஏதோ ஒரு கடை வைத்து, வியாபாரம் புரிந்து, நல்ல வருமானம் ஈட்டியபடி அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து சாதகமான நிலை ஏற்பட்டபின், நபிகளும் மற்றும் மக்காவைச் சேர்ந்த தோழர்களும் மதீனா வந்தடைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. அப்போதும் உவைமிர் இஸ்லாத்தில் இணையவில்லை. தனது சிலை வணக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தார். இன்னம் சொல்லப் போனால் அவரது தெருவில் அவரும் அவரது குடும்பமும்தான் இஸ்லாத்தை ஏற்காதவர்கள்.
இந்நிலையில் ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு, ரமளான் மாதத்தின்போது, முஸ்லிம்களுக்கும் மக்காவிலிருந்து படை திரட்டி வந்த குரைஷியர்களுக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்ருப் போர் நிகழ்வுற்றது. ஆயிரத்துச் சொச்சம் குரைஷி வீரர்களை எதிர்க்க முந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம் வீரர்கள் பத்ருப் போருக்கு கிளம்பிச் சென்றதை வேடிக்கைப் பார்த்து வழியனுப்பிவிட்டு, தனது கடைக்கு வந்து வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் உவைமிர்.
எப்பொழுதும்போல் அன்றைய பொழுதும் விடிந்தது. உவைமிர் அதிகாலையிலேயே எழுந்து கொண்டார். அவரது வீட்டின் பிரதான பகுதியில் வீற்றிருந்த அவருக்குப் பிரியமான கடவுளின் சிலைக்குச் சென்று அன்றைய வழிபாட்டை ஆரம்பித்தார். அவரது கடையிலேயே மிகவும் உசத்தியாயுள்ள வாசனைத் திரவியத்தை எடுத்து அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்தார். யமன் நாட்டிலிருந்து ஒருமுறை வந்திருந்த அவரின் வியாபாரத் தோழர் ஒருவர் உவைமிருக்கு விலையுயர்ந்த பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாய் அளித்திருந்தார். இப்பொழுது பட்டு சால்வை அன்பளிப்பாய் அளிப்பது போன்ற பழக்கம் அப்பொழுதே அரேபியாவில் இருந்திருக்கிறது போலும். அந்த அங்கியை எடுத்துச் சிலைக்குப் போர்த்தி பயபக்தியுடன் வழிபட்டார் உவைமிர்.
இதெல்லாம் முடிவதற்குள் பொழுது புலர்ந்து விட்டிருந்தது. சரி, இன்றைய வேலையைப் பார்ப்போம் என்று கடைக்குக் கிளம்பி வெளியே வந்தால் தெருவெங்கும் திருவிழா பரபரப்பு! முஹம்மது நபியும் அவரின் தோழர்களும் குரைஷிப் படைகளை வென்றுவிட்டு மதீனா திரும்பிக் கொண்டிருந்தனர். கூடவே போரில் கைப்பற்றப்பட்ட குரைஷிப் பிணயக் கைதிகளும். கண்ணெதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் உவைமிர். ஆச்சரியமான ஆச்சரியம்! இருப்பினும் கடை திறக்க நேரமாகி விட்டது என்ற கவனம் வந்ததும், சரி, வேலையைப் பார்ப்போம் என்று ஒதுங்கி தன் கடைக்கு நடக்கத் துவங்கியவருக்கு சட்டென்று ஞாபகம் வர, வேகமாய்ப் பின்வாங்கி அந்த முஸ்லிம்களின் அணியில் இருந்த ஓர் இளைஞரைப் பிடித்தார்.
"அப்துல்லாஹ் இப்னு ரவாஹா பத்திரமாய் திரும்பி விட்டாரா?" என்று பதட்டமுடன் கேட்டார்.
அந்த இளைஞரும் இவர் சார்ந்திருந்த கஸ்ரஜ் கோத்திரம்தான். அவரிடமிருந்து உற்சாகமாய் பதில் வந்தது. "ஓ! அவருக்கென்ன? படு வீரமாய்ப் போரிட்டார். போரில் கைப்பற்றிய பெரும் சுமையுடன் பத்திரமாய் வந்து சேர்ந்து விட்டார்"
"அப்பாடா!" என்று திருப்தியாக இருந்தது உவைமிருக்கு. தனிச் சிறப்புமிக்க வரலாறு அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவினுடையது. இங்கு அது முக்கியமல்ல. ஆனால் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பு முக்கியம். அதை மட்டும் கண்டு விடுவோம். நட்பென்றால் நட்பு, அப்படியொரு நட்பு. இருவரும் சகோதர உறுதிமொழியெல்லாம் எடுத்துக் கொண்டனர். "நீயும் நானும் இன்றிலிருந்து அண்ணன்-தம்பி" என்பது போலான உறுதிமொழி. அப்படியொரு நடைமுறை அப்பொழுது அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது. மதீனா நகருக்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவ ஆரம்பித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் உவைமிருக்கு அது சரிவரவில்லை. "எனக்கு என் மதமே போதும்" என்று இருந்து விட்டார். இருந்தாலும் அன்னியோன்ய நட்பு இருவருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால்தான் அந்த அக்கறையான விசாரிப்பு.
உவைமிர் கடையைத் திறந்தார். வேலையாட்கள் வந்து சேர்ந்தார்கள். வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்க அன்றைய வியாபாரம் மும்முரமடைய ஆரம்பித்தது. வேலையில் மூழ்கிவிட்டார் உவைமிர். அதே நேரம் அவரது வீட்டில் ஒரு பிரளயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர் அறியாமலேயே.
உடன்பிறவா சகோதரரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா உவைமிர் மீது அளவற்ற பாசமும் அக்கறையும் கொண்டிருந்தவர். பலமுறை உவைமிரிடம் இஸ்லாத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டார், ஆனால் உவைமிர்தான் அசைந்து கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய ஆற்றாமையாகவே இருந்தது அப்துல்லாஹ்விற்கு. உவைமிரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருமளவு நட்பு இருந்ததால் அன்று ஒரு திட்டத்துடன் உவைமிரின் வீட்டை நோக்கிச் சென்றார் அப்துல்லாஹ். அப்பொழுது அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.
வீட்டு முற்றத்தில் உவைமிரின் மனைவி அமர்ந்திருந்தார். "தங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் சேவகியே!" என்று முகமன் கூறினார் அப்துல்லாஹ். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளதவர்களாய் இருப்பினும் அனைவரும் அல்லாஹ்விற்கு அடிமை தானே என்ற ரீதியில் பொதுவான, மரியாதையான வாழ்த்து அது.
"நும் மீதும் சாந்தி உண்டாவதாக, உவைமிரின் சகோதரரே!" என்று பதில் வந்தது.
"எங்கே உவைமிர்?"
"அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். திரும்பும் நேரம்தான். எப்பொழுதும் வந்து விடலாம்."
"நான் உள்ளே வந்து உவைமிருக்காகக் காத்திருக்கலாமா?"
"தாராளமாக!" என்று அனுமதியளித்தவர் தனது அறைக்குள் சென்று விட்டார். பின்னர் வேலை, குழந்தைகளை கவனிப்பது என்று அவரது கவனம் திரும்பி சுறுசுறுப்பாகிவிட்டார்.
அவர் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அப்துல்லாஹ், உவைமிரின் பிரத்யேக சாமி சிலை இருந்த பூஜை அறையினுள் நுழைந்தார். தன்னுடன் ஒரு சிறு ரம்பத்தை மறைத்து எடுத்து வந்திருந்தவர், கிடுகிடுவென்று அந்த சிலையைத் துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். "அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது பொய்மையே" என்று சொல்லிக் கொண்டே அந்த சிலையை வெட்டி முடித்தவர், உவைமிரின் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.
இதையெல்லாம் அறியாமல் பின்னர் பூஜையறையினுள் நுழைய நேரிட்ட உவைமிரின் மனைவி, கடவுள் சிலை துண்டு துண்டாக தரையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், கன்னத்தில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். "எனக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டாயே இப்னு ரவாஹா, இப்படி. பேரழிவை ஏற்படுத்திவிட்டாயே!" என்று பலமான அழுகை, அரற்றல்.
சற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தார் உவைமிர். வந்து பார்த்தால், சிலை இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அமர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் அவர் மனைவி. உவைமிரைப் பார்த்ததும் அவரின் கண்களில் பயம் தோன்றியது.
"ஏன், என்ன ஆச்சு?" என்றார் உவைமிர்.
கண்ணீரும் ஆற்றாமையுமாகப் பேசினார், "நீங்கள் கடையில் இருக்கும் போது உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் வந்திருந்தார். பாருங்கள், கடவுள் சிலையை என்ன செய்திருக்கிறார் என்று"
சிலை, தரையில் மரத் துண்டுகளாய் உடைந்து கிடந்தது. உருவமாய் ஒன்றுமே பாக்கியில்லை. கோபத்தில் தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது உவைமிருக்கு. என்னவாவது செய்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை பழி வாங்கத் துடித்தது மனசு. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம் முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்த போதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அது பட்டது. "இந்த சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அது தன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே!" அந்த எண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ புரிந்தது. உடனே அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை சந்திக்கக் கிளம்பி விட்டார் உவைமிர்.
இதுவரை சொல்ல விட்டுப்போன ஒரு சிறு தகவலையும் இங்குக் குறிப்பிட்டுவிட வேண்டும். உவைமிருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தர்தா.

அபூ தர்தாவை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்றார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் உவைமிர் அபூதர்தா. மதீனாவின் முஸ்லிம் ஆணுக்கும் புலம்பெயர்ந்து குடிவந்த முஸ்லிம் ஆணுக்கும் இடையில் சகோதர உறவை ஏற்படுத்தியிருந்தார் நபிகளார். குல வேற்றுமையை நீக்கி, ஒற்றுமையை வலுப்படுத்தவும் பொருளாதாரச் சுமைகளை இலேசாக்கவும் அத்தகைய ஏற்பாடு. அதனால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவிற்குப் பதிலாய் ஸல்மான் அல்-பாரிஸீ அபூ தர்தாவின் சகோதரனாகிப் போனார்.
நுழைந்த அந்த நொடியிலிருந்து நேரெதிர்த் திசைக்குத் திரும்பியது அவரது வாழ்க்கை. என்னவோ தெரியவில்லை, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய நபியின் மீதும் அவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை, வலுவாய், மிக வலுவாய் அவரது ஒவ்வொரு நரம்பினுள்ளும் அசகாய சக்தியுடன் ஊடுருவிப் பாய்ந்து விட்டது.
அபூதர்தாவின் தொழிலோ வியாபாரம். அதில் அவர் கெட்டிக்காரரும்கூட. திறம்பட வெற்றிகரமாய்த் தொழில் நடத்திக் கொண்டிருந்தவர் அவர். வெற்றிகரமான வியாபாரி இயற்கையாய்க் கணக்கிலும் கெட்டியாகத்தானே இருக்க வேண்டும். அதனால் அவர் என்ன செய்தாரென்றால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவுடன் ஓர் ஓரமாய் அமர்ந்து கணக்குப் போட ஆரம்பித்து விட்டார். தனக்கு முன் இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட தன் நண்பர்களையெல்லாம் யோசித்துப் பார்த்தார். எந்தளவு நற்காரியங்கள் அவர்கள் புரிந்திருப்பார்கள், எந்தளவு இஸ்லாத்தைக் கற்றுக் கொண்டிருந்திருப்பார்கள், எந்தளவு குர்ஆனில் தேர்ச்சிப் பெற்றிருப்பார்கள், எந்தளவு இறைவனை வழிபட்டுக் கூலி சேர்த்திருப்பார்கள் என்று கணக்குப் போட்டு, கூட்டக் கூட்ட, தன்மேல் அவருக்கு அளவற்ற கழிவிரக்கமே ஏற்பட்டு விட்டது. புதிதாய்ச் சேர்ந்த தன்னையும் அவர்களையும் ஒப்பிட்டால், இறைவனிடம் அவர்களுக்கு எத்தகைய கூலி சேமிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். "சே! எவ்வளவு தவற விட்டுவிட்டேன் நான். அன்றே இஸ்லாத்தில் சேராமல் போனேனே! நானும் இன்று அவர்களுக்கு இணையான தனவந்தனாகியிருப்பேனே!" என்றெல்லாம் அவர் மனம் அல்லாட ஆரம்பித்துவிட்டது. தனவந்தன் என்றால் பணத்தில் அல்ல! இவரிடம்தான் அது தேவையான அளவு உள்ளதே! விசனப்பட்டது தவறவிட்ட நற்கூலிக்கு.
பணம், காசு பார்த்து வெற்றியடைந்த வியாபாரி அதையெல்லாம் கட்டி ஓரமாக வைத்துவிட்டு, விசித்திரக் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். என்னவென்று சொல்வது அந்த ஈமானை? புரட்டிப் போட்டது அவரது வாழ்வை, அந்தச் சிந்தனையும் கணக்கும். உட்கார்ந்து இப்படி பச்சாதபப்பட்டுக் கொண்டிருந்தால் சரிவராது என்று ஒரு தீர்மானத்துடன் துள்ளி எழுந்தார் அபூதர்தா. இத்தனை நாள் விட்டுப் போனதை எப்படியும் ஈட்டியாக வேண்டும். என்ன செய்யலாம்? குறுக்கு வழியெல்லாம் இல்லை, ஒரே வழி. இரவு, பகலென்று பாராமல், அதிகம், அதிகமதிகம் முயற்சி செய்து  இறை வழிபாடு, நற்காரியங்கள் என்று மூச்சுவிடாமல்... இல்லை விடும் மூச்சையும் நற்செயல்களாக மாற்ற வேண்டியதுதான். இதுவே என் வழி என்று முடித்துக் கொண்டார். மிரள வைக்கும் தீர்மானம் அது.
உலக இச்சைகளையெல்லாம் மூட்டை கட்டி எறிந்துவிட்டு இறைவழிபாட்டில் முழு முதற் கவனமும் இறங்கியது. தாகத்தால் உயிர் போகும் நிலையில் இருப்பவன் தண்ணீரை எப்படித் தேடி அலைவான்? அதைப் போல இஸ்லாமியக் கல்வி ஞானத்தை அள்ளி அள்ளிப் பருக ஆரம்பித்தார் அபூதர்தா. அதுவும் சுனை பெருக்கெடுத்து வருவதைப்போல நபிகளாரிடமிருந்து நேரடியாக வரும்போது வேறென்ன வேண்டும்? குர்ஆனை எடுத்து வைத்துக் கொண்டு ஓதினார்; மனனம் செய்தார்; அதன் அர்த்தம் புரிய இறங்கியவர் அதனுள் மூழ்கியே போனார்.
பதவி இச்சைக்கும் அதிகாரத்திற்கும் தொழில் வெற்றிக்கும் பணத்திற்கும் என்றுதானே போட்டி பார்த்திருக்கிறோம். அபூதர்தா தனியானதொரு தளத்தில் தான் நிர்ணயித்துக் கொண்ட ஓர் இலக்கை நோக்கி ஒருவித வெறியுடன் ஓடிக்கொண்டிருந்தார். அதை அறவெறி என்று வேண்டுமானால் சொல்லலாம். ரலியல்லாஹு அன்ஹு!
இப்படியெல்லாம் வாழ்க்கை மாறிப் போனால் ஒரு வியாபாரிக்கு என்ன ஆகும்? தொழிலில் எப்படி கவனம் குவியும்? தனது ஓட்டத்திற்கு வியாபாரம் மிகவும் இடைஞ்சலாகப் பட்டது அபூ தர்தாவிற்கு. கடை, பணம், வேலை, ஊழியம் -என்னது இது? இப்படிக் கல்வியிலும் வழிபாட்டிலும் மனதை லயிக்கவிட மறுக்கிறதே இந்த வர்த்தகம் என்று யோசித்தார். ஒரே முடிவு தான் தோன்றியது. கடையை இழுத்து மூடிவிட்டார்! இலாபகரமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்த கடையை ஏன் மூடிவிட்டார் என்று மக்களுக்குப் புரியவில்லை.
ஒருவர் வந்து கேட்டார், "என்ன அபூ தர்தா இது? ஏன் கடையை இழுத்துப் பூட்டி விட்டீர்?"
சாந்தமாக அவரைப் பார்த்தார் அபூதர்தா. தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா? சொல்கிறேன் வா என்பதைப் போல நினைத்தவர், "இதோ வந்திருக்கிறாரே அல்லாஹ்வின் தூதர், அவரை உணர்வதற்குமுன் நான் வணிகனாய் இருந்தேன். பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் தொழிலையும் இறைவனைத் தொழுவதையும் வழிபடுவதையும் ஒருங்கே செய்துகொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதில் என்ன பிரச்சனை என்றால் நான் நாடியதை என்னால் சரியான முறையில் அடைய முடியவில்லை. அதற்கு என்ன செய்வது? எனக்கு வழிபாடுதான் முக்கியம். அதனால் தொழிலைத் துறந்து விட்டேன். யாருடைய திருக்கரத்தில் எனது உயிர் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன், பள்ளிவாசலின் வாயில் அருகே எனக்கு ஒரு சிறுகடை இருந்தால் போதும். நான் ஏதோ என் வாழ்க்கைக்குத் தேவையான சிறு பொருள் ஈட்டிக் கொண்டு அதே நேரம் ஒருவேளைத் தொழுகையைக்கூடத் தவறவிடாமல் இருந்து விடுவேன்"
எனில் வணிகம் தடுக்கப்பட்டதா? பொருளீட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? என்னவிதமான வாதம் இது என்று நம் மனதினுள் கேள்வி எழுமல்லவா? கேள்வி கேட்டவருக்கும் அந்த ஐயம் எழுந்திருக்கக் கூடும். ஆயினும் அவர் கேட்பதற்குமுன் அபூ தர்தாவே பதில் கூறிவிட்டார்:
"அல்லாஹ் வியாபாரத்தை, தொழிலை தடைசெய்துள்ளான் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அவன் குர்ஆனில் சிலரை விவரித்திருக்கிறானே, 'அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு அவர்களை வணிகமும் கொடுக்கல்-வாங்கல் செய்வதும் தடுக்கவில்லை' என்று, அந்தச் சிலரில் நான் ஒருவனாகி விட விரும்புகிறேன்"
தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, வகுப்பிலேயே முதலாவதாக வர வேண்டும்; இல்லையில்லை பள்ளியிலேயே முதலாவதாக வர வேண்டும்; அதுகூட போதாது. மாநிலத்திலேயே முதலாவதாக வரவேண்டும் என்றெல்லாம் மாணவருக்கும் பெற்றொருக்கும் ஓர் இலக்கு, ஆசை, குறிக்கோள் இருக்குமே அது புரிந்தால் இது ஓரளவு புரியும். அவரது மன ஓட்டத்தை அவருடன் ஓடிப் பார்க்க முடிந்தால் மட்டுமே முழுவதும் புரிய முடியும். ரலியல்லாஹு அன்ஹு!
கடையை மூடியதுடன் நிறுத்தவில்லை அவர். உலக வாழ்க்கையின் யதார்த்த இச்சைகளையும் முழுவதுமாய் ஒதுக்கி விட்டார். உலகின் ஆடம்பரம், கவர்ச்சி இதனையெல்லாம் பார்த்து, "நீ வேண்டாம் போ" என்று புறங்கையால் தள்ளிவிட்டு, மிக எளிமையான உணவு, மிக எளிமையான ஆடை, இது போதும் இவ்வுலக வாழ்க்கைக்கு என்று அமைத்துக் கொண்டார். சுமை அதிகமிருந்தால், தான் மேற்கொண்டுள்ள பயணத்திற்கு அது மிகவும் கடினம் என்பது அவருடைய தீர்மானம். அவருடைய தாயார் ஒருமுறை, "என் மகனுக்கு வாழ்க்கையின் அனுபவத்தைப் படிப்பதும் உணர்வதுமே பிடித்தமான ஒரு செயலாகி விட்டது" என்று பெருமிதப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு ஞானத் தேடலே அவர் வாழ்க்கையின் ஓர் அம்சமாகிவிட்டது.
அதெல்லாம் சரி - மனைவி, பிள்ளைகள்? அதுதான் அடுத்த சிறப்பு. அவர்கள் குறைபட்டு அழுததாகவோ, இதென்ன பஞ்சத்தனமான வாழ்க்கை என்று முரண்டு பிடித்ததாகவோ குறிப்புகள் இல்லை. அமைதியாய், அனுசரனையாய் கூடவே வாழ்ந்திருக்கிறார்கள் அவர்களும். எவ்வளவு பெரிய கொடுப்பினை! இப்படியான புதியதொரு வழித்தடத்தில்,
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

கடுமையான குளிரில் மக்கள் வெடவெடத்துக் கொண்டிருந்த ஓர் இரவு. பாலைவனப் பிரதேசமான அரேபியாவில் வெயிலும் கோடையும் எவ்வளவு பிரசித்தமோ அந்தளவு குளிர்கால இரவுகளில் நடுநடுங்க வைக்கும் குளிரும் பிரசித்தம். அபூதர்தாவின் வீட்டிற்குச் சில விருந்தினர் வந்திருந்தனர். வெகு தொலைவிலிருந்து வந்திருக்க வேண்டும். அன்றிரவு அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டனர். அவர்களுக்குச் சூடான உணவு வகைகள் தந்து உபசரித்தார் அபூதர்தா. இரவு வந்து உறங்கும் நேரமும் வந்தது, ஆனால் விருந்தினர்களுக்குப் போர்வை ஏதும் அளிக்கக்படவில்லை. தூங்கும் நேரம் ஆகிவிட்டது. அப்பொழுதும் போர்வை வந்து சேரவில்லை. கடுமையான குளிரில் போர்த்திக் கொள்ளாமல் எப்படி உறங்குவது? காத்திருந்து பார்த்த அவர்களில் ஒருவர், "நான் அவரிடம் சென்று கேட்டு வருகிறேன்" என்று ஆயத்தமாக, மற்றவர்களோ, "வேண்டாம், அபூதர்தா ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறார்" என்று தடுத்தார்கள். இவர் கேட்கவில்லை. அபூதர்தாவின் படுக்கையறையை அடைந்தவர் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார். அங்கே அபூதர்தா படுத்திருக்க, அருகே அவரின் மனைவி அமர்ந்திருந்தார். இருவருக்கும் சேர்த்து போர்த்திக் கொள்ள ஒரே ஒரு துண்டு. அது அந்தக் குளிருக்கு எத்தகைய கதகதப்பும் கொடுக்க இயலாத ஓர் எளிய துணி, அவ்வளவே!
போர்த்திக் கொள்ள கம்பளியோ, போர்வையோ இல்லை என்பது மட்டுமல்ல, வேறு பொருட்கள் என்பதே அங்கே இல்லை. அபூதர்தாவும் அவரின் மனைவியுமே விருந்தினர்போல்தான் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்.
விருந்தினருக்கு ஆச்சரியம் தாளவில்லை. "என்ன இது அபூதர்தா? எங்களை விட அதிகமாய் உங்களிடம் ஒன்றுமில்லையே? உங்களுடைய மற்றப் பொருட்களெல்லாம் எங்கே?" என்றார்.
"ஓ! அதுவா? எங்கள் வீடு வேறிடத்தில் உள்ளது. ஏதாவது கிடைத்தால் அதை நாங்கள் அந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது வழக்கம். வேறு ஏதும் இங்கு இருந்திருந்தால் உங்களுக்குக் கொடுத்து உபசரித்திருப்போம், மன்னிக்கவும்"
"எங்களது அந்த வீட்டை சொன்னேனில்லையா, அதன் பாதை சிரமமானது. அதற்கு அதிகமான பொருட்சுமை இருந்தால் பயணம் சரிப்பட்டு வராது. சுமை குறைவாக வைத்திருப்பவனால்தான் அந்தப் பாதையை எளிதாகக் கடக்க முடியும். அதனால் எங்களது சுமையை மிகவும் குறைத்து விட்டோம், பயணம் எளிதாகும் என்ற நம்பிக்கையில். என்ன ஏதும் புரிகிறதா?" என்றார் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு.
வாயடைத்துப் போனார் விருந்தினர். முற்றிலும் புரிந்தது. அபூதர்தாவின் பாதையும் பயணமும் புரிந்தது. ஒரு வழிப்பயணி, பயணத்தின்போது இடையில் தென்பட்ட ஒரு சிறிய ஓய்விடத்தில் அமர்ந்திருப்பதுபோல் கண்ணெதிரே அவர் அமர்ந்திருப்பது புரிந்தது. "புரிகிறது அபூதர்தா. உங்களது வெகுமதி உங்களுக்கு அருளப்படட்டுமாக!" என்ற பிரார்த்தனையை பதிலாக்கிவிட்டு திரும்பிவிட்டார் அவர்.
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

Page #

தோழர்களின் வரலாற்றைப் படிக்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் எப்பொழுதுமே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - பெருக்கல் கணக்கிற்கு வாய்பாடு மனனம் செய்து வைத்துக் கொள்வோமில்லையா அதைப்போல. நமது வாழ்க்கை முறையினாலும் உலக நடைமுறையினாலும் இல்லறம், துறவறம், வீரம், என்பதெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்ற எண்ணங்கள்தாம் நமது மனங்களில் உள்ளன. அதெல்லாம் அல்லாத வேறு பரிமானம் அவர்களுடையது. உலக இச்சையைத் துறப்பது இறைவனுக்காக; இல்லறம் நடத்துவது இறைவனுக்காக; ஒழுக்கம் பேணுவது இறைவனுக்காக! இதற்கெல்லாம் இங்கேயே கூலி கிடைக்கிறதோ இல்லையோ, சேர்த்து வைத்து பெற்றுக்கொள்வோம் மறுமையில் ஒட்டு மொத்தமாக என்று ஆகாயம் தாண்டிய லட்சியப் புள்ளி அவர்களுடையது. அதனால் போர் நடைபெறப் போகிறது இறைவனுக்காக என்று நபிகளிடமிருந்து அறிவிப்பு வந்தால் போதும். வாள், அம்பு, ஈட்டி என்று ஆயுதங்கள் ஏந்தி முதல் ஆளாகத்தான் களத்தில் நின்றார்கள் அவர்கள். அதனால் இஸ்லாத்தினுள் நுழைந்தபின் உலக வாழ்க்கையில்தான் எளிமையின் உருவாய் மாறினாரே தவிர, பின்னர் நிகழ்வுற்ற போர்களில் எல்லாம் நபிகளாருடன் இணைந்து வீர யுத்தம் புரிந்தவர் அபூதர்தா.
எளிமையின் கம்பீரம் அவர்.
நபிகளார், அபூபக்ரு (ரலி) ஆகியோரின் மறைவிற்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரம். உமர், அபூதர்தாவை அழைத்தார். உடனே புரிந்திருந்தால் நீங்கள் தோழர்கள் தொடரை ஒன்று விடாமல் படிக்கக் கூடியவர் என்று பொருள்! ஆம், அதேதான். "சிரியாவிலுள்ள ஒரு மாகாணத்திற்கு உங்களை கவர்னராக அனுப்பப் போகிறேன்" என்றார் உமர். "மாட்டேன்" என்றார் அபூ தர்தா. வற்புறுத்தினார் உமர். இசைந்துக் கொடுக்கவில்லை அபூதர்தா. ஆனால் உமருக்கு உதவும் வகையில் வேறொரு யோசைனையை இறுதியில் சொன்னார்:
"தாங்கள் வற்புறுத்துவதால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களுக்கு குர்ஆனையும்  நபிவழியையும் கற்றுக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு இமாமாக நின்று தொழவைக்கவும் வேண்டுமானால் நான் செல்கிறேன்" பட்டம், பதவி இதெல்லாம் வேண்டாம், சேவை மட்டும்தான் செய்வேன் என்பது அதன் சுருக்கம். வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக் கொண்டார் உமர். டமாஸ்கஸ் நகருக்குக் குடும்பத்துடன் கிளம்பினார் அபூதர்தா.
ரோமர்களிடமிருந்து முஸ்லிம்கள் கைப்பற்றிய சிரியா, செல்வவளத்தில் சிறந்திருந்த பகுதி. அங்கிருந்த மக்கள் செல்வமும் சுகபோகமும் ஆடம்பரமுமே வாழ்க்கை என்று சுகித்துக் கொண்டிருந்தனர். மக்கா, மதீனாவிலிருந்து அங்குப் புலம் பெயர்ந்திருந்த முஸ்லிம்களையும் அதில் ஓரளவு ஒட்டிக் கொண்டுவிட்டது.  சிரியா வந்தடைந்த அபூதர்தா இதையெல்லாம் கண்டு திகிலடைந்து விட்டார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கைக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது அங்கிருந்த சூழ்நிலை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு "எக்கேடோ கெட்டுப் போங்கள்" என்று இருக்க முடியாது அவரால். அவரால் மட்டுமல்ல, நபித்தோழர்கள் எவராலும் முடியாது. தோழர்கள் அவர்கள்! ரலியல்லாஹு அன்ஹும்.
அன்றிலிருந்து டமாஸ்கஸ் மக்களுக்குச் சிறந்த இஸ்லாமிய ஆசிரியர், ஆலேசாகர் ஆகிப் போனார் அபூதர்தா. மக்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் உரையாற்றுவது, பாடம் நடத்துவது, கடை வீதிகளில் உலாவி அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்துவது, பொறுப்பற்ற முறையில் திரிபவர்களுக்கு ஆலோசனை பகர்வது என்று நொடிப் பொழுதும் வீணாக்காமல் மக்களிடம் நன்மையை ஏவித் தீமையை தடுப்பதே தலையாயப் பணியாகிப் போனார் அவர்.
ஒருநாள் சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது சிலர் குழுமி நின்று ஒரு மனிதனை அடித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருப்பதைக் கண்டு அருகில் சென்றார் அபூதர்தா.
"என்ன பிரச்சினை?"
அவன் ஏதோ ஒரு பாவ காரியம் புரிந்து விட்டிருந்ததை அவரிடம் தெரிவித்தார்கள் மக்கள்.
"அப்படியா? அவன் ஒரு கிணற்றில் விழுந்திருந்தால் நீங்கள் அவனைக் கைத்தூக்கி காப்பாற்றியிருக்க மாட்டீர்களா?" அவர்களிடம் கேட்டார் அபூதர்தா.
"நிச்சயமாக!"
"பிறகு ஏன் இப்படி? அவனைத் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள். அதை விடுத்து அவனுக்கு அறிவுரை கூறுங்கள். அவனது பாவத்தை உணரச் செய்யுங்கள். அவன் தெளிவு பெற்று விடுவான். மேலும் அல்லாஹ் உங்களையெல்லாம் அத்தகைய பாவத்தில் விழுந்துவிடாமல் காப்பாற்றியிருப்பதற்கு அந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்"
"அப்படியானால், உங்களுக்கு அவன் மேல் வெறுப்பு ஏற்படவில்லையா அபூ தர்தா?" என்று கேட்டார்கள் அவர்கள்.
"அவன் செய்த பாவ காரியம் - அதை மட்டுமே நான் வெறுக்கிறேன். அதற்காக அவன் உளம் வருந்துவானாயின், அவனும் எனக்கு சகோதரனே, மற்றபடி அவன் மேல் எனக்கு வெறுப்பு இல்லை" எத்தகைய பக்குவம் அது! எத்தகைய உள்ளார்ந்த ஞானம் இருந்தால் அத்தகைய வார்த்தைகள் வெளிப்படும்!
அடி வாங்கி நைந்துப் போய்க் கிடந்த அந்த மனிதன் காதிலும் அது விழுந்தது. இத்தகைய சொற்கள் அத்தகைய காதுகளில் விழுந்தால் என்ன ஆகும்? அவனது கண்களிலிருந்து பொல பொலவென்று கொட்டியது கண்ணீர். விம்மல்தான் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. "என் பாவத்தை நிச்சயமாக நான் உணர்ந்து விட்டேன். இதோடு இப்பாவத்திற்கு முழுக்கு. இனி இதன் புறம் திரும்ப மாட்டேன்" என்று பாவம் அச் சகோதரனின் உள்ளத்திலிருந்து வெளியேறி, அவனது வாய்வழியே ஓடியது.
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

ஒருமுறை இளைஞன் ஒருவன் வந்து அபூதர்தாவைச் சந்தித்தான். "நபிகளாரின் தோழரே! எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்களேன்." அவரைப் பற்றி அறிந்து மக்கள் தேடித் தேடி வந்து பேசிப் பழகி தெளிவு பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அப்படித் தேடி வந்தவன்தான் அந்த இளைஞனும்.
"மகனே, ஒரு மார்க்க அறிஞனாய் இரு, அல்லது அவருக்கு ஒரு மாணவனாய் இரு, அல்லது மார்க்க அறிவுரைகளை உற்றுக் கேட்பவனாய் இரு. இந்த மூன்றில் ஒருவனாய் இல்லாமல் ஆகிவிடாதே. ஏனெனில் அது உனது அழிவிற்கு வழிவகுத்து விடும்.
"மகனே! பள்ளிவாசலை உனது வீடாகக் கருது. ஏனெனில், 'இறைவனுக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனுக்கும் பள்ளிவாசல் வீடாகும். அப்படிப் பள்ளிவாசலை வீடாக்கிக் கொள்பவர்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் ஆறுதலையும் கருணையையும் சத்தியமளிக்கிறான். மேலும் அவனது உவப்பைப் பெறும் பாதையில் அத்தகையவர்கள் நடைபோட முடியும் என்றும் அவன் வாக்குறுதி அளித்துள்ளான்' என்று  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்."
நமது காலகட்டத்தில் நம்மில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அத்தியாவசியமான அறிவுரை இது! காலா காலத்திற்குமான அறிவுரை!
ஒருநாள் அபூதர்தா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சில இளைஞர்களைக் கண்டார். வெட்டித் தனமாய்க் கதைப் பேசிக் காலங்கழிக்கும் இளைஞர் கூட்டத்தை இன்றும் நாம் பார்க்கிறோமில்லையா? அப்படியான சில வாலிபர்கள் ஓரமாய் அமர்ந்து கொண்டு, சும்மாவேனும் கதைப் பேசிக் கொண்டு, சாலையில் செல்பவர்கள், வருபவர்களையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்றார் அபூதர்தா.
"பிள்ளைகளே! ஒரு முஸ்லிமிற்கு அவனது இல்லமே பாதுகாப்பான புகலிடம். அங்கு அவன் தனது பார்வையையும் ஆசைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இப்படி சாலையோரங்களில் பொழுது கழிப்பதைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் அது அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் உங்களைத் தடுத்து விடும்; வெட்டிப் பேச்சிற்கும் வழிவகுத்து விடும்"
அன்றே இந்த எச்சரிக்கை அவர்களுக்குத் தேவைப்பட்டதென்றால், இன்று?
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.
முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அப்பொழுது சிரியாவை நிர்வகித்துக் கொண்டிருந்தார். முஆவியா பின் அபீஸுஃப்யன், நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபாவின் சகோதரர். குர்ஆன் அருளப்பெற்றபோது அதை எழுதப் பணிக்கப்பெற்றவர்களில் அவரும் ஒருவர். சிரியா நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்க உமர் அவரை அமர்த்தியிருந்தார். அவர் தன்னுடைய மகன் யஸீத் இப்னு முஆவியாவிற்கு அபூ தர்தாவின் மகள் தர்தாவை மணமுடிக்க விரும்பினார். யஸீதோ செல்வச் செழிப்பும் வளமையும் சேர்ந்து மாளிகை, சேவகர்கள், வசதி என்று வாழ்ந்து கொண்டிருந்தார். எவ்விதத் தயக்கமுமின்றி அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் அபூதர்தா. அது மட்டும் இல்லை. எவ்வித அந்தஸ்தோ, பிரபல்யமோ இல்லாத ஓர் எளிய முஸ்லிம் வாலிபனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அந்த இளைஞனின் நடத்தையும் குணமுமே அவருக்குப் போதுமானதாயிருந்தது.
இவ்விஷயம் பொதுமக்கள் மத்தியில் பெரிய செய்தியாகிப்போய், மக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். "கேட்டாயா செய்தியை! அபூதர்தாவின் மகளை யஸீத் இப்னு முஆவியா மணந்து கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் அதை மறுத்துவிட்டு பொதுமக்களில் ஒரு சாதாரண ஆளை மருமகனாக்கிக் கொண்டாராம் அவர்"
பேசிப் பேசி பொறுக்க முடியாமல் அபூதர்தாவிடமே கேட்டு விட்டனர் சிலர். "ஓ அதுவா! என் மகளுக்குச் சிறப்பான வாழ்க்கையை நான் நாடினேன். அதனால்தான்" என்று பதில் வந்தது. யஸீதிடம் இல்லாத சிறப்பா? அவருடைய தகப்பனார் முஆவியாவிடம் இல்லாத சிறப்பா? புரியவில்லை மக்களுக்கு.
"என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?"
"யோசித்துப் பாருங்கள். இட்ட ஏவலை செய்து முடிக்கக் காத்திருக்கும் அடிமைகள் திடீரென்று என் மகளுக்குக் கிடைத்தால் என்னாவது? பளிச்சிடும் மாட மாளிகை வாசம் அவளுக்கு அறிமுகமானால் அது அவள் மனதில் எத்தகைய கிலேசத்தை உண்டு பண்ணும்? இவையெல்லாம் அவளுடைய ஈமானுக்கு எத்தகைய கேடு விளைவிக்கும்? என்னாவாள் என் மகள்? புரியவில்லையா உங்களுக்கு?"
ஒவ்வொருவரும் ஏங்கிக் காத்துக் கிடக்கும் வாழ்க்கை வாசல் தேடி வந்து விழ, அது அபாக்கியம் என்று கருதி ஒதுக்கித் தள்ளிவிட்டு, எளிய குடிலுக்குத் தன் மகளை மருமகளாக்கி அனுப்பி வைத்தார் தர்தாவின் தந்தை. ஆம்! அதுதான் சிறந்தது என்று வாழச் சென்றார் மகள்.
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.
ஒருநாள் மதீனாவிலிருந்து சிரியா புறப்பட்டு வந்தார் அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப். முஸ்லிம்கள் நலன், தன் அதிகாரிகள் செயல்பாடுகள் இதெல்லாம் நேரில் கண்டறிவது அவரது நோக்கம். ஸயீத் இப்னு அம்ரு வரலாற்றிலேயே இதைப் படித்தது நினைவிருக்கலாம். அபூதர்தாவைச் சந்திக்க அவரது இல்லத்திற்கு இரவு நேரமொன்றில் வந்தடைந்தார் உமர்.
வீட்டுக் கதவின் மீது தட்டுவதற்குக் கைவைத்தால், அது உடனே திறந்து கொண்டது. அக்காலத்திலேயே தானியங்கிக் கதவுகளா? என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. என்னவென்றால் வீட்டின் கதவிற்குத் தாழ்ப்பாளே இல்லை! அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார் கலீஃபா. நுழைந்தால் ஒரே கும்மிருட்டு, ஒரு விளக்கொளியும் இல்லை. அபூதர்தா, உமரை வரவேற்று அமர வைத்தார். நாற்காலியெல்லாம் ஏதுமில்லை, சும்மா வெறும் மண்தரைதான். இருவரும் இருட்டில் சௌகரியமாய் அமர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமலேயே பழைய நட்பில் அளவளாவ ஆரம்பித்து விட்டனர்.
பேசிக் கொண்டே உமர் கையால் துழாவியபோது அபூதர்தாவின் தலையணை அகப்பட்டது. அது வேறொன்றும் இல்லை, குதிரைச் சேனம்! அதுதான் தலையணையாம். சரி தரையில் ஏதும் சமுக்காளம் இருக்குமோ என்று துழாவினார் உமர். தரையில் கூழாங்கற்கள்தான் கையில் பட்டன. அபூதர்தாவின் உடலைப் போர்த்தியிருந்த துணியும்கூட டமாஸ்கஸ் நகரின் கடுங்குளிரில் இருந்து காக்க இயலாத மெல்லியதொரு துணிதான்.
அதிர்ந்து போனார் உமர்! எளிய வாழ்க்கை வாழும் உமருக்கே அது அதிர்ச்சியாய் இருந்தது. "அல்லாஹ்வின் கருணை உம் மேல் பொழிவதாக! என்ன இது அபூதர்தா? இதை விட சௌகரியமாய் வாழ்வதற்கு நான் உமக்கு பொருள் வழங்கவில்லையா? நான் உமக்குப் போதிய பணம் அனுப்பவில்லையா?" தான் மிகவும் சொற்பத் தொகையை அவருக்கு அனுப்பி வருகிறோமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது கலீஃபாவிற்கு.
நிதானமாய் பதில் கேள்வி கேட்டார் அபூதர்தா: "அல்லாஹ்வின் தூதர் நமக்குத் தெரிவித்த ஒன்று உமக்கு ஞாபகமிருக்கிறதா?"
நிறையத் தெரிவித்திருக்கிறார் நபிகளார். அபூதர்தா எதைக் குறிப்பிடுகிறார் என்பது உமருக்கு விளங்கவில்லை. அதனால், "என்ன அது?"
"பிரயாணத்தில் இருப்பவர்கள் தேவைக்கு அதிகமாய் உலகாதாயப் பொருட்களைச் சுமக்க வேண்டாம் என்று அவர்கள் நமக்குத் தெரிவிக்கவில்லை? அவர்களுடைய மரணத்திற்குப் பின் நாம் என்ன செய்கிறோம் உமர்?"
வெடித்துவிட்டார் உமர். பீறிட்டெழுந்தது அழுகை அவருக்கு! அபூதர்தாவும் அழ ஆரம்பித்து விட்டர். முஸ்லிம் சமூகம் எப்படி உலக வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிட்டது என்பதை நினைத்து விசனப்பட்டு, விடியும்வரை அழுது கொண்டிருந்தார்கள் அந்த இரு எளிய தோழர்கள். உத்தேசம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே, அரதப் பழசான சொகுசுக்கு அடிமையாகப்போன அந்த மக்களை நினைத்தே அவர்கள் அழுதார்கள் என்றால், நம்முடைய இன்றைய நிலையை என்னவென்று சொல்வது?
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

உமர் இப்னுல் கத்தாபின் மறைவிற்குப் பிறகு உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, 'காழீ' எனப்படும் இஸ்லாமிய நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் அபூதர்தா. முஸ்லிம்களிடம் பெருகிவந்த செல்வம் அவர்களை ஆடம்பர வாழ்க்கைக்கு மேலும் மேலும் தூண்டி வருவது கண்கூடாய்த் தெரிந்தது. நபிகளாரின் காலத்திலும் அப்பொழுது அவர்களுடன் வாழ்ந்து மறைந்த தோழர்களும் எப்படியான எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று ஓயாமல் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் அபூதர்தா. எந்தக் காலத்தில் நல்ல அறிவுரை இனித்திருக்கிறது?  "என்ன இந்த முதியவர்? இறைவன் அள்ளிக் கொட்டும் வசதிகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் போடச் சொல்லுகிறாரா?" என்பதுபோல சலிப்படைந்தனர் மக்கள். அவர்களது சுகபோக உல்லாச வாழ்க்கைக்கு இவரது அறிவுரை இடைஞ்சலாகத் தோன்றியது.
பார்த்தார் அபூ தர்தா. ஒருநாள் மக்களைப் பள்ளிவாசலுக்கு வந்து குழுமச் சொன்னார். அவர்கள் வந்து சேர்ந்ததும் எழுந்து நின்றார், உரத்து உரையாற்றத் துவங்கினார்.
"டமாஸ்கஸ் நகர மக்களே, நீங்களெல்லாம் எங்களுக்கு இஸ்லாமியச் சகோதரர்கள், அண்டை தேசத்துக்காரர்கள், நம் நண்பர்கள், நம் எதிரிகளுக்கு நீங்களும் எதிரி. எனக்கு உங்களிடமிருந்து யாதொன்றும் வேண்டாம். நீங்கள் எனது செலவினங்களுக்காக எதுவும் செலவு செய்ய வேண்டியதும் இல்லை. நான் அளிக்கவிருக்கும் அறிவுரைகள் இலவசம். உங்கள் மீது நான் கொண்டுள்ள அக்கறையையும் ஆலோசனையையும் நீங்கள் மறுத்து ஒதுக்க மாட்டீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.
எனக்குச் சொல்லுங்கள். உங்கள் மத்தியில் மார்க்க அறிஞர்கள் வயது முதிர்ச்சியுற்று இறந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் உங்களின் இளைஞர்கள் யாரும் அவர்களிடமிருந்து கல்வி கற்று அவர்கள் இடத்தை நிரப்பத் தயாராகவில்லை?
அல்லாஹ் உங்களுக்குத் தேவையானதை வாரி இறைத்திருக்கிறான். நீங்களோ மேலும் மேலும் செல்வம் சேர்ப்பதில்தான் உங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் அவனுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை ஒதுக்கி வைத்து விட்டீர்கள்?
ஏன் உபயோகப்படுத்த வாய்ப்பில்லாத பொருட்களாய்ச் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் வசிக்கும் தேவைக்கு மீறிய அளவு, வீடுகளை பிரம்மாண்டமாய்க் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
ஆனால், மறுமையில் சொர்க்கத்தை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள், அதற்கென ஆயத்தம் ஏதும் செய்து கொள்ளாமலேயே!
உங்களுக்கெல்லாம் முன் சமூகங்கள் உங்களது சமூகத்தைப் போன்றே வாழ்ந்திருந்தன. அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தாங்கள் விரும்பியது கிடைத்து விடும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்கள் சேமித்து வைத்ததெல்லாம் யாதொரு மதிப்பும் இல்லாது போய்விட்டது. அவர்களது நம்பிக்கையெல்லாம் எவ்விதப் பயனுமின்றி முடிந்தது. மேலும் அவர்களது இல்லங்களோ மண்ணறையைப்போல உயிரற்றுப் போனது.
உங்களுக்கு முன் வாழ்ந்திருந்தது பிரம்மாண்டமான ஆத் எனும் சமூகம். அவர்கள் நிலங்களெங்கும் தங்களது செல்வத்தையும் சந்ததியையும் நிரப்பி வைத்திருந்தனர். இப்பொழுது, அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து இரண்டு திர்ஹம் பெருமானமுள்ள ஏதும் மிச்சமுள்ளதா? கொண்டு வந்து என்னிடம் தாருங்கள் பார்ப்போம்"
உண்மையிலேயே உணர்ச்சிகரமான உரை அது. அனைவரின் உள்ளங்களையும் தொட்டுவிட்டது. அவர் பேசி முடிக்கும் போது பள்ளிவாசலினுள் இருந்த மக்கள் கண்ணீர் விட்டு அழுத ஒலி எவ்வளவு பலமாய் இருந்ததென்றால் அவர்களின் விம்மல் பள்ளிக்கு வெளியில் கேட்டது.
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.
சிரியா நாட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது சைப்ரஸ் (Cyprus) தீவு. முஸ்லிம்களுடனான போரில் தோற்றிருந்த ரோமப் படையினர் அத்தீவிற்குத் தப்பிச் சென்று அதனைத் தங்களது கப்பற்படையின் தலைமையகமாக ஆக்கிக் கொண்டு போர்க் கருவிகளையெல்லாம் சேமித்து வைத்திருந்தனர். உமர் இப்னுல் கத்தாப் இறந்து போவதற்கு முன்னரே அதனைக் கைப்பற்ற முஆவியா திட்டமிட்டிருந்தார். அப்பொழுது அது நடைபெறவில்லை. பின்னர் உதுமான் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் சைப்ரஸ் மீது படையெடுப்பதற்கு அனுமதியளித்தார். கடல் தாண்டி நடைபெறவிருந்த போர் அது. பாலையிலும் நிலத்திலும் போர் புரிந்திருந்த முஸ்லிம் படைகளுக்கு இது நிச்சயமாய் மிகப் பெரிய சவாலான படையெடுப்பு. அதனால் யாரையும் வற்புறுத்தி படையெடுப்பில் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார் உதுமான். ஆனால் முக்கியமானவர்கள் அடங்கிய வீரர்கள் குழுவொன்று அதற்கு ஓடோடி முன் வந்தது. அப்துல்லாஹ் பின் ஃகைஸ் தலைமையில் படகில் ஏறி கடலில் கிளம்பிய படையில் அபூதர் அல் கிஃபாரீ, ஷத்தாத் இப்னு அவ்ஸ், உபாதா இப்னு ஸாமித், அவருடைய மனைவி உம்மு ஹரம் பின்த் மில்ஹான் ஆகியோருடன் அபூதர்தாவும் முக்கிய வீரர். வெற்றிகரமாய் முடிவுற்ற அப்போர் சைப்ரஸை முஸ்லிம்கள் வசமாக்கியதால் அதன் பின்னர் கான்ஸ்டன்டினோபில் (Constantinople) நோக்கி முஸ்லிம் படைகள் முன்னேற வாசலை அகலத் திறந்து கொடுத்தது. ஹிஜ்ரீ 28-29ஆம் ஆண்டு அப்போர் நடைபெற்றது.
ஏராளமான பொருட்கள் போரில் கைப்பற்றப்பட்டன. நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமாகின. அதையெல்லாம் கண்ட அபூதர்தா அழ ஆரம்பித்து விட்டார். ஜுபைர் இப்னு நாஃபிர் என்பவர், "என்ன அபூதர்தா, அல்லாஹ் இஸ்லாத்திற்கு சக்தியும் வெற்றியும் அளித்திருக்கும்போது என்ன காரணத்திற்காக அழுகிறீர்?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
"ஜுபைர்! அல்லாஹ்வோ வெற்றிமேல் வெற்றி அளிக்கிறான். வெற்றியும் ஆட்சியும் மேலோங்கி, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்கத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாகிவிட்டால் எத்தகைய அற்பர்களாய் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் மாறிவிடுவார்கள்?"
‘நேற்று மாட்சிமையுடன் ஆட்சி புரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இறைவனை அறியாமல் மறந்து, அகங்காரத்தில் இருந்ததால் இன்று முஸ்லிம்களிடம் தோற்றார்கள். அதைப் போன்ற மனோநிலைக்கு முஸ்லிம்களும் ஆளானால் இன்றைய வெற்றி அவர்களுக்கு நாளை என்னவாகும்?’ என்ற எண்ணம் ஏற்பட்டபோது அழுதார் அபூதர்தா. நியாயமான அழுகை! ஆச்சரியமான தீர்க்க தரிசனம்!
தொடர்ந்தது அவரது வாழ்க்கை.
சொச்ச காலமும் டமாஸ்கஸ் நகர மக்களுக்குக் குர்ஆனை போதித்தவாறு தொடர்ந்த அபூதர்தாவின் வாழ்க்கை, அவரது 72ஆவது வயதில் இறுதி நிலையை அடைந்தது. மரணப் படுக்கையில் கிடந்த அவரைச் சந்திக்க வந்தனர் அவரது நண்பர்கள்.
"எதனால் நோய்வாய்ப்பட்டீர் அபூதர்தா?" என்று அக்கறையுடன் விசாரித்தனர்.
"எனது பாவங்களினால்" என்று பதில் வந்தது.
"நீர் ஏதாவது விரும்புகிறீரா?"
"ஆம்! என் இறைவனின் பாவமன்னிப்பை"
பிறகு அவர்களிடம் வேண்டினார். "என்னை உச்சரிக்க வையுங்கள், 'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அவனுடைய தூதர் ஆவார்கள்'. இதை நான் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதவுங்கள்"
உச்சரித்தார். தொடர்ந்து உச்சரித்தார். உச்சரித்துக் கொண்டே உயிர் துறந்தார் அபூதர்தா. ரலியல்லாஹு அல்ஹு!
முடிந்தது அவரது இவ்வுலக வாழ்க்கை. அது ஹிஜ்ரீ 32.
அவ்ஃப் பின் மாலிக் அல்-அஷ்ஃபயி என்றொரு தோழர் இருந்தார். வீரஞ்செறிந்த போர் வீரர். முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றியபோது தனது இனத்தின் கொடியை அதன் சார்பாய் எடுத்துக் கொண்டு மக்காவினுள் நுழைந்தவர். பிற்காலத்தில் இவர் சிரியாவிற்குக் குடிபெயர்ந்து அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் அபூதர்தாவின் மறைவிற்குப்பின் ஒருநாள் கனவொன்று கண்டார்.
மிகவும் விசாலமான பசும்புல் நிலம். அதில் நிழல் தரும் வகையில் பலவித மரங்கள். அந்த நிலத்தின் நடுவில் கவிகை மாடக் கூடாரம். தோலினால் ஆன அந்தக் கூடாரத்தின் வெளியே அவரது வாழ்நாளிலேயே கண்டிராத வகையில் அழகான செம்மறியாட்டு மந்தை.
"யாருடையது இது?" என்று கேட்டார் இப்னு மாலிக்.
"அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபினுடையது" என்று யாரோ பதில் கூறினார்கள். திடீரென்று கூடாரத்தின் உள்ளிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் எட்டிப் பார்த்தார்.
"இது, எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு குர்ஆனில் வாக்குறுதி அளித்தவை. அதோ தெரிகிறதே அந்தப் பாதையின் மீது ஏறிச் சென்றால் நீர் கற்பனைகூட செய்து பார்த்திராதவற்றை கண்ணுறுவீர், செவியுறுவீர்"
"அது யாருக்குச் சொந்தமானது அபூமுஹம்மது?" அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம் கேட்டார் இப்னு மாலிக்.
"எல்லாம் வல்ல அல்லாஹ் அதனை அபூதர்தாவிற்காகத் தயாரித்து வைத்துள்ளான். ஏனெனில் அவர் உலகில் வாழும்போது தனது இரு கைகளாலும் தனது முழு சக்தியையும் கொண்டு உலகப் பொருட்களையெல்லாம் தள்ளிவிட்டுக் கொண்டே வாழ்ந்திருந்தார்"
மாபெரும் சேமிப்பொன்றின் அளவற்ற செல்வந்தனாகிப் போனார் அபூதர்தா. நம்மால் கற்பனைகூட செய்ய இயலாத செல்வம் அது.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!



.
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - அபூதர்தா أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ"