பக்கங்கள்

August 31, 2010

25 வாக்குறுதிகள் - ஏழாம் வாக்குறுதி

வெற்றி

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்." (திருமறை 40:51)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,
"...மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்."(திருமறை 30:47)

விளக்கவுரை: நம்முடைய ஈமான் சரியாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியையே தருவான். ஆனால் வெற்றிக்கு முன்னால் பல சோதனைகள் உண்டென்பதால் வெற்றி பெற முதல் காரணியாக பொறுமை மிக மிக அவசியமான் ஒன்று. உமர் இப்னுல் கத்தாப்(ரலி) மற்ற சஹாபாக்களைப் பார்த்து அவர்கள் இஸ்லாமை ஏற்ற பின் என்னென்ன கொடுமைகளை சகித்தனர் என்று கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதே போல கப்பாப் பின் அல் அரத்(ரலி) அவர்களைக் கேட்கும்பொழுது அவர்கள், அவரின் தழும்புகளும் காயங்களும் நிறைந்த முதுகை காட்டினார். அப்பொழுது உமர்(ரலி) அவர்கள் இது போன்றதொரு முதுகை நான் பார்த்ததில்லையே, உங்களுக்கு என்ன நேர்ந்தது என கேட்டார்.

கப்பாப்(ரலி) சங்கோஜத்துடன் விவரித்தார். "மக்காவில் அந்தக் காபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் எனது உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் என்னைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். எனது முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். எனது காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும்" விவரித்தார் கப்பாப்(ரலி).

இதையெல்லாம் படிக்கும்போது நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில், நாம் எத்தகைய சோதனைகளை கடந்து வந்துள்ளோம்? நபிகள் நாயகத்தினுடைய(ஸல்) வாழ்வினையும், நபித்தோழர்களின்(ரலி) வாழ்வினையும் காணும் பொழுது நமக்கு சொகுசான வாழ்வே கிட்டியுள்ளது. அவர்களின் சோதனைகளோடும் இன்னும் இஸ்லாத்தின் பெயரால் உலகின் பல இடங்களில் சோதனைகளை சகித்துக் கொண்டிருக்கும் மற்ற முஸ்லிம்களோடும் ஒப்பிடுகையில் நம்முடைய வாழ்வில் சோதனை என்ற சொல்லிற்கு பொருளே இல்லாமல் போகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு தரும் வெற்றியானது நமக்கு கிட்டும் தூரத்திலேயே உள்ளது. நம்முடைய காலத்தில் கிட்டாவிட்டாலும் நம்முடைய குழந்தைகளின் காலத்தில் கிட்டும், ஆனால், வெற்றி முஃமின்களை வந்தடைந்தே தீரும்.

என்னுரை:
இமாம் அவர்களே இவ்வளவு தெளிவாக சொல்லிய பின் என்னுரை என்று சேர்க்க எதுவுமில்லை. ஆனாலும் பொறுமை என்பது ஒரு ஆயுதம். அல்லாஹ்வினிடத்திலிருந்து எந்த உதவியை எதிர்பார்ப்பதானாலும் பொறுமை நமக்கு நிச்சயம் தேவை. அது போலவே இன்னும் பல நல் அமல்களை செய்து ஈமானை வளர்க்க வேண்டும். கீழே காணும் சில கட்டுரைகள் இத்தகைய ஈமானை வளர்க்க உதவும். நேரமிருப்பின் கட்டாயம் இன்ஷா அல்லாஹ் வாசிக்கவும்.(கட்டுரைகள் ஆங்கிலத்தில்-PDF Files)



.

No comments:

Post a Comment