பக்கங்கள்

September 3, 2010

25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி

எந்த அமலும் வீணாகாது

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,

"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்."(திருமறை 18:30)

விளக்கவுரை:
சில சமயம் நமக்கு நாம் செய்கின்ற அமல்களால் நேரம் வீணாவதைத் தவிர வேறெதுவும் பயனில்லை என்றே தோன்றும். உதாரணத்திற்கு நீங்கள் யாரேனும் ஒரு முஸ்லிமல்லாதவருக்கு தாவாஹ் (இஸ்லாமிய அழைப்புப் பணி) செய்கின்றீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் அந்த மனிதரிடம் காணாமல் போகலாம் அல்லது அவர் அத்தனை காலமும் செவிமடுக்காதவரைப் போன்றே தோன்றலாம். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில், அல்லாஹ்வின் முன் எண்ணிக்கை பெரிதல்ல, நிய்யத்துதான் முக்கியம். வெற்றி என்பது நேர்மையான நிய்யத்தைக் கொண்டே வரும். தவிர உங்கள் அமல் வீணும் ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்," என்னை வானுலகிர்கு கொண்டு செல்லும்போது நான் ஒரு நபியினை கண்டேன், அவருடன் பத்து பேர் மட்டுமே (ந‌ம்பிக்கையாளர்கள்) இருந்தனர்; ஒரு நபியுடன் ஐந்து பேர் மட்டுமே, ஒரு நபியுடன் இரண்டு பேர் மட்டுமே, இன்னும் சில நபிமார்களுடன் ஒரே ஒரு நம்பிக்கையாளனும், இன்னும் சில நபிமார்கள் ஒரு நம்பிக்கையாளன் கூட தம்முடன் இல்லாத நிலையில் இருந்தனர்." இந்த ஹதீத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த நபிமார்கள் தோல்வியடையவில்லை, மாறாக அவர்களின் மக்கள்தாம் அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர். இதுபோலவே அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா உங்களின் எந்த அமலையும் வீணாக விடமாட்டான். மாறாக, உங்களின் முயற்சிகளுக்கு அதற்குரிய கூலியைவிட மேலான‌தையே தருவான்.

என்னுரை:
நம்மில் பலபேரும் செய்கின்ற தவறையே இங்கே இமாமவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நம்முடைய கூலியை உடனே எதிர்பார்ப்பதும், நாம் செய்த அமலுக்கான பாதிப்பையோ அதனால் வரவேண்டிய மாற்றத்தையோ கொண்டு நம்மின் அமலை எடை போடுவது நம‌க்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் உண்மை அதுவல்ல. அல்லாஹ் மட்டுமே நம்மின் உண்மையான, நேர்மையான அமலுக்கு கூலி என்ன என்பதை அறிவான். ஒரு விஷயத்தை நாம் உற்று நோக்கினால் நபிமார்களின் சரிதங்களிலிருந்து எத்தனையோ அத்தாட்சிகளைக் காணலாம். நபி இப்றாஹீம்(அலைஹ்), அவர்களின் அழைப்புக்கு அவரின் தந்தை செவிமடுக்கவே இல்லை. நபிகள் நாயகத்தை (ஸல்) அவரின் தாய் தந்தைக்குப் பிறகு அவரை பொறுப்பாய் பார்த்துக் கொண்ட அவரின் சின்ன தந்தையார் அபூதாலிப் கூட‌ மரணிக்கும் வரை நபிகளாரின் அழைப்பை ஏற்கவில்லை. லூத் நபியின் காலத்தில் அவரின் மனைவியே ஓரிறை வழிபாடை ஏற்க மறுத்தார். இன்னும் பற்பல அத்தாட்சிகள் கிட்டிடும் நமக்கு. ஆனால் எந்த நபியையும் அல்லாஹ் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர் என்று கூறவில்லை. மாறாக அவர்களை கண்ணியத்துடனும் மிக்க மரியாதையுடனுமே தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். தவிர அவர்களின் கூலியை எள்ளவுக்கும் குறைக்க மாட்டான். நபிமார்களுக்கு மட்டுமல்ல. அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிர்நோக்கி எந்த முஃமின் ஒரு நல்லமலை செய்தாலும் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் அதற்கான கூலியை குறையாமல் தருவான். நாம் அத்தகைய நேர்மையான நிய்யத்துக்களுடன் அமல் செய்வதில் மட்டும் நம் நாட்டத்தை திசை திருப்புவோமாக.

2 comments:

  1. //அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிர்நோக்கி எந்த முஃமின் ஒரு நல்லமலை செய்தாலும் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் அதற்கான கூலியை குறையாமல் தருவான்.//

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், பதிவினை படித்து அதற்கு பின்னூட்டமிட்டதற்கும் மிக்க நன்றி சரவணன். மீண்டும் வருகை தரவும்.

    ReplyDelete