பக்கங்கள்

July 28, 2011

ரமதானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்


அஸ் ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர சகோதரிகளே,

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரமதான் மாதம் நம் வீட்டில் காலடி எடுத்து வைத்து விடும் அல்ஹம்துலில்லாஹ்... ரமதான் முபாரக்... ரமதான் கரீம் முபாரக்...!

சரி, எப்பொழுதும் போல இந்த ரமதானையும், வயிறு காயவிட்டு, தொண்டை வறண்டு தூங்கித்தூங்கி எழுந்து இஃப்தாரில் ஒரு மாதத்துக்கான உணவை உண்டு மகிழ விருப்பமா அல்லது, எல்லாம் வல்ல நாயனை அதிகமதிகம் நினைவு

கூர்ந்து, ஸஹரிலும் இஃப்தாரிலும் தேவைக்கு ஏற்ப அளவாக சாப்பிட்டு, உடல் நலத்தையும், அதைவிட ஈமானின் நலத்தையும் பேணி, அதிக கூலியை பெற்றுவிட எண்ணுபவர்கள்.... வருக வருக.

அதிகமான நேரம் இல்லாததால் சுருக்கமாக நாம் இந்த ரமதானில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம். இந்த ரமதானில் நாம் அனைவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு இறைவனின் கூலிகளை பெறுவோமா??

தஹஜ்ஜுத், தராவீஹ், கடமையான தொழுகை, தினம் ஓதும் குர்’ஆன் தவிர வேறு என்ன செய்தால் இன்னும் நன்மை என காண்போம். (இதை விட நல்ல யோசனைகளும் வரவேற்கப்படுகிறது.) என் சார்பாக நான் இந்த ரமதானில்

செய்ய வேண்டியதை முடிவெடுத்துள்ளேன் இன்ஷா அல்லாஹ், அதனுடன், சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து குழுவாக, சில விஷயங்களை செய்யலாம் என்றெண்ணியுள்ளேன். இன்ஷா அல்லாஹ், இனி விஷயத்திற்கு வருவோம்.

இதில் மூன்று திட்டம் உள்ளது, எந்த திட்டத்திற்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த திட்டத்தை செயல்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

முதல் திட்டம்: திருக் குர்’ஆனின் 30 வது அத்தியாயத்தை ரமதான் மாத முடிவுக்குள் மனனம் செய்தல்.
இரண்டாவது திட்டம்: சூறா முல்க்  அல்லது சூறா வாகி’ஆ மனனம் செய்தல் (கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு ஆயத்து.)
மூன்றாவது திட்டம்: கடைசி பாகமும் தெரியும், மனனமாக தெரிந்திருக்க வேண்டிய / அதிகம் நினைவு கூர வேண்டிய (முல்க், வாகிஆ...) சூறாக்களும் தெரியும் என்பவர்களுக்கு இது.சூறா கஹ்ஃப் மனனம் செய்யும் திட்டம்.

விதிமுறைகள்.
1. திட்டத்தில் இணைய, கூலிகளை அள்ளிட விருப்பமுள்ளவர்கள் எனக்கு மெயிலில் தெரிவிக்கவும். சீராக கவனிக்க இது உதவும்.
2. திருக் குர்’ஆனின் கடைசி பாகத்தில் இன்னும் இரண்டு மூன்றே மனனம் செய்ய வேண்டியுள்ளது என்பவர்கள் முதல் திட்டத்தில் சேர இயலாது.
3. திருக் குர்’ஆனில் 10, 15 சூராக்கள் ஏற்கனவே தெரியும் என்பவர்களும் முதல் திட்டத்தில் சேரலாம். குறைந்தது பெரிய 8 சூறாவாவது இனிதான் மனனம் செய்ய வேண்டும் என்பவர்களும் முதல் திட்டத்தில் சேரலாம்.
4. கடைசி பாகமெல்லாம் முடியாது, எளிதாகவே தொடங்கலாமே என்பவர்கள் இரண்டாம் திட்டத்தில் சேரலாம். ஒரு நாளைக்கு ஒரு ஆயத்தை மனனம் செய்தாலும் போதும். மனனம் செய்த ஆயத்தை டெஸ்ட் செய்யவே 2 ரக்-அத் நஃபில் தொழுது பார்க்கலாம். போனஸ் கூலி..!! :)
5. சூறா கஹ்ஃப் முடியாது, கஷ்டம் என்பவர்கள், விருப்பமிருந்தால் வேறேதேனும் சூறாவை இங்கே குறிப்பிடுங்களேன். சூறா யாசீனும் சேர்த்தி, ஆனால் அதற்கு ஆதார ஹதீத் உள்ளதா என்கிற விவாதத்திற்கு இங்கே இடமில்லை. எந்த சூறா வேண்டுமானாலும் செய்யலாம்.
6. கடைசி பாகம், இன்னும் மற்ற சூறாக்களும் தெரியும் என்பவர்கள் தனியாக மெயிலில் தெரிவியுங்கள். இரண்டு சகோதர / சகோதரிகள் அப்படி குறிப்பிட்டாலும், இன்ஷா அல்லாஹ் அவர்களின் நடுவில் ஓர் அழகிய திட்டத்தை அமைத்துக் கொடுப்போம்.
7. அதிக நாளில்லை ஆதலால், வெள்ளி மாலை அமெரிக்க EST படி 6:00 மணி / அதற்கு முன் விவரங்கள் தரப்பட் வேண்டும்.

குழந்தைகள் திட்டம்: 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் ஒரு திட்டம் உண்டு, தாய் தந்தை, தாத்தா பாட்டி என சொல்லி தரும் அனைவருமே கூலிகளை அள்ளிடும் திட்டம் இது.வரை முறை இல்லாமல் மனனம் செய்யலாம். ஆனால்

விதிகளின் படி முதல் இடத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இன்ஷா அல்லாஹ் பரிசு உண்டு. பங்கு பெறும் குழந்தைகள் அனைவருக்கும் ‘உம்மத்’ குழுவின் சார்பாக பரிசுப் பத்திரம் உண்டு. :)

குழந்தைகளின் திட்டம் விதி முறைகள்:
1. 2 - 5 வயது குழந்தைகள் எவ்வளவு சூறா தெரிந்திருந்தாலும் இந்த மாதத்தில் மட்டும் 20 ஆயத்துக்கள் வரும் அளவு சூறாக்களை மனனம் செய்ய வேண்டும்.
2. 5-7 வயது குழந்தைகளுக்கு -- 35 ஆயத்துக்கள் அளாவு சூறா.
3. 7-10 வயது குழந்தைகள் -- 50 ஆயத்துக்கள் அளாவு சூறா.
4. ஒவ்வொரு குழுவிலும் முதல் பரிசு உண்டு.
5. விரைந்து முடித்து, சரளமாக நினைவு கூர்ந்து தஜ்வீதும் சரியாக இருத்தலே முதல் பரிசு பெறும்.


இனி, இன்ஷா அல்லாஹ் இந்த வலைப்பூவில் ரமதான் மாதம் முழுதும் என்னவெல்லாம் பார்க்க / படிக்க / பயன்பெற உதவும்:

1. சூறா முல்க்கின் ஒவ்வொரு ஆயத்தும், அதன் தஜ்வீதும், தஃப்ஸீரும் : : மனனம் செய்வதை எளிதாக்கிட.
2. 40 ஹதீத்துக்களின் தமிழாக்கம், விவரமான குறிப்புகளுடன்.
3. திருக் குர் ஆனில் றப்பனா என்று ஆரம்பிக்கும் 25 து’ஆக்கள், தமிழாக்கம், கேட்டு மகிழ/ மனனம் செய்ய ஒலியுடன்.
4. சத்திய மார்க்கத்தின் ‘தோழர்கள்’ பதிவுகள் மீள்பதிவாக.

என்ன சகோதர சகோதரிகளே... தயார் ஆகிவிட்டீர்களா??? என்னுடைய annublogs@gmail.com என்னும் முகவரிக்கு விரைவில் உங்கள் விருப்பங்களை எழுதுங்கள். நற்கூலிகளை சுமந்து கொண்டு நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கும் ரமதான் மாதத்தினை நாமும் இம்முறை நல்லதொரு திட்டங்களோடு எதிர்கொள்வோம், பயனுடைவோம்... இன்ஷா அல்லாஹ்.... அல்லாஹும்ம பலக்ன ரமதான்.... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்.

read more "ரமதானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்"

July 26, 2011

இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 
(அல்குர்ஆன் 2:183) 



அன்புள்ள சகோதர சகோதரிகளே... 

இனிய ரமலான் மாதம் அடி மேல் அடி வைத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது.... மனமுவந்த விருந்தினரை வரவேற்கும் முகமாய், பாசமும், அன்பும், விருந்தோம்பலும், 365 நாட்கள் காத்திருந்த நேரத்தின் வேதனையை மறைக்கும் முகமாய்... அப்பப்பா... எண்ணிலடங்கா எண்னங்களுடன் வாசலை நோக்கியவாறே...உங்களுடன் நானும். 

இந்த வருட ரமலானில் என்னென்ன செய்து விருந்தினரை மகிழ்விக்கலாம் என முடிவெடுத்து விட்டீர்களா??? என் முடிவுகள் இன்ஷா அல்லாஹ் நாளை... நீங்களும் தயார் செய்து கொண்டு வாருங்கள்... நல்லமல்களை ஒரு சேர முயன்று வெல்வோம்... தீயவற்றை தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்... இன்ஷா அல்லாஹ்... 

அல்லாஹும்ம பலக்ன ரமதான்..... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்... 

:))
read more "இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))"

September 9, 2010

ஈகை பெருநாள் சுன்னத்துக்கள்

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

read more "ஈகை பெருநாள் சுன்னத்துக்கள்"

September 8, 2010

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் !!

read more "ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் !!"

September 3, 2010

உத்வேகமூட்டும் வாழ்க்கை - அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر

மதீனா நகரம். ஒருநாள் இரவுநேரத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில் பின்னிரவுத் தொழுகை தொழுது கொண்டிருந்தார்கள். அது மஸ்ஜிதுந் நபவீயை ஒட்டிய வீடு. கதவைத் திறந்து நுழைந்தால் பள்ளிவாசல். அங்கிருந்து மிக இனிமையான குரலில் குர்ஆன் ஓதும் ஒலி மிதந்து வந்தது. இனிமையாக, மிக இனிமையாக, நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்து அளித்ததைப் போன்று, தூய்மையாய், துல்லியமாய் குர்ஆன் ஓதும் ஓசை அது.
தனது தொழுகை முடிந்ததும், அன்னை ஆயிஷாவிடம் நபியவர்கள், "ஆயிஷா, அது அப்பாத் பின் பிஷ்ருடைய குரலா?" என்று விசாரித்தார்கள்.
"ஆம், அல்லாஹ்வின் தூதரே!"
மிகவும் புளகாங்கிதமடைந்த நபியவர்கள் இறைஞ்சினார்கள், "யா அல்லாஹ்! அவரது அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பாயாக!"
அதைவிட வேறென்ன வேண்டும் ஒருவருக்கு? எத்தகைய பிரார்த்தனை, எத்தகைய மாமனிதரிமிருந்து! இது மட்டுமல்ல. ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, "மூன்று அன்ஸார்கள் உள்ளனர். அவர்களது தரம் ஒப்பற்றது. அவர்கள் ஸஅத் பின் முஆத், உஸைத் பின் அல்ஹுதைர் மற்றும் அப்பாத் பின் பிஷ்ரு" என்று கூறினார்கள்.
அத்தகைய நற்பேறு, நற்சான்று பெற்றவர் அப்பாத் பின் பிஷ்ரு, ரலியல்லாஹு அன்ஹு.
முதல் அகபா உடன்படிக்கையைத் தொடர்ந்து, "முஸ்அப் இப்னு உமைர் எனும் தம் தோழரை நபியவர்கள் யத்ரிபிற்கு பிரச்சாரத்திற்காக அனுப்பி வைத்தார்கள், மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது", என்று ஹபீப் பின் ஸைத் வரலாற்றில் பார்த்தோம். முஸ்அப் (ரலி), யத்ரிப்(மதீனா) வந்தபோது அப்பாத் பின் பிஷ்ரு சிறுவர். ஏறக்குறைய பதினைந்து வயதுதான் இருக்கும். வயதிற்கேற்ற துடிப்பு, கபடமற்ற குணம், புத்துணர்வு எல்லாம் அமைந்திருந்த ஒரு விறுவிறுப்பான சிறுவர் அவர். முஸ்அப் யத்ரிபில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்க, ஒருநாள் அப்பாத் அவரைச் சந்தித்தார். முஸ்அப் பிரமாதமாகக் குர்ஆன் ஓதக் கூடியவர். அழகிய குரலில் குர்ஆனை ஓதி, மக்களுக்கு இஸ்லாத்தை அறிவிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்க அவர்கள் உபயோகித்தது குர்ஆன். அதுதான் பிரதானமான பிரச்சார சாதனம் அவர்களுக்கு. இறைவனின் வார்த்தைகளைவிட உயர்ந்தது வேறென்ன இருக்க முடியும்?
குர்ஆன் எனும் அந்த அதிசயம் அவர்களைக் கவர்ந்தது. சிறுவர் அப்பாதும் அப்படியே கவர்ந்து இழுக்கப்பட்டார். நெஞ்சை மட்டும் அல்ல, அப்பாதின் ஆழ்மனதின் கருவறையைத் தட்டி எழுப்பியது அது. முஸ்அப்பின் அழகிய குரலில் வெளிவந்த குர்ஆன் வாசகங்கள், மனதை அடித்துப் புரட்டிப் போடும் அதன் கருத்து, எல்லாமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் அளவிலாத பக்தியிலும், பற்றிலும் விழுந்து விட்டார் அப்பாத். தவிர இருவரிடமும் அமைந்திருந்த நற்பண்பும் நற்குணங்களும், இருவரின் மனங்களையும் ஒரேகோட்டில் ஒன்றிணைத்து மிகவும் அன்னியோன்யமாகிவிட்டனர்.
பின்னர் நபிகள் நாயகம் யத்ரிப் குடிபுகுந்து, மதீனாவில் இஸ்லாம் பிரகாசமாய்ப் பரவ ஆரம்பித்தது. குர்ஆன் கற்றார் அப்பாத். காலையோ, மாலையோ; ஓய்வோ, அலுவலோ; ஓதினார், ஓதிக் கொண்டே இருந்தார். எந்த அளவென்றால் தோழர்கள் மத்தியில் அவர் ஓர் இமாமாக அடையாளம் காணப்படுமளவு. அவரை, 'குர்ஆனின் தோழன்' என்றார்கள் தோழர்கள். வெறும் முகத்துதி இல்லை அது. அதை மனதில் இறுத்திப் பார்த்தால் 'குர்ஆனின் தோழன்' எனும் பட்டத்தின் உயரம் புரியும். அதைப் பெற்றார் அப்பாத்.
சரி, இத்தனையும் அவர் பெற்றது முதுமையடைந்தா? முதுமையடையும் அளவிற்கு அப்பாதின் ஆயுளில் அவகாசமெல்லாம் இருக்கவில்லை. எல்லாம் இளமையில், மிக இளமையில். இது இங்ஙனமிருக்க,
ஹிஜ்ரீ நான்காம் ஆண்டு. யூதர்களின் கோத்திரமான பனூ அந்-நதீர் (بنو النظير), பிரச்சினை அப்பொழுதுதான் முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. செய்தி ஒன்று வந்து சேர்ந்தது நபியவர்களுக்கு. நஜ்து மாகாணத்தில் கத்தஃபான் கோத்திரத்தின் பிரிவினர் - முஹாரிப், ஃதஅலபா எனும் இரு அரபு குலத்தினர் இருந்தனர். இவர்களுக்கு மதீனாவில் முஸ்லிம்கள் பலமடைந்து வருவது ஒருவித ஆத்திரத்தை, கோபத்தை தோற்றுவித்தது. அதென்ன இஸ்லாம் என்று புதிய அமைப்பு, அரசாங்கம்? போய் ஒருகை பார்த்துவிடுவோம் என்று மதீனாவைத் தாக்கப் படை திரட்ட ஆரம்பித்தனர். இந்தச் செய்தி வந்துசேர, நபிகள் நாயகம் உடனே ஆலோசனை நிகழ்த்தினார்கள். மதீனாவரை எதிரிப் படைகள் வந்து தாக்க வாய்ப்பளிக்காமல் முன்னேறிச் சென்று எதிரிகளை அவர்களது தளத்திலேயே சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. உடனே ஆயத்தமானார்கள் முஹம்மது நபி. 700 வீரர்கள் கொண்ட படை ஒன்று புத்துணர்ச்சியுடன் தயாரானது. உதுமான் பின் அஃப்ஃபான் ரலியல்லாஹு அன்ஹுவை மதீனாவின் நிர்வாகப் பிரதிநிதியாக்கி விட்டு, படை நஜ்து நோக்கிக் கிளம்பியது.
மதீனாவிலிருந்து நஜ்து வெகுதொலைவிலிருந்த பகுதி. கடினமான நிலப்பரப்பை நடந்தே கடக்க வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு. உளத் திடத்தை, ஈமானை நன்கு சோதிக்கும் படையெடுப்பு அது. முஸ்லிம் வீரர்களுக்கு சரியான காலணிகளும் இல்லை, அனைவருக்கும் போதிய சவாரி வசதியும் இல்லை. ஆறு பேருக்கு ஓர் ஓட்டகம் என்ற நிலை. முறைவைத்துதான் தோழர்கள் சவாரி செய்தார்கள். நடந்து நடந்து பாதங்கள் தேய்ந்து அபூ மூஸா(ரலி)வின்,  கால் நகங்களே விழுந்து விட்டன. அனைவருக்கும் கடுமையான வலி, காயம். அதற்கெல்லாம் அசரவில்லை அவர்கள். கிழிந்த துணிகளைக் கால்களில் கட்டிக் கொண்டார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அதனால் 'தாத்துர் ரிகாஉ - ஒட்டுத் துணிப்போர்'  என்று இந்தப் படையெடுப்பிற்கு வரலாற்றில் பெயரே ஏற்பட்டு விட்டது.
பாலையில், கோடையில், பாறையில் - எதற்கு இந்த வலி? எதற்கு இந்த பிரயத்தனம்? நபி! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர் சொல்கிறாரா? போதும். அவர் வாக்கு வேத வாக்கு. அவ்வளவுதான். வேறெந்த அசௌகரியமும் அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. செய்து முடிக்க வேண்டும். அதில் செத்து மடிந்தாலும் சரியே! அப்படித்தான் அவர்கள் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டிருந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள். நம்முடைய நிகழ்காலமோ அக்காலத்தில் கனவில்கூட காண இயலாத சௌகரியத்தையும் சொகுசையும் விரல் நுனிக்கே கொண்டு வந்திருக்க, மார்க்கம் என்பது சம்பிரதாயமான அடையாளமாக மட்டுமே இன்று நம்முள் எஞ்சி நிற்கிறது.
நடந்து, விரைந்து கத்தஃபான் கோத்திரத்தினரது நக்லா எனும் பிராந்தியத்தை வந்து அடைந்தது முஸ்லிம்களின் படை. முஸ்லிம்கள் படையெடுத்து வருவது தெரியாது இருக்குமா என்ன அவர்களுக்கு? செய்தியறிந்த அவர்கள் தங்களின் பெண்களை எல்லாம் விட்டுவிட்டு, மலைக் குன்றுகளுக்கு ஏறி ஓடிவிட்டிருந்தனர். முஸ்லிம்களின் படை வந்தடைந்ததும் மெதுவாய் அவர்களிலிருந்து ஒரு கூட்டம் இறங்கி வந்து எதிர் தரப்பில் தயாரானது. அவர்களும் போர் தொடங்கவில்லை, முஸ்லிம்களும் தொடங்கவில்லை. அஸ்ருத் தொழுகை நேரம் நெருங்கி விட்டிருந்தது. எதிரிகள் தாக்கக்கூடும் என்ற நிலை இருக்கும்போது அனைவரும் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபட இயலாது என்ற நிலை. இங்கு இந்தப் படையெடுப்பில்தான் போர்க் காலங்களிலும், அச்சமான தருணங்களிலும் தொழக்கூடிய தொழுகை முறை "ஸலாத்துல் கவ்ஃப்" அறிமுகமானது. ஒருபாதிப் படையினர் காவல் காக்க, மறுபாதிப் படையினர் தொழுகையின் முற்பகுதியில் கலந்து கொண்டு தொழுது முடிக்க,  பின்னர் இவர்கள் காவல் காக்க முதல்பாதிப் படையினர் தொழுகையின் பிற்பகுதியில் கலந்து கொண்டு தொழுது முடித்தனர்.
முஸ்லிம்களின் படையினரைவிட எதிரிகள் தரப்பில் கூடுதல் ஆள்பலம் இருந்ததுதான். ஆனாலும் அவர்கள் போரில் இறங்கவில்லை. திகைப்பு இருந்தது அவர்களுக்கு. நபியவர்களைப் பற்றியும் முஸ்லிம்களின் வீரமும் வெற்றியும் கேள்விபட்டிருந்தார்களா? நாம் சென்று தாக்கலாம் என்று நினைத்தால் அவர்களே நம் வாசலில் வந்து நின்று கொண்டு சவால் விடுகிறார்களே என்ற அச்சம் மிகுத்து விட்டது. அது, அந்த அச்சம், அதை அப்படியே சாதகமாக்கிக் கொண்டு மேற்கொண்டு போர் நிகழ்த்தாமல் மதீனா திரும்பினார்கள் முஹம்மது நபி.
மீண்டும் நெடிய பயணம். வழியில் கணவாய் ஒன்றைக் கடந்தது படை. அங்கேயே தங்கி இரவில் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள் நபியவர்கள். ஒட்டகங்களை இளைப்பாற விட்டு, தங்குவதற்குக் கூடாரமெல்லம் அமைத்தபின், நபியவர்கள் தமது படையினரிடம் கேட்டார்கள். "இன்றிரவு நமது படையைக் காவல் காக்கப் போவது யார்?"
அப்பாத் இப்னு பிஷ்ரு, அம்மார் பின் யாஸிர் ஆகிய இருவரும் எழுந்து காவலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அம்மார் பின் யாஸிர் முஹாஜிர். மக்காவிலிருந்து மதீனா ஹிஜ்ரத் மேற்கொண்டவர். அப்பாத் இப்னு பிஷ்ரு மதீனா நகரின் அன்ஸாரி. இருவரையும் உடன் பிறவா சகோதரர்களாக்கி வைத்திருந்தார்கள் நபியவர்கள். இத்தகைய உறவு பற்றி அபூதர்தா வரலாற்றில் வாசித்தது நினைவிருக்கலாம். சகோதரர்களின் காவல் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அலுத்துக் களைத்திருந்த படை உறங்கச் சென்றது.
இந்தப் படையெடுப்பின்போது எதிரித் தரப்புப் பெண் ஒருவரை முஸ்லிம் வீரர் ஒருவர் பிணைக் கைதியாகக் கைப்பற்றியிருந்தார். அந்தப் பெண்ணின் கணவனோ அப்பொழுது மலைக் குன்றில் ஏறி ஓடி ஒளிந்திருந்தான். முஸ்லிம்களின் படை திரும்பிச் சென்றவுடன் கீழிறங்கி வந்தவன், தன் மனைவி கைப்பற்றப்பட்டு சென்றது அறிந்தான். ஆவசேமுற்றவன், முஹம்மதையும் அவரது படையினரையும் சென்று பிடித்து சிலரது இரத்தத்தைச் சிந்தாமல் திரும்ப மாட்டேன் என்று தனது கடவுளர்களான அல்-லாத், அல்-உஸ்ஸாமேல் ஆணையிட்டு விட்டு, முஸ்லிம்களின் படை சென்ற பாதையில் பின்தொடர ஆரம்பித்தான்.
இங்கு, கணவாயின் முகப்பிற்குக் காவல் காக்கச் சென்றார்கள் சகோதரர்கள் இருவரும். அப்பாத் இப்னு பிஷ்ரு அம்மாரிடம் கேட்டார்: "இரவின் எந்தப் பாதியில் நீ உறங்க விரும்புகிறாய். முற்பாதியிலா? பிற்பாதியிலா?"
"நான் முற்பாதியில் உறங்குகிறேன்" என்ற அம்மார், அப்பாதைக் காவல் காக்க நிறுத்திவிட்டு படுத்தார், உறங்கி விட்டார். அத்தகைய களைப்பு, அசதி.
ஏதும் அரவமற்ற, அமைதியான, அழகான இரவு. நட்சத்திரங்கள் மினுமினுக்கும் வானம். சில் வண்டுகளின் ரீங்காரம். அலாதியான ஏகாந்த நிலை அது. அப்பாதின் மனம் ஏங்க ஆரம்பித்தது. உறங்க அல்ல, குர் ஆன் ஓத! இந்த அமைதியான இரவில் குர்ஆன் ஓதித் தொழுதால்?
எத்தகைய கடுமையான பயணம்? எத்தகைய அலுப்பு களைப்பு ஒவ்வொருவருக்கும்? ஆனால் இந்த எண்ணம் தோன்றியவுடன் உடனே தயாராகி தொழ ஆரம்பித்து விட்டார் அப்பாத். அவருக்குக் களைப்பைப் போக்கும் அருமருந்தும் குர்ஆனல்லவா?
மெய்மறந்து அழகிய குரலில் உணர்ச்சி ததும்ப சூரத்துல் கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார் அப்பாத். மனமும் உடலும் முற்றும் முழுக்க தொழுகையில் லயித்து விட்டிருந்தது. அருவி நீராய் சலசலத்து அழகியதொரு ரீங்காரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது குரல். நேரம், சூழல், நிலை அனைத்தையும் மறந்து வேறோர் உலகத்தில் பாய்ந்து விட்டிருந்தது அவரது மனது. அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான் முஸ்லிம் படையைப் பின்தொடர ஆரம்பித்திருந்த அந்தக் கைதியின் கணவன். அவனைக் கவனிக்கவேயில்லை அப்பாத். கணவாயை நெருங்கியவன் அப்பாத் தொழுது கொண்டு நிற்பதைக் கண்டு, அங்குதான் முஸ்லிம் படைகள் தங்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்தவன், தாமதிக்கவில்லை. தனது அம்பை எடுத்து வில்லில் பூட்டி, குறி பார்த்தான். எய்தான். குறி சற்றும் தப்பவில்லை.
தொழுது கொண்டிருந்த அப்பாதை அம்பு தைத்தது. ஓதிக் கொண்டிருந்த அப்பாத் பதட்டமோ பதைப்போ எதுவும் கொள்ளாமல் அம்பைத் தனது உடலில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டு, தனது கிராஅத்தைத் தொடர்ந்தார். தன் அம்பு குறி தப்பி விட்டதா? ஒன்றும் புரியாமல் மறுமுறை அம்பை எய்தான் அவன். இதுவும் அவர் உடலில் வந்து தைத்தது. மீண்டும் அதேபோல் அதைப் பிடுங்கி எறிந்து விட்டுத் தொழுகையை தொடர்ந்தார் அப்பாத். வலித்திருக்காது? இரத்தம் பீறிட்டிருக்காது? அது என்ன சிறிய கொண்டை ஊசியா? வலித்தது! குருதி பெருக்கெடுத்தது! ஆனால் அந்த வலி, அந்த அவஸ்தை எதுவும் அவர் மனதில் நிறைந்திருந்த குர்ஆனைத் தாண்டி மூளையில் பதிவாகவில்லை.
மூன்றாவது முறையாகவும் அம்பை எய்தான் அவன். இம்முறை அதைப் பிடுங்கிய அப்பாத், ஸஜ்தா நிலையை அடைந்து தொழுது முடித்து, தவழ்ந்து நகர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அம்மாரைத் தட்டி எழுப்பினார்.
"எழுந்திரு அம்மார். எனக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது"
திடுக்கிட்டு விரைந்து எழுந்தார் அம்மார். அப்பொழுதுதான் மற்றொருவரும் அங்கு காவலுக்கு இருப்பதைக் கண்ட அவன், அதற்கு மேல் நிற்காமல் ஓடிவிட்டான்.
அப்பாதை நெருங்கி, பார்த்தார் அம்மார். மூன்று காயங்களிலிருந்தும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
"ஸுப்ஹானல்லாஹ்! முதல் முறை தாக்கப்பட்டவுடனேயே ஏன் என்னை எழுப்பவில்லை அப்பாத்?" என்று ஆச்சரியம், அதிர்ச்சி விலகாமல் கேட்டார் அம்மார்.
"தொழுகையில், ஓதிக் கொண்டிருந்தேன். சூராவின் நடுவில் இருந்தேன். அதை முழுதும் ஓதி முடிக்குமுன் நிறுத்த நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்! நான் குர்ஆன் ஓதுவது தடைபடுவதைவிட நான் மரணிப்பதே மேல். ஆனால், அல்லாஹ்வின் தூதர் படைக்குக் காவலாக இருக்கும்படி என்னைக் கட்டைளையிட்டிருக்க,  எனது மரணத்தினால் படைக்கு பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்றுதான் பயந்தேன்" என்று பதில் வந்தது.
தொழுகையிலும் குர்ஆனிலும் பின்னிப் பிணைந்து, அனைத்தையும் மறந்து அதிலேயே லயித்துப்போன அந்த மனதை எப்படி விவரிப்பது? ரலியல்லாஹு அன்ஹு!
*****
காலம் கழிந்தது. அபூபக்ரு (ரலி) கலீஃபாவாக இருந்த காலகட்டம். பொய்யன் முஸைலமா அட்டூழியத்தை ஹபீப் (ரலி) வரலாற்றிலேயே காண ஆரம்பித்தோம் இல்லையா? இங்கு மீண்டும் அவனது அத்தியாயத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. பின்னர் மேலும் பல தோழர்களின் வரலாற்றில்கூட இவன்மேல் நாம் இடர வேண்டியிருக்கும். முஸைலமாவை அடக்கப் புறப்பட்ட படைகளுள் ஒரு பிரிவின் முன்னணிப் படைவீரர் அப்பாத் இப்னு பிஷ்ரு. அப்பொழுது முஸைலமாவின் படைகளுடன் யமாமாவில் கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. தினமும் பல உயிரிழப்புகள். இருந்தும் முஸ்லிம் படைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி முன்னேற இயலவில்லை. எதிரித் தரப்பு கடுமையாய்ச் சண்டையிடுவது ஒருபுறமிருக்க, முஸ்லிம் படைகளுள் முஹாஜிரீன்களும் அன்ஸார்களும் ஒருவரை ஒருவர் குறைகூறி நிற்பதைக் கண்டார் அப்பாத். மட்டுமல்லாமல், போரின்போது பின்னடைவு நிகழ்ந்திருந்தால் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதையும் கண்டார் அப்பாத். இது அன்ஸார்களுள் ஒருவரான அப்பாதிற்கு மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைய வேண்டுமென்றால், அன்ஸார்களையும், முஹாஜிரீன்களையும் தனித்தனிக் குழுவாகப் பிரித்து, தனி அடையாளப்படுத்தி, பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்து, உக்கிரமுடன் போரிட வைக்க வேண்டுமென்று தோன்றியது அப்பாதிற்கு. அவ்விதம் செய்தால் ஒருவர் மற்றவரைக் குற்றம் சுமத்த முடியாது. தவிர தத்தம் குழு சாதித்துக் காட்ட வேண்டுமென்ற உத்வேகம் அதிகமாகும். அதுவே சரியான போர் தந்திரமாயிருக்கும்.
அன்றிரவு உறங்கிய அப்பாத் கனவொன்று கண்டார். வானம் திறந்து கொள்ள, அதனுள் நுழைந்தார் அப்பாத். அவரை உள்வாங்கிக் கொண்ட வானம் ஒரு வீட்டின் கதவைச் சாத்துவதைப்போல் தன் கதவைச் சாத்திக் கொண்டது. காலையில் கண்விழித்தவர் அதை சகதோழர் அபூ ஸயீத் அல்-குத்ரீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் தெரிவித்தார்.
"அபூ ஸயீத்! அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்! நான் வீர மரணம் அடைவேன் என்றுதான் அதற்கு அர்த்தம் காண்கிறேன்"
அது பிழையற்ற மொழிபெயர்ப்பு. விடிந்ததும் போர் தொடர்ந்தது. போர்க்களத்தில் இருந்த ஒரு முகட்டின்மேல் விரைந்து ஏறி நின்றார் அப்பாத். இறைந்து அழைத்தார்.
"அன்ஸார் மக்களே! வாருங்கள், மற்றவர்களைவிட விரைந்து முன்னேறுங்கள்! உங்களது வாளின் உறைகள், இடுப்பில் தொங்குகிறதே அதை உடைத்து எறியுங்கள். தேவையில்லை அது இனி! நீங்கள் உயிருடன் நின்று கொண்டிருக்க, இஸ்லாத்தை எதிரிகள் கைப்பற்ற அனுமதிக்காதீர்கள்!"
அது பலமான கூவல்! உணர்ச்சிகரமான அழைப்பு! விண் அதிர கதறிக் கொண்டிருந்தார் அப்பாத். சரியாய் வேலை செய்தது அது. விளக்கை நோக்கி விரையும் விட்டிலாய் நானூறு அன்ஸார்கள் அங்கு வந்துக் குழுமி விட்டனர். அதன் தலைமையில் தாபித் பின் ஃகைஸ், அல் பர்ரா இப்னு மாலிக் மற்றும் அபூ துஜானா, ரலியல்லாஹு அன்ஹும். இந்த அபூ துஜானா நபியவர்களின் வாளை ஏந்திய பெருமை பெற்றவர்.
இந்த வீரர்களுடன் ஓர் அணியாய் முன்னேறிச் சென்றார் அப்பாத். எதிரிகளின் படை வரிசைக்கு இடையில் புகுந்து, தனது வாளால் சரசரவென்று அவர்களை வெட்டிக் கொண்டே விறுவிறுவென்று ஓடிக் கொண்டிருந்தார் அவர். முஸ்லிம்கள் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் போரிட்ட நாள் அது. எதிரிப்படை அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தெறித்து ஓடிக் கொண்டிருந்தது பொய்யன் முஸைலமாவின் படை. இறுதியில் பொய்யன் கூட்டத்து மனோ திடமெல்லாம் அன்று நொறுங்கி விட்டிருந்து. பின்வாங்கிய அவனது படை, ஒரு பழத்தோட்டத்திற்குள் சென்று புகுந்து கொண்டது. அங்கு வைத்து முஸைலமாவைக் கொன்று, போரை முஸ்லிம்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். பின்னர் அந்தத் தோட்டம், "மரணத் தோட்டம்" என்றே வரலாற்றில் பெயர் பெற்றுவிட்டது.
அந்தப் பழத்தோட்டத்தின் சுவரில்தான் அப்பாத் வீரமரணம் எய்தினார். அவரது உடல், போர்க் காயங்களால் அடையாளம் தெரியப்படாத அளவிற்கு சிதிலமடைந்திருந்தது. இரத்தத்தில் மூழ்கி முங்கியிருந்தது அவரது உடல். பிறப்பு அடையாளக் குறிகளைக் கொண்டுதான் அவரது உடலையே அடையாளம் காண முடிந்தது.
குர்ஆன், தனது குருதியிலும் ஆன்மாவிலும் கலந்திருந்தவர் அவர். அதன் இனிமையிலும், சந்தத்திலும் மட்டுமே ஆனந்தம் கண்டு, பள்ளிவாசலிலும் தியானத்திலும் அடங்கிவிடவில்லை அந்த மனது. இறை வார்த்தைகளின் அர்த்தம் அணுஅணுவாய் இரத்த அணுவில் கலந்திருந்தது. அதனால்தான் தொழுகையில் மட்டுமல்ல, போர்க் களத்திலும் முன்வரிசையில் வாளேந்தி நிற்க முடிந்தது; மரணம் துச்சம் எனக் கருத முடிந்தது. பொய்யன் முஸைலமாவுக்கு எதிரான அந்தப் போரில் தனது 26ஆவது வயதில் வீர மரணமடைந்தார் அப்பாத் பின் பிஷ்ரு.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!



.
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر"

உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஹகீம் பின் ஹிஸாம் ‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறப்பதற்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அபூர்வம் நிகழ்ந்தது. மக்காவில் அன்று ஏதோ ஒரு திருநாள். விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே அபூர்வமாய்த் திறக்கப்படும் கஅபாவின் கதவைத் திறந்து அதனுள்ளே சிறப்பு வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. காணாததைக் காண மக்களுக்கெல்லாம் ஆவல். கஅபாவின் உள்ளே நுழைந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, கும்பலாக சிலர் முண்டியடித்துக் கொண்டு தரை மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள அந்தக் கதவின் மேலேறி உள்ளே சென்று பரவசத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் நிறைமாதச் சூல் கொண்ட பெண்ணொருவர். உள்ளே இருக்கும்போது அங்கேயே அவருக்குத் திடீரென்று பேறுகால வலி ஏற்பட்டுவிட்டது. உடனே வெளியே வரமுடியாத சூழ்நிலை. அவ்வளவு கூட்டம், நெருக்கம். அவசர அவசரமாக அங்கேயே ஒரு தோல்விரிப்பைப் பரப்பி, அவரைப் படுக்க வைத்து, உலக வரலாற்றிலேயே யாருக்கும் வாய்க்காதப் பெருமையை சுமந்து கொண்டு ஆண் குழந்தையொன்று பிறந்தது.
அவர், ஹகீம் பின் ஹிஸாம் ரலியல்லாஹு அன்ஹு!
மக்காவில் குவைலித் இப்னு அஸத் (خويلد بن أسد‎) என்றொரு புகழ் பெற்ற வர்த்தகர் இருந்தார். அவருக்கு அவ்வாம் இப்னு குவைலித், ஹிஸாம் இப்னு குவைலித் எனும் இரண்டு மகன்களும் ஹாலா பின்த் குவைலித், கதீஜா பின்த் குவைலித் எனும் இரண்டு மகள்களும் இருந்தனர். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் முதல் மனைவியல்லவா. அவருடைய சகோதரர் ஹிஸாமினுடைய மகன்தான் கஆபாவினுள்ளே பிறந்த ஹகீம் பின் ஹிஸாம்.
செல்வமும் செல்வாக்கும் உள்ள உயர்குடி வம்சத்தில் பிறக்க நேரிட்டதால் ஹகீமினுடையது சொகுசான வாழ்க்கை. தவிர அறிவுக்கூர்மை, நல்லொழுக்கம், பெரும்பண்பு ஆகியனவும் அவருக்கு இயல்பாக அமைந்து விட்டிருந்தன. இந்த அத்தனை சிறப்பும் மாண்பும் ஹகீமை அவரது வாலிப வயதிலேயே குரைஷி மக்கள் தங்களுடைய ஒரு முக்கியத் தலைவராய் நியமித்துக் கொள்ளப் போதுமானதாயிருந்தது. "ஹகீம், வாருங்கள் இங்கு. இன்றிலிருந்து ரஃபாதா துறை உங்கள் பொறுப்பு" என்று பதவி அளித்து விட்டனர்.
ரஃபாதா?
உருவ வழிபாடு மிகைத்திருந்த அந்தக் காலகட்டத்திலும் மக்காவிற்கு மக்கள் யாத்திரை வருவதென்பது நடந்து கொண்டுதான் இருந்தது.
என்ன வழிபாடு?
எல்லாம் சிலைகளுக்குத்தான்! மக்கத்துக் குரைஷியர்கள் யாத்ரீகர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே சில துறைகளை ஏற்படுத்தி, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் வசம் இருந்தன. ஹிஜாபா, சிகாயா, ரஃபாதா, நத்வா, கியாதா மற்றும் லிவா என்பன துறைகளின் பெயர்கள்.
ஹிஜாபா எனும் துறை கஅபா ஆலயத்தைப் பராமரிக்கவும் அதன் சாவிகளின் பாதுகாவல் பொறுப்பையும் ஏற்றிருந்தது.
சிகாயா, யாத்ரீகர்களுக்குக் குடிநீர் வழங்கவும் ஈச்ச மதுபானம் வழங்கவும் பொறுப்பு.
ரஃபாதா - உணவு வழங்க.
நத்வா, இந்த அனைத்துக் கூட்டவைகளுக்கும் தலைமை.
கியாதா, லிவா ஆகிய இரண்டும் சற்று மாறுபட்ட துறைகள். கியாதா போர்க்காலங்களில் போர்த் தலைமைக்கும், லிவா ஈட்டியில் கொடியை ஏந்தி, படையுடன் செல்வதற்கும் பொறுப்பு.
இதில் ரஃபாதா எனும் உணவு மற்றும் யாத்ரீகர்களின் தேவையை நிறைவேற்றும் துறைக்குத் தலைவரானார் ஹகீம். அந்தளவு செல்வாக்கு. இதில் மற்றொரு அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அது பணம் ஈட்டும் துறையல்ல, தன் கைக்காசை எடுத்து தானமளிக்க வேண்டும். அக்கறையுடனும் ஆர்வமுடனும் பெருமையுடனும் அதன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் ஹகீம்.
இளம் பிராயத்திலிருந்தே முஹம்மது நபிக்கும், ஹகீமிற்கும் இடையில் நல்ல நட்பிருந்தது. ஹகீம் ஐந்து வயது மூத்தவர்தான். இருப்பினும் மிகவும் நெருக்கம். இந்நிலையில் கதீஜா அம்மையாருடன் முஹம்மது நபிக்கு திருமணம் நிகழ்ந்தவுடன் அத்தையின் கணவர் என்ற அழுத்தமான உறவொன்றும் சேர்ந்து கொண்டது.
ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு என்ற புகழ்பெற்ற நபித்தோழர் அனைவராலும் அறியப்பட்டவர். ஸைதின் சிறு வயதில் குலங்களுக்கிடையேயான போர் ஒன்று ஏற்பட்டது. அதில் ஸைத் இப்னு ஹாரிதா கைப்பற்றப்பட்டு, பின்னர் அடிமைச் சந்தைக்கு விற்பனைக்கு வந்து சேர்ந்தார். ஹகீம் இப்னு ஹிஸாம்தான் அவரை விலைக்கு வாங்கி, தன்னுடைய அத்தை கதீஜாவிற்கு அன்பளிப்பாய் வழங்கினார். இந்தக் காலத்துக் கோடீஸ்வரர்கள் தம் அன்பையும் பெருமையையும் வெளிக்காட்டுவதற்காக கார், பங்களா என்று பிறருக்கு அன்பளிப்பு வழங்குவதுபோல அடிமைகளை அப்படி அன்பளிப்பு அளிப்பது அக்காலத்தில் இருந்து வந்த வழக்கம். பின்னர் முஹம்மது நபியை கதீஜா பிராட்டியார் மறுமணம் புரிந்து கொண்டபோது, சிறந்தவராய் வளர்ந்து வந்த ஸைதை அவருக்கு அன்பளிப்பாய் வழங்கினார் அன்னை கதீஜா. அன்று அவ்விதம் நபிகளை வந்தடைந்த ஸைதிற்கும் முஹம்மது நபிக்கும் இடையே ஏற்பட்ட பாசம், பெற்ற தந்தை வந்தழைத்தும் "பெருமானாரை அண்மி வாழவே விருப்பம்" என்று மறுதலித்த ஸைதின் தனி வரலாறு. அதை இன்ஷாஅல்லாஹ் பின்னர் பார்ப்போம்.
இவ்வளவு அன்பு, நெருக்கம், உறவு அனைத்தும் இருந்து வந்த நிலையில், முஹம்மது நபி தனக்கு நபித்துவம் அளிக்கப்பெற்றுள்ள செய்தியை அறிவித்து இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்ததும் ஹகீம்தானே முதலில் அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்? நடக்கவில்லை! ஹகீம் தனது மதமே உசத்தி என்று தங்கிவிட்டார். மட்டுமல்லாமல்,
முஹம்மது நபியின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தனிப்பட்ட விரோதமெல்லாம் இல்லாத நிலையிலும், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற பத்ரு, உஹதுப் போர்களிலும குரைஷிகளுடன் இணைந்து கலந்து கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு. சகவாசம் சரியில்லாத பட்சத்தில் குற்றங்களுக்கு உடந்தையாகத்தானே நேரிடும். எனினும், அத்தகைய போர்களிலும் முஸ்லிம்களுக்கு அணுசரனையாய் ஹகீம் செயல்பட முனைந்ததாகத்தான் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பத்ரில் போர் மேகம் சூழ்ந்திருந்தது. குரைஷிகள், மதீனாவின் எல்லையைக் கடந்து வரும் அபூஸுஃப்யானின் வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றப் படையெடுத்து வந்திருந்தனர். ஆனால் அபூஸுஃப்யானோ வேறு மார்க்கமாக நலமே மக்கா சென்றடைந்து விட்டிருக்க, போருக்கான முக்கிய முதற் காரணம் அடிபட்டுப் போயிருந்தது. ஆயினும் அதற்குச் சில நாட்களுக்குமுன் முஸ்லிம் படையினருக்கும் அம்ரிப்னு ஹள்ரமிக்கும் இடையில் ஏற்பட்ட கலகத்தில் இப்னு ஹள்ரமி கொல்லப்பட்டு, வர்த்தகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மக்காவில் அளவிலாத வகையில் துன்புறத்தப்பட்டு வீடு, வாசல், நிலம் என அனைத்தையும் துறந்து வெளியேறி மதீனா வந்தடைந்திருந்த முஹாஜிர்களுக்கு அது ஒரு சிறிய இழப்பீடாகக் கருதப்பட்டது.
இப்பொழுது அபூஸுஃப்யான் தப்பித்து விட்டிருந்தாலும், "வந்ததுதான் வந்து விட்டோம். அந்த முந்தைய நிகழ்வைக் காரணமாக வைத்து எப்படியும் போர் நிகழ்த்தி, இந்த முஸ்லிம்களுக்கு இன்றுடன் முடிவுரை எழுத வேண்டியதுதான்" என்று குரைஷிகளின் மற்றத் தலைவர்கள் முடிவெடுத்திருந்தனர். யுத்தம் என்று ஏற்பட்டால் எதிர்கொள்ளப் போவது தத்தமது உறவினர்களை. இருதரப்பிலும் உயிரிழப்பு இருக்கும் என்பதை யோசித்த நபியவர்கள், போரைத் தவிர்க்கவே நினைத்தார்கள். தன்னுடைய சொந்த இன மக்களைப் போரில் எதிர்கொள்ள நபிகளுக்கு மிகுந்த தயக்கமிருந்தது. அனாவசிய உயிரிழப்பைத் தவிர்க்கவே அவர்கள் நாடினார்கள். எனவே போரைத் தவிர்க்கும் முயற்சியாக, உமரிப்னுல் கத்தாபை அவர்களிடம் அனுப்பி வைத்து, அவர்களைத் திரும்பிச் செல்லும்படியும், போரில் குரைஷிகளை எதிர்கொள்ள, தான் விரும்பவில்லை என்றும் நபியவர்களின் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுடனான நேருக்கு நேரான ஒரு போரைத் தவிர்க்க, குரைஷிகள் தரப்பில் பெரும் முயற்சி எடுத்தவர் ஹகீம் இப்னு ஹிஸாம். உமர் மூலமாகத் தகவல் வந்து சேர்ந்ததும், குரைஷிகளிடம் ஹகீம் பேசினார்: "யோசித்துப் பாருங்கள். இது நல்லதொரு வாய்ப்பு. ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு மிகவும் நல்லது". போர் வெறியில் இருந்த குரைஷிகளிடம் அது காதிலேயே நுழையவில்லை.
பின்னர், உத்பா இப்னு ரபீஆவிடம் சென்றார் ஹகீம். "உத்பா! நீர் குரைஷிகளின் பெருமதிப்பிற்குரிய தலைவன். உம்முடைய வாழ்நாளுக்கும் உமக்கு உயர்ந்ததொரு புகழ் அளிக்கவல்ல ஒரு செய்தி சொல்லவா?"
அது உத்பாவிற்கு ஆர்வம் ஏற்படுத்தியது. ஹகீம் விவரித்தார். "குரைஷிகளை மக்காவிற்குத் திரும்பச் சொல்லுங்கள். அம்ரிப்னு ஹள்ரமி கொல்லப்பட்டதை இப்பொழுது போருக்கு ஒரு காரணமாய் அவர்கள் புனையப் பார்க்கிறார்கள். முஸ்லிம்களால் கொல்லப்பட்டதற்கும் அவருடைய வணிகப் பொருட்கள் அபகரிக்கப்பட்டதற்கும், நீர் அம்ரிப்னு ஹள்ரமியுடைய நண்பன் என்ற முறையில் குரைஷிகளுக்கு இழப்பீடு தருவதாக அறிவித்து விடும்; போரைத் தவிர்க்கலாம்".
அபூஸுஃப்யான் நலமே மக்கா சென்றடைந்து விட்டதால் உத்பாவிற்குப் போரில் பெரிய நாட்டம் எதுவும் அப்பொழுது இல்லை. அதனால் ஹகீம் முன்னெடுத்து வைத்த வாதத்தின் நியாயம் உரைத்தது. அதன்பின் குரைஷிகளுக்கு மத்தியில் உத்பா சென்று உரை நிகழ்த்தியும், அபூஜஹல் அதை எதிர்த்து செய்த ஏளனத்தால் எதுவும் எடுபடவில்லை. போர் நிகழ்ந்தது. குரைஷிகளின் மாபெரும் தோல்விக்கும் முஸ்லிம்களின் அசகாய வெற்றிக்கும் அது வழிவகுத்தது.
அதன்பின் பல போர்கள், படையெடுப்புகள். எல்லாம் நடந்து முடிந்த இறுதியில் முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றிய போதுதான் ஹகீம் இஸ்லாத்தினுள் நுழைந்தார்.
அது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் மாதம். மக்காவினுள் நுழையும் நாளுக்கு முந்தைய இரவு. நபிகள் தன் தோழர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அதைக் குறிப்பிட்டார்கள். "மக்காவில் நான்கு பேர் இருக்கிறார்கள். உருவ வழிபாட்டில் மிகவும் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்".
"அல்லாஹ்வின் தூதரே, யார் அவர்கள்?" தோழர்கள் கேட்டார்கள்.
"அத்தாப் இப்னு உஸைத், ஜுபைர் இப்னு முத்இம், ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு"
அந்த விருப்பம் வீணாகவில்லை. நிறைவேறியது, முழுவதுமாய் நிறைவேறியது. பின்னர் அந்த நால்வருமே இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.
முஹம்மது நபி மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. மக்காவாசிகள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அறிவிப்பாளர் மிக உரத்தக் குரலில் அவர்களுக்குச் செய்தியொன்றை அறிவித்தார்.
"எவரெல்லாம் 'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மது அவனுடைய தூதர்' என்று சாட்சி பகர்கிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"எவரெல்லாம் கஅபாவின் அருகே வந்தமர்ந்து தங்களுடைய ஆயுதங்களைக் கீழிறக்கி வைக்கிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"எவரெல்லாம் தங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"எவரெல்லாம் அபூஸுஃப்யான் இல்லத்தினுள் தஞ்சமடைகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
"மேலும், எவரெல்லாம் ஹகீம் இப்னு ஹிஸாம் இல்லத்தினுள் தஞ்சமடைகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்"
அந்த அளவிற்கு ஹகீம் கண்ணியப்படுத்தப் பட்டதும் எப்படி அதற்கு மேல் அவரால் இஸ்லாத்தை நிராகரிக்க முடியும்? நுழைந்தார் ஹகீம்.
மக்காவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் அபூஸுஃப்யானின் வீடு மேல்பகுதியிலும், ஹகீமின் வீடு கீழ்ப்பகுதியிலும் இருந்தது. அந்த அறிவிப்பைச் செவியுற்ற மக்கள் பலர் அங்குச் சென்று தஞ்சமடைய, உஹதுப் போரில் கொல்லப்பட்ட ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் உடலைக் குதறி, ஈரலை எடுத்துக் கடித்து வெறியாட்டம் நிகழ்த்திய ஹிந்த் முதற்கொண்டு பலரும் மன்னிக்கப்பட்டனர். வரலாற்றின் சிறப்பான அத்தியாயம் ஒன்று அன்று அங்குப் பதியப்பட்டது.
மக்காவின் வெற்றி நிகழ்ந்து இரு வாரங்கள்தாம் ஆகியிருந்தன. பெரியதொரு படை ஹுனைன் பள்ளத்தாக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான போருக்குத் தயாராவதாய்ச் செய்தியொன்று மக்காவை வந்தடைந்தது. ஹவாஸின் எனும் பதுஉ கோத்திரத்தினர் தகீஃப் எனும் தங்களின் உபகோத்திரத்தினருடன் இணைந்து முஸ்லிம்களை எதிர்த்து எப்படியும் அழித்துக் கட்டிவிடுவதென்று பெரிய படையொன்றைத் திரட்டி, போருக்குத் தயாராகிவிட்டிருந்தனர். மக்காவிலிருந்து பெரியதொரு படையெழுப்பி, அங்குச் சென்று அவர்களை எதிர்கொண்டார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். கடுமையான போர் நிகழ்வுற்று, இறுதியில் முஸ்லிம் படை வெற்றி கண்டது.
அந்த யுத்தம் முடிவுற்றதும் நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமானது. நபிகள் அதனைத் தோழர்களுக்குப் பங்கிட்டு அளித்தார்கள். தன்னுடைய பங்காய்க் கிடைத்ததையும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாய் மக்கா வெற்றிக்குப் பின்னர் புதிதாய் இஸ்லாத்தினுள் நுழைந்த குரைஷிகளுக்கு தாராளமாய் அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்விதத்தில் ஹகீம் இப்னு ஹாஸமிற்கும் நிறைய பங்கு கிடைத்தது. ஆயினும் அவர் நபிகளை அணுகி, மேலும் வேண்டும் எனக் கோர, அவருக்கு நூறு ஒட்டகங்கள் அளிக்கப்பட்டன.
பின்னர் ஹகீமை அழைத்த நபிகள், "ஹகீம். மிகவும் உசத்தியான ஒட்டகங்கள் உமக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை உவப்புடன் ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்வின் அருட்பேறு அந்தச் செல்வத்திற்குக் கிடைத்து, அது மென்மேலும் வளரும். ஆனால் அவற்றைப் பேராசையுடன் நீர் அணுகினால் அவற்றின் மேல் அல்லாஹ்வின் நற்பேறு இல்லாமல் போவதுடன், உண்டும் வயிறு நிறையாத மனிதனைப்போல் நீர் ஆகிவிடுவீர். கீழுள்ள கையைவிட மேலுள்ள கை சிறப்பானது" என்று அறிவுறுத்தினார்கள்.
அதைக் கேட்டார் ஹகீம். அப்படியே உள்வாங்கினார். பிறகு கூறினார். "அல்லாஹ்வின் தூதரே! உம்மை சத்தியத்துடன் அனுப்பி வைத்த அந்த இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். உம்மைத் தவிர இனி நான் யாரிடமும் எதுவும் கேட்கவே மாட்டேன். நான் மரணிக்கும்வரை யார் எது கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்" உணர்ச்சிப் பெருக்கில் சத்தியமிடுவதெல்லாம் சாத்தியம்தான். ஆனால், கடைசி வரை காக்கப்பட வேண்டுமே! முடிந்தா? அதை இறுதியில் பார்ப்போம்.
இஸ்லாத்தில் இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஹகீம் நுழைந்தார். தாமதமாய் இஸ்லாத்தினுள் நுழைந்த அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு மனதில் ஓடிய அதே எண்ணம், அவரைவிடத் தாமதமாய் வந்த ஹகீம் மனதிலும் தோன்றியது.  "எவ்வளவு தவற விட்டு விட்டாய், நற்கருமங்களில் எவ்வளவு பின்தங்கி விட்டாய் ஹகீம்?" என்று அரற்றியது அவரது மனது. நுழைந்த நொடியில் லாப நஷ்டத்ததைச் சரியாக பகுத்துணர முடிந்த மனங்களின் பெரிய ஆச்சரியம் அது!
ஒருநாள் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார் ஹகீம். அதைக் கண்ட அவருடைய மகனுக்கு ஒன்றும் புரியவில்லை.  "தந்தையே ஏன் அழுகிறீர்கள்?"
இங்கு இன்னொன்றும் நாம் கவனிக்க வேண்டும். முந்தைய தோழர்களிடமும் படித்திருக்கிறோம். வீர தீரத்தில் பராக்கிரமசாலியாக திகழும் ஒப்பற்ற போர் வீரர்களான அவர்களுடைய மனதை இஸ்லாம் சரியான முறையில் சென்று ஊடுருவ, அல்லாஹ் என்றதும் அல்லாஹ்வின் விசாரணை என்ற நினைப்பு வந்ததும் புசுக்கென்று கண் கலங்கி அழுகிறார்கள் அவர்கள். எத்தனைமுறை நம் கண்கள், இறைவனை, அவனது விசாரணையை நினைத்துக் கண்ணீர் சிந்தியிருக்கின்றன?
"பல விஷயங்கள். எதை என்று சொல்வேன்," என்றவர் தொடர்ந்தார். "முதலாவது, நான் இஸ்லத்திற்குள் எவ்வளவு தாமதாகமாக வந்தடைந்திருக்கிறேன்? எனக்கு முன்னால், பல ஆண்டுகளுக்கு முன்னரேயே நுழைந்துவிட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இதுவரை ஈட்டி, சேமித்துள்ள நன்மை எவ்வளவு உயரமானது? என்னுடைய சொச்ச நாளுக்கும் பூமி நிறையும் அளவுள்ள தங்கத்தை நான் இஸ்லாத்தின் பாதையில் செலவிட்டாலும் அவர்களுக்கு நான் ஈடாக முடியுமா? அதை நினைத்து அழுகிறேன்"
"பத்ரு, உஹது யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நான் கலந்து கொண்டிருந்தும் அல்லாஹ்வின் கிருபையினால் தப்பிப் பிழைத்தேன். அப்பொழுது எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன் - 'அல்லாஹ்வின் தூதருக்கு எதிராக இந்தக் குரைஷிகளை நான் ஆதரிக்க மாட்டேன்; அவருக்கு எதிராக நான் மக்காவை விட்டு வெளியே நகரக்கூட மாட்டேன்', என்று. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நான் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டேன். என்னால் என்னைத் தடுத்துக் கொள்ளும் உறுதி இல்லாமற் போனது. அதை நினைத்து அழுகிறேன்"
"அதன்பின் ஒவ்வொரு முறையும் என் மனதிற்குள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் குரைஷிகள் மாண்புடன் நோக்கும் மூதாதையர்களைப் பார்த்தேன். அவர்கள் எப்படித் தங்களுடைய பழைய அஞ்ஞான பழக்கத்தில் பற்றிப் பிடித்துக் கொண்டு, தம் கொள்கையில் பிடிவாதமாய் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நானும் அவர்களுடைய அனாச்சாரத்தைப் பின்பற்றி உருவ வழிபாட்டையே தொடர்ந்தேன். அப்படி செய்திருக்கக் கூடாது என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. மூத்தவர்களையும் மூதாதையர்களையும் குருட்டுத் தனமாய்ப் பின்பற்றியதுதான் என்னை அழிவின் விளிம்பு வரை இட்டுச் சென்று விட்டது. என் நன்மையைத் தாமதப்படுத்தி விட்டது. இவ்வளவையும் நினைத்துப் பார்க்கும்போது என்னால் எப்படி அழாமல் இருக்க முடியும்? சொல் மகனே!"
அவர்களுக்கெல்லாம் உறுத்தியெடுத்தது, தவற விட்ட கணங்கள். நற்காரியங்களில் பிந்தி விட்டது, நற்கூலி குறைந்து போனதெல்லாம் எப்பேற்பட்ட நஷ்டம் என்பதை உய்த்துணரும் தூய ஈமான். அதனால் குளமாகி நின்றன கண்கள். பணமாகவும் நகையாகவும் சொத்தாகவும் வாங்கிக் குவித்துவிட்டு, ஏதோ சிறிதைச் சுண்டு விரலில் எடுத்து இறைவழியில் செலவழித்து விட்டாலே தன்னிறைவு அடைந்துவிடும் நம்மைப் போன்றோர் அந்தக் கண்ணீரை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
அவரது ஆழ்மனதில் இஸ்லாம் வெறுமனே நுழையவில்லை. இதயத்தின் ஒரு பகுதியாகவே அது ஆகிவிட்டிருந்தது. அதனால் அழுது முடித்தவர் சூளுரைத்தார். 'முன்னர் இஸ்லாத்திற்கு விரோதமாய்ச் செய்த  ஒவ்வொரு செயலுக்கும் பரிகாரம் காணப் போகிறேன். இஸ்லாத்திற்கு எதிராய்ச் செலவழித்த ஒவ்வொரு துகளுக்கும் பரிகாரமாய் இப்பொழுது இஸ்லாத்தின் பாதையில் செலவழிக்கப் போகிறேன். அது தான் சரி.' அப்படியே செய்ய ஆரம்பித்தார் ஹகீம் இப்னு ஹிஸாம்.
மக்காவில் தாருந் நத்வா என்றொரு இல்லம் இருந்தது. குரைஷிகளுக்கு அது ஒரு பிரசித்திமிக்க இடம். அங்குதான் இஸ்லாத்திற்கு எதிரான குலத்தாரெல்லாம் ஒன்று கூடுவார்கள். அவர்களின் மூத்தோரும் தலைவர்களும் நபிகளுக்கு எதிராய் அங்குக் கூடித்தான் சதித் திட்டம் தீட்டுவார்கள். நிகழ்கால் ஐ.நா. கட்டடம்போல மக்காவுக்கு தாருந்நத்வா. அந்த இல்லம் ஹகீமின் வசம் வந்து சேர்ந்தது. தனக்கும் தன்னுடைய கடந்த கசந்த காலத்திறகும் இடையில் பலமான தடுப்பொன்றை ஏற்படுத்த விழைந்தார் ஹகீம். என்ன செய்யலாம் என்று நினைத்தவருக்கு அந்த யோசனை உதித்தது. அதனால் அந்த வீட்டை இலட்சம் திர்ஹங்களுக்கு விற்றார்.
அது குரைஷியர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இடம்; அவர்களது மாண்பின் அடையாளம். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற குரைஷி இளைஞன் ஒருவன் அவரிடம் கேட்டான், "குரைஷியரின் குலப்பெருமையை விற்றுவிட்டீர்களே?"
"ஹஹ்! இறுமாப்புக்கான காலமெல்லாம் சென்று விட்டது மகனே. இறையச்சம்! இனிமேல் அதைத் தவிர வேறெதுவுமே முக்கியமில்லை. அந்த வீட்டை விற்று வந்த பணமிருக்கிறதே அதை இஸ்லாத்தின் பாதையில் நற்காரியங்களுக்கு அளித்து விடப்போகிறேன். அதைக் கொண்டு எனக்கு மறுமையில் அங்கு வீடு கிடைக்கலாம்"
குரைஷியர்களுக்குத் தெரிவித்தார், "இதோ பாருங்கள். உங்கள் எல்லோரையும் சாட்சியாக வைத்துக் கூறுகிறேன், அந்தப் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கிறேன்"
அந்தக் காலத்திலேயே அதன் மதிப்பு இலட்சம் திர்ஹங்கள் என்றால் இன்று அதன் மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். அவ்வளவும் தானமளிக்கப்பட்டது.
ஒருநாள் ஹகீம், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்: "நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் சில நற்காரியங்கள் செய்திருக்கிறேன். அவையெல்லாம் என் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படுமா?"
ஹகீம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்முன் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார். நூறு ஒட்டகங்களை அறுத்து அதன் இறைச்சியை மக்களுக்கு தானமாய்ப் பகிர்ந்து அளித்திருந்தார்.
"நீர் இஸ்லாத்தினுள் அவை அனைத்துடனும் வந்து விட்டீர் ஹகீம்" என்று பதில் கூறினார்கள் நபிகள்.
இருந்தாலும் இப்பொழுது அவற்றை மீண்டும் யோசித்தார் ஹகீம். இஸ்லாத்தினுள் நுழைந்தபின் தனது முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. தன்னுடன் நூறு ஒட்டகங்களைச் சிறப்பாய் அலங்கரித்து உடனழைத்துச் சென்றார். அவற்றையெல்லாம் அறுத்து ஸதக்கா தர்மமாய் அதன் இறைச்சி முழுவதையும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டார்.
அடுத்ததொரு ஹஜ் வந்தது. இம்முறை நூறு அடிமைகளைத் தன்னுடன் அழைத்து வந்து அவர்களுக்கெல்லாம் விடுதலையளித்தார். அவர்கள் கழுத்துகளில் வெள்ளியில் கழுத்தணி ஒன்று இருந்தது. 'அல்லாஹ்விற்காக ஹகீம் பின் ஹிஸாமினால் இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்' என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது. விடுதலை பெற்ற அவ்வடிமைகள் அந்த வெள்ளி ஆபரணத்தை விற்று, தங்கள் வாழ்க்கையை சுயமே துவங்கிக்கொள்ள அத்தகைய ஏற்பாடு.
ஆச்சா?
அதற்கு அடுத்த ஹஜ் வந்தது. இப்பொழுது தன்னுடன் ஆயிரம் செம்மறியாடுகளை ஓட்டி வந்தவர், அவற்றையெல்லாம் மினாவில் பலிகொடுத்து, அனைத்து இறைச்சியையும் முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
அவர் மனசு முழுவதும் போட்டி. மற்றத் தோழர்களுடன் போட்டி. ஏதாவது செய்து அவர்களுக்கு இணையாய் நற்கூலியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற, மார்க்கம் அனுமதித்த ஆரோக்கியப் போட்டி.
இங்ஙனமிருக்க, ஹுனைன் போரின்போது நபிகளிடம் சத்தியம் செய்தார் என்று பார்த்தோமல்லவா? அபூபக்ரு (ரலி) கலீஃபாவாக இருந்த காலத்தில் கருவூலத்திலிருந்து ஹகீமிற்கு நிறைய பங்கு ஒதுக்கப்பட்டது. ஆள் அனுப்பினார் கலீஃபா. "ஹகீம், கொஞ்சம் ஒரு நடை இங்கு வந்து உங்கள் பங்குச் செல்வத்தைப் பெற்றுச் செல்லுங்கள்" புறங்கையால் அவற்றை வெறுத்து ஒதுக்கியவர் "அதெல்லாம் வேண்டாம்; ஆளை விடுங்கள்," என்று பதில் அனுப்பி விட்டார்.
பின்னர் உமர் (ரலி) கலீஃபாவாக இருந்த காலத்திலும் அப்படியே நிகழ்ந்தது. ஹகீமிற்கு உண்டான பணமும் செல்வமும் கருவூலத்தில் தேங்கியிருந்தன.  அழைத்து அழைத்துப் பார்த்தார் உமர். ஹகீம் மசியவேயில்லை. உமருக்கு அது பிரச்சனையாக இருந்தது. அவரவருக்கும் அவரவர் கணக்கு நேராக வேண்டும். அதில் படு கண்டிப்பாக இருந்தார்கள் அவர்கள். மறுமையின் கேள்வி அவர்களுக்கு மிகப் பிரதானம். கடைசியில் ஒருநாள் உமர் மக்கள் மத்தியில் எழுந்து சென்றார். "இதோ பாருங்கள். ஹகீமிற்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ளும்படி நான் கொடுத்தும் ஹகீம் நிராகரித்து விட்டார். இதற்கெல்லாம் நீங்களே சாட்சி" என்று அறிவித்து விட்டார்.
அப்படியேதான் வாழ்ந்தார் ஹகீம். பின்னர் ஏறக்குறைய தன்னுடைய 120ஆவது வயதில் அவர் மரணித்ததாக ஹதீஸ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஹகீம் பின் ஹிஸாம் ‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ"

25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி

எந்த அமலும் வீணாகாது

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,

"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்."(திருமறை 18:30)

விளக்கவுரை:
சில சமயம் நமக்கு நாம் செய்கின்ற அமல்களால் நேரம் வீணாவதைத் தவிர வேறெதுவும் பயனில்லை என்றே தோன்றும். உதாரணத்திற்கு நீங்கள் யாரேனும் ஒரு முஸ்லிமல்லாதவருக்கு தாவாஹ் (இஸ்லாமிய அழைப்புப் பணி) செய்கின்றீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் அந்த மனிதரிடம் காணாமல் போகலாம் அல்லது அவர் அத்தனை காலமும் செவிமடுக்காதவரைப் போன்றே தோன்றலாம். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில், அல்லாஹ்வின் முன் எண்ணிக்கை பெரிதல்ல, நிய்யத்துதான் முக்கியம். வெற்றி என்பது நேர்மையான நிய்யத்தைக் கொண்டே வரும். தவிர உங்கள் அமல் வீணும் ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்," என்னை வானுலகிர்கு கொண்டு செல்லும்போது நான் ஒரு நபியினை கண்டேன், அவருடன் பத்து பேர் மட்டுமே (ந‌ம்பிக்கையாளர்கள்) இருந்தனர்; ஒரு நபியுடன் ஐந்து பேர் மட்டுமே, ஒரு நபியுடன் இரண்டு பேர் மட்டுமே, இன்னும் சில நபிமார்களுடன் ஒரே ஒரு நம்பிக்கையாளனும், இன்னும் சில நபிமார்கள் ஒரு நம்பிக்கையாளன் கூட தம்முடன் இல்லாத நிலையில் இருந்தனர்." இந்த ஹதீத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த நபிமார்கள் தோல்வியடையவில்லை, மாறாக அவர்களின் மக்கள்தாம் அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர். இதுபோலவே அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா உங்களின் எந்த அமலையும் வீணாக விடமாட்டான். மாறாக, உங்களின் முயற்சிகளுக்கு அதற்குரிய கூலியைவிட மேலான‌தையே தருவான்.

என்னுரை:
நம்மில் பலபேரும் செய்கின்ற தவறையே இங்கே இமாமவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நம்முடைய கூலியை உடனே எதிர்பார்ப்பதும், நாம் செய்த அமலுக்கான பாதிப்பையோ அதனால் வரவேண்டிய மாற்றத்தையோ கொண்டு நம்மின் அமலை எடை போடுவது நம‌க்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் உண்மை அதுவல்ல. அல்லாஹ் மட்டுமே நம்மின் உண்மையான, நேர்மையான அமலுக்கு கூலி என்ன என்பதை அறிவான். ஒரு விஷயத்தை நாம் உற்று நோக்கினால் நபிமார்களின் சரிதங்களிலிருந்து எத்தனையோ அத்தாட்சிகளைக் காணலாம். நபி இப்றாஹீம்(அலைஹ்), அவர்களின் அழைப்புக்கு அவரின் தந்தை செவிமடுக்கவே இல்லை. நபிகள் நாயகத்தை (ஸல்) அவரின் தாய் தந்தைக்குப் பிறகு அவரை பொறுப்பாய் பார்த்துக் கொண்ட அவரின் சின்ன தந்தையார் அபூதாலிப் கூட‌ மரணிக்கும் வரை நபிகளாரின் அழைப்பை ஏற்கவில்லை. லூத் நபியின் காலத்தில் அவரின் மனைவியே ஓரிறை வழிபாடை ஏற்க மறுத்தார். இன்னும் பற்பல அத்தாட்சிகள் கிட்டிடும் நமக்கு. ஆனால் எந்த நபியையும் அல்லாஹ் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர் என்று கூறவில்லை. மாறாக அவர்களை கண்ணியத்துடனும் மிக்க மரியாதையுடனுமே தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். தவிர அவர்களின் கூலியை எள்ளவுக்கும் குறைக்க மாட்டான். நபிமார்களுக்கு மட்டுமல்ல. அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிர்நோக்கி எந்த முஃமின் ஒரு நல்லமலை செய்தாலும் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் அதற்கான கூலியை குறையாமல் தருவான். நாம் அத்தகைய நேர்மையான நிய்யத்துக்களுடன் அமல் செய்வதில் மட்டும் நம் நாட்டத்தை திசை திருப்புவோமாக.
read more "25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி"